பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணி 22 பந்துகள் மீதமிருக்கையில் 177 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஆர்பிசி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் ஹேசல்வுட், க்ருணால் பாண்டியா, சூயஸ் சர்மா மூவரையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும், இவர்கள் 3 பேரும் எடுத்த விக்கெட் ஆட்டத்தையே புரட்டிப்போட்டது. பேட்டிங்கில் அதிரடி வீரர் பில் சால்ட்(56), விராட் கோலி(59), பட்டிதார்(34) ஆகியோரின் ஆட்டம் வெற்றியை எளிதாக்கியது.
இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் தனது பேட்டால் ஸ்டம்பை உரசிய போதிலும் கூட நடுவர்கள் அவுட் கொடுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்.
சுனில் நரைன் – ரஹானே அதிரடி
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு டீகாக் ஆட்டமிழந்தபின் புதிய கேப்டன் ரஹானே, சுனில் நரைன் இருவரும் சேர்ந்து அதிரடியாக ஆடினர். ரஹானே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிஎஸ்கேயில் இருந்தபோது எந்தமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ அதை போன்ற ஆக்ரோஷம் நேற்றும் இருந்தது.
ரஹானே, நரைன் இருக்கும் வரை பவர்ப்ளேயில் கொல்கத்தா ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது, 9.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ரஹானே 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுனில் நரைனும் தனது பங்குக்கு சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பந்துவீச்சை சிதறவிட்டார். 10 ஓவர்கள் வரை ஆட்டம் கொல்கத்தாவின் கைகளில்தான் இருந்தது.
ஆனால், 10-வது ஓவரில் சுனில் நரேன், 11வது ஓவரில் ரஹானே ஆட்டமிழந்தபின் ஆட்டமே தலைகீழாகத் திரும்பியது. இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பைத் தவிர்த்து வேறு எந்த பார்ட்னர்ஷிப்பும் கொல்கத்தாவில் அமையவில்லை. 107 ரன்களுக்கு ஒரு விக்கெட் என வலுவாக இருந்த கொல்கத்தா அணி, அடுத்த 67 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 10-வது ஓவரில் இருந்து 16-வது ஓவர் வரை ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் கொல்கத்தா இழந்தது தோல்விக்கு மிகப்பெரிய காரணம்.
அதிலும் நடுவரிசையில் வெங்கடேஷ் அய்யர்(6), ரிங்குசிங்(12), ரஸல்(4) என 3 முக்கிய பேட்டர்களும் ஏமாற்றியது, கொல்கத்தாவை தோல்வியில் தள்ளியது. ரஹானே, நரைன் இருந்தபோது, ஸ்கோர் 200 ரன்களைக் கடக்கும் என கணிக்கப்பட்டது, ஆனால், 174 ரன்களில் ஆட்டம் முடிந்தது. ரகுவன்ஷி 30 ரன்களை சேர்த்தார்.
ஹேசல்வுட் அபார பந்துவீச்சு
ஹேசல்வுட் மீது நம்பிக்கை வைத்து ஆர்சிபி வாங்கியதற்கு அவர் கைங்கர்யம் செய்துவிட்டார். பேட்டர்கள் ஆட முடியாத பவுன்ஸ், லைன் லெத்தில் மாறாத பந்துவீச்சு என திக்கமுக்காட செய்தார். ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்ட ஹேசல்வுட், பவுன்சர்களை வீசி கொல்கத்தா பேட்டர்களை திணறவிட்டார்.
ஹேசல்வுட் தனது 4 ஓவர்களில் 16 டாட் பந்துகளை வீசியதுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே குயின்டன் டீகாக் தூக்கி, கடைசி ஓவரில் ஹர்சித் ராணா விக்கெட்டையும் ஹேசல்வுட் வீழ்த்தினார்.
பட மூலாதாரம், Getty Images
நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசிய போதும் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது ஏன்?
சுனில் நரைன் – ரஹானே ஜோடி அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த வேளையில், 8-வது ஓவரை ராசிக் சலாம் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ஆஃப் சைடுக்கு வெளியே, அதிக உயரத்தில் செல்ல அந்த பந்தை கள நடுவர் ‘வைட்’ என்று அறிவித்தார். அதேநேரத்தில், சுனில் நரைனின் பேட்டானது ஸ்டம்ப் மீது லேசாக உரசியதில் பெய்ல்ஸ்கள் கீழே விழுந்தன.
இதையடுத்து, ஹிட் விக்கெட் முறையில் நரைனுக்கு ஆர்சிபி அணி அவுட் கேட்டது. ஆனால், அதனை நடுவர் நிராகரித்துவிட்டார். இதனால் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் அதிருப்தி அடைந்ததை அவரது முகம் வெளிக்காட்டியது. ஸ்டம்புகளை பேட்டால் உரசி பெய்ல்ஸ் கீழே விழுந்தும் கூட சுனில் நரைன் அவுட் இல்லை என்று நடுவர்கள் அறிவித்தது ஏன்?
