பட மூலாதாரம், Getty Images
பூமிக்கு ஒரு புதிய துணை கிடைத்துள்ளதாக வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், அதாவது ஒரு கூடுதல் ‘நிலவு’, இது 2083ம் ஆண்டு வரை சுற்றுவட்டப் பாதையில் இருக்கும். ஆனால், சூரியனை சுற்றிவரும் பூமிக்கு அருகே இருக்கும் ஒரேயொரு விண்வெளி பொருள் இது மட்டுமல்ல.
2025 PN7 என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள், பூமியுடன் கிட்டத்தட்ட ஒரே ஒத்திசைவுடன் பல பத்தாண்டுகளாக பயணித்து வருகிறது.
“நிலவைப் போன்று இருக்கும் இவை (quasi-moons) சுவாரஸ்யமானவை, ஏனெனில் இவை நிலவு பூமியை சுற்றிவருவது போன்று பூமியை சுற்றி வருவதில்லை, அவை பூமிக்கு அருகே இருக்கும் அவ்வளவுதான்,” என பிரிட்டனின் வேல்ஸில் உள்ள ஃபிஃப்த் ஸ்டார் லேப்ஸை சேர்ந்த வானியலாளர் முனைவர் ஜெனிஃபர் மில்லார்ட் கூறுகிறார்.
இந்த சிறுகோள் 20 மீட்டர் நீளம் கொண்டது.
“அது பெரியதல்ல – சிறிய அலுவலக கட்டடத்தைப் போன்றது. இது 60 ஆண்டுகளாக இருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம், மேலும் அதன் தற்போதைய சுற்றுப்பாதையை கணக்கிட்டதன் அடிப்படையில், அடுத்த 60 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று கருதுகிறோம்.” என மில்லார்ட் பிபிசியிடம் கூறினார்.
இது ஹவாயில் உள்ள பேன் – ஸ்டார்ஸ் (Pan-STARRS) கண்காணிப்பகத்தால் கண்டறியப்பட்டது.
இந்த கண்காணிப்பகம் சிறுகோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் போன்று பூமிக்கு அருகிலுள்ள விண்வெளி பொருட்கள் (NEOs-Near Earth Objects) குறித்து கண்டறியும் தொலைநோக்கிகளை கொண்டுள்ளது.
இத்தகைய நிலவை போன்று தோன்றும் எட்டு சிறுகோள்களும் (quasi-moons) அறியப்படாத எண்ணிக்கையிலான சிறிய நிலவுகளும் (சிறுகோள்) மற்றும் சாத்தியமான இரண்டு கண்ணுக்கு புலப்படாத நிலவுகளும் (ghost moons) உள்ளன. ஆனால், பூமியின் ஒரே உண்மையான துணைக்கோளான நிலவுக்கு இவையெதுவும் போட்டியாக இருக்க முடியாது.
நிலவை போன்ற விண்வெளி பொருட்கள்
பூமி குறித்த நம்முடைய பார்வையிலிருந்து இவற்றை அணுகும்போது, இவை நிலவை போன்றே பூமியை சுற்றிவருவதாக தோன்றுவதால் இவை quasi-moons என்ற பெயரை பெற்றுள்ளன. ஆனால், இவை பூமியுடன் இணைந்து சூரியனை சுற்றும் சிறுகோள்கள் என உன்னிப்பாக கவனிக்கும்போது தெரியும்.
“இவை சூரியனை சுற்றும் வேளையில், பூமியை போன்று ஒரேமாதிரியான பாதையில் நகர்கிறது. பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பதால், இவை பூமியை சுற்றுவதாக நமக்கு தோன்றுகிறது. சில சமயங்களில் அவை நமக்கு முன்பாகவும் சில சமயங்களில் பின்னாலும் நகர்கின்றன, ஆனால், அவை உண்மையில் ஈர்ப்பு விசையால் இணைக்கப்படவில்லை, அதுதான் வித்தியாசம்,” என ஜெனிஃபர் மில்லார்ட் விளக்குகிறார்.
ஆனால், இந்த சிறுகோள்கள் அதன் சுற்றுப்பாதையை கண்டுபிடிக்கும்போது, பூமியின் ஈர்ப்புவிசையால் சிறிது பாதிக்கப்பட்டு, அதற்கு நெருக்கமாக கொண்டு வருகிறது.
இத்தகைய சிறுகோள்கள் அனைத்தும் தற்காலிகமானவை, அதன் சுற்றுப்பாதை பல தசாப்தங்கள் அல்லது ஒரு நூற்றாண்டு கூட நீடிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
சிறிய நிலவுகள்
மாறாக, சிறிய நிலவுகள் (minimoon) என்பது, உண்மையில் கிரகத்தைச் சுற்றிவரும் பொருள்.
இத்தகைய சிறிய நிலவுகள் என்பது பூமியின் ஈர்ப்புவிசையால் தற்காலிகமாக ஈர்க்கப்படும் சிறுகோள்கள், அவை சூரிய குடும்பம் உருவாக்கத்தின் போது உருவான எச்சங்கள் அல்லது மற்ற விண்வெளி கழிவுகளாக இருக்கலாம், மேலும் அவை சுற்றுப்பாதையில் ஓராண்டுக்கும் குறைவாகவே நீடிக்கும்.