எம்சிசி விதி 35.1.1-ன் படி, ஒரு பவுலர் அந்த பந்தை வீசத் தொடங்கிய பிறகோ அல்லது பந்தை எதிர்கொள்ளும் போதோ பேட்டர் தனது உடலாலோ, பேட்டாலோ ஸ்டம்பை உரசி பெய்ல்ஸ் கீழே விழுமானால் அவர் ஹிட் விக்கெட் முறையில் அவுட் என்று அறிவிக்கப்படுவார்.
சுனில் நரைனைப் பொருத்தவரை, பந்து வைட் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் அதனை விளையாடுவதற்குரிய சரியான பந்தாக கணக்கில் கொள்ள முடியாது. ஆகவே, ஹிட் விக்கெட் முறையில் அவுட் என்ற விதி இதற்குப் பொருந்தாது.
பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா தவறவிட்ட பில்சால்ட்
தொடக்க ஆட்டக்காரர் பில்சால்ட்டை ஏலத்தில் தக்கவைக்க தவறிவிட்டோம் என்று கொல்கத்தா நிர்வாகம் நேற்று இவரின் அதிரடியைப் பார்த்த பின் உணர்ந்திருக்கும். கொல்கத்தா அணி கடந்த சீசனில் கோப்பையை வெல்ல பில்சால்ட் காரணமாக இருந்தார் என்று நம்பப்படும்போது, எப்படி இவரை ஏலத்தில் தக்கவைக்காமல் இருந்தது எனத் தெரியவில்லை. கொல்கத்தா அணியில் இருந்தபோது சால்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 185, அவரின் சராசரி 58 ஆக இருந்தது. இப்படிப்பட்ட வீரரை கொல்கத்தா தக்கவைக்காமல் தவறுசெய்துவிட்டதாக பலரும் கருதுகின்றனர்.
கொல்கத்தாவின் பந்துவீச்சை முதல் பந்திலிருந்து பில் சால்ட் வெளுத்து வாங்கினார். வேகப்பந்துவீச்சை துவம்சம் செய்கிறார் என வருண் சக்ரவர்த்தியை கொண்டு வந்தால் முதல் ஓவரிலேயே சிக்ஸர், பவுண்டரி என 20 ரன்களை விளாசி வருணை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். விராட் கோலியும் சிக்ஸர், பவுண்டரி என துவம்சம் செய்யவே பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்தது, 3.4 ஓவர்களில் 50 ரன்களையும் எட்டியது.
அரோரா, ஜான்ஸன், ராணா என ஒருவரின் பந்துவீச்சையும் சால்ட் விடவில்லை. அதிரடியாகஆடிய சால்ட் 25 பந்துகளில் அரைசதம் எட்டினார். 36 பந்துகளில் 56 ரன்கள் (9பவுண்டரி, 2 சிக்ஸர்) சேர்த்திருந்த சால்ட், வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கோலி, சால்ட் கூட்டணி 95 ரன்கள் சேர்த்தனர்.
பட மூலாதாரம், Getty Images
விராட் விளாசல்
விராட் கோலி கடந்த இரு ஐபிஎல் சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்து சிறப்பாக ஆடினாலும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் மீது தொடர்ந்து விமர்சனம் இருந்தது. அடித்து ஆட வேண்டிய இடத்தில் ஆடாமல், மெதுவாக பேட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது, ஸ்ட்ரைக் ரேட்டும் கடந்த இரு சீசன்களில் பெரிதாக இல்லை.
ஆனால், இந்த சீசனுக்கு கோலி தீர்மானத்துடனே களத்துக்கு வந்துள்ளார் எனத் தெரிந்தது. வைவப் அரோரா வீசிய ஓவரில் கோலி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அதன்பின் ஸ்பென்சர் ஜான்ஸன் வீசிய ஓவரில் ஸ்ட்ரைட் திசையிலும், லாங்ஆனிலும் இரு சிக்ஸர்களை கோலி பறக்கவிட்ட போது, கோலி ஏதோ தீர்மானத்துடன் வந்துவீட்டார் எனத் தெரிந்தது.
அது மட்டுமல்லாமல் வருண் சக்ரவர்த்தி, நரேன் பந்துவீ்ச்சில் இரு ஸ்வீப் ஷாட்களில் பவுண்டரியும், ஒரு சிக்ஸரையும் கோலி விளாசினார்.
பட மூலாதாரம், Getty Images
“சேஸிங் மாஸ்டர்” என்று கோலியை அழைப்பதுண்டு அதற்கு ஏற்றார்போல் நேற்று ஆர்சிபி அணியை வழிநடத்தினார். இந்த முறையாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற தீர்மானம் கோலியின் ஆட்டத்தில் தெரிந்தது, 30 பந்துகளில் அரைசதம் அடித்த கோலி, 36 பந்துகளில் 56 ரன்களுடன்(4 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் 163 ஸ்ட்ரைக் ரேட்டுடன் களத்தில் இருந்தார்.