அவை கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமான அளவுக்கு சிறியவை, இதுவரை நான்கு சிறிய நிலவுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் எதுவும் தற்போது பூமியை சுற்றிவரவில்லை.
2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசியாக ஓர் சிறிய நிலவு கண்டுபிடிக்கப்பட்டது. 2024 PT5 என அறியப்பட்ட அந்த சிறுநிலவு, 10 மீட்டர் நீளம் கொண்ட சிறுகோளாகும்.
அது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டிலிருந்து (Arjuna asteroid belt) வந்திருக்கலாம் என கருதப்பட்டது. இந்த பெல்ட், பூமி சூரியனைச் சுற்றி வருவது போன்ற ஒரு சுற்றுப்பாதையைப் பின்பற்றும் விண்வெளிப் பாறைகளின் குழுவாகும்.
ஆனால், மேற்கொண்டு ஆராய்ந்ததில், 2024 PT5 உண்மையில் நீண்ட காலத்திற்கு முன் நிலாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறிய பகுதியாக இருக்கலாம் என, அதன் வேதியியல் கலவையை ஆராய்ந்ததில் பரிந்துரைக்கப்பட்டது.
அது, எங்கிருந்து வந்ததோ அங்கு திரும்புவதற்கு முன்பாக, பூமியின் அருகில் சில மாதங்களே நீடித்தது.
பட மூலாதாரம், Getty Images
கண்ணுக்கு புலப்படாத நிலவுகள்
இந்த மூன்று வகை நிலவுகளில் கண்ணுக்கு புலப்படாத நிலாக்கள் (Ghost moons) மிகவும் மர்மமானவை.
பூமியின் சுற்றுப்பாதையை பகிர்ந்துகொள்ளும், பூமி சூரியனைச் சுற்றி வரும்போது அதற்கு முன்னால் அல்லது பின்னால் இருக்கும் சுழலும் தூசி மேகங்கள் என அவை அறியப்பட்டன. ஆனால், அவை உண்மையில் இருக்கின்றனவா என்பது குறித்து அறிவியல் ரீதியாக இன்னும் பரந்தளவில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
ஆனால், மில்லார்ட் இந்த கருத்தை நம்பகமானதாக கருதுகிறார்.
“விண்வெளியில் நிறைய தூசி இருக்கும்,” என்கிறார் அவர்.
“கிரகங்களுக்கு இடையேயான தூசித் துகள்கள் உள்ளன, எனவே நிலையான ஈர்ப்பு விசை புள்ளியால் ஈர்க்கப்பட்டு சில தூசி துகள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கலாம் என்பது என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை.”
quasi-moons அல்லது சிறு நிலவுகள் ஆபத்தானவையா?
வானியல் ரீதியாக இவை பூமிக்கு அருகில் இருந்தாலும், இவை ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஒருபோதும் நெருக்கமாக வந்ததில்லை.
ஒப்பீட்டளவில் நெருக்கமாக வந்தபோது கூட, பலமுறை அவை நிலவை விட தொலைவிலேயே இருந்துள்ளன.
வானியல் ரீதியில் இது அருகில் இருப்பதாக கூறினாலும், நடைமுறையில் அதுகுறித்து கவலைப்பட எதுவுமில்லை.
“நமக்கு நெருக்கமாக அவை வந்தாலும் அது மிகவும் மெதுவானதாகவே இருக்கும், எனவே அவை நெருக்கமாக வந்தால், அந்த எச்சரிக்கையை சமாளிக்க நமக்கு அதிக நேரம் இருக்கும்.” என்கிறார் மில்லார்ட்.
இத்தகைய நிலவுகள் மற்ற கோள்களில் உள்ளனவா?
பட மூலாதாரம், Getty Images
இத்தகைய தெளிவற்ற, பிடிபடாத சிறுகோள்களை காட்டும் அளவுக்கு கூர்திறன் கொண்டதாக சமீப தசாப்தங்களில் தான் தொலைநோக்கிகள் மாறியுள்ளன.
தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், கணினி நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தாலும், அவற்றின் நகர்வுகளை மாதிரியாக்குவதை சாத்தியமாக்கியுள்ளன, மேலும் அந்த மர்மமான பொருட்கள், நிலாவை போன்ற விண்வெளி பொருள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
“இது வழக்கத்திற்கு மாறானது அல்ல, ஆனால் கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமானவை,” என்கிறார் மில்லார்ட். “பூமிக்கு அருகே அவற்றை கண்டுபிடிப்பது கடினமானது என்றால், சூரிய குடும்பத்தின் மற்ற பகுதிகளில் அவற்றை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை நினைத்துப் பாருங்கள்.”
வியாழன், வெள்ளி, சனி, நெப்டியூன் மற்றும் புளூட்டோ ஆகிய கோள்களை சுற்றியும் இத்தகைய நிலவு போன்ற சிறுகோள்கள் கண்டறியப்பட்டுள்ளன, எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக கண்டறியப்படலாம்.
“சூரிய குடும்பம் இன்னும் செயல்திறனுடன் உள்ளது மேலும் அது ஆற்றல் வாய்ந்த ஓரிடம்,” என கூறுகிறார் மில்லார்ட். “அது நிலையான ஒன்று அல்ல, எல்லாமும் தொடர்ந்து நகர்கின்றன.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