கொல்கத்தா அணியைப் பொருத்தவரை, பந்துவீச்சில் நரைன், வருண் பந்துவீச்சுக்கு ஏற்றபடி எதிரணி பேட்டர்கள் நன்கு வியூகம் அமைத்து வந்ததை கொல்கத்தா அணி எதிர்பார்க்கவில்லை. ஆந்த்ரே ரஸலுக்கு கேப்டன் ரஹானே ஒரு ஓவர் கூட வழங்கவில்லை.
வைவப் அரோரா, ஜான்ஸன் இருவரும் சேர்ந்து 5 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் ஒவருக்கு 13 ரன்கள் வீதம் வாரி வழங்கினர்.
திருப்புமுனை நாயகன்
இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருது க்ருணால் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. 4 ஓவர்கள் 29 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை க்ருணால் பாண்டியா வீழ்த்தினார். முதல் ஓவரில் 15 ரன்கள் வழங்கிய க்ருணால் பாண்டியா மனம் தளரவில்லை, நெருக்கடியாகப் பந்துவீசி அடுத்த 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். கொல்கத்தா நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரஹானே என முக்கியமான 3 விக்கெட்டுகளை வெளியேற்றி திருப்புமுனை ஆளித்தது க்ருணால் பாண்டியாதான்.
க்ருணால் பாண்டியா எடுத்துக் கொடுத்த இந்த 3 விக்கெட் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் ஆர்சிபியின் கரங்களில் ஒப்படைத்தது.11வது ஓவரில் ரஹானே, 13-வது ஓவரில் வெங்கடேஷ், 15-வது ஓவரில் ரிங்கு சிங் என க்ருணால் பாண்டியா தனது கடைசி ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட்டைச் சாய்த்து திருப்புமுனை ஏற்படுத்தினார்.
ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 107 ரன்களுக்கு ஒரு விக்கெட் என வலுவாக இருந்து, 200 ரன்களுக்கு மேல் ஸ்கோரை எட்டும் எனக் எதிர்பார்க்கப்பட்டது. ரஹானேவும், சுனில் நரைனும் சேர்ந்து ஆர்சிபி பந்துவீச்சை வறுத்து எடுத்தனர். முதல் 10 ஓவர்கள்வரை கொல்கத்தா கையில் இருந்த ஆட்டம் கடைசி 10 ஓவர்களில் தலைகீழாக மாறியது. க்ருணால் பாண்டியாவின் பந்துவீச்சில் கொல்கத்தா சிக்கியதையடுத்து, ஆட்டம் மொத்தமும் ஆர்சிபியின் பக்கம் சென்றது.
பட மூலாதாரம், Getty Images
க்ருணால் பாண்டியா ஐபிஎல் டி20 தொடரில் “அன்டர்ரேட்டட்” பந்துவீச்சாளராகவே பார்க்கப்பட்டுள்ளார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் பெரிதாக டர்ன் இருக்காது என்பது உண்மைதான், ஆனால், பேட்டர்களை எவ்வாறு விளையாட விடாமல் செய்து பந்துவீசுவது என்பதை க்ருணால் நன்கு தெரிந்தவர். இவரின் பந்துவீச்சை கிராஸ்பேட் போட்டு அடிப்பது, இறங்கி வந்து தூக்கி அடிப்பதை பேட்டர்கள் செய்வது ஆபத்தானது.
ஏனென்றால் க்ருணால் பாண்டியா பந்துகள் பெரும்பாலும் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் என பிளாட்டாகவே வரும். இதில் சிறிய தவறு பேட்டர்கள் செய்தால்கூட விக்கெட்டை இழக்க நேரிடும். இந்த ஆட்டத்திலும் ரூ.23 கோடி வீரர் வெங்கடேஷ், ரூ.13 கோடி வீரர் ரிங்கு சிங் இருவரும் பந்தை இன்கட் செய்ய முயன்று போல்டாயினர். க்ருணால் பாண்டியாவை ரூ.5.75 கோடிக்கு வாங்கியது தகும் என நிரூபித்துவிட்டார்.
சூயஷ் சர்மா தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும் அவருக்கு ஓவர் மறுக்கப்படவில்லை. ஆனால், இக்கட்டான நேரத்தில் லெக் ஸ்பின் மூலம் ரஸல் விக்கெட்டை வீழ்த்தி கொல்கத்தா அணியின் நம்பிக்கையை உடைத்தார் சூயஸ் ஷர்மா.
பட்டிதாருக்கு முதல் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல்முறையாக கேப்டன் பொறுப்பேற்ற பட்டிதாருக்கு அணியின் வீரர்கள் சேர்ந்து முதல் வெற்றியை பரிசளித்துள்ளார்கள் என்றுதான் கூற வேண்டும். புதிய கேப்டன்ஷி, புதிய வீரர்கள் சேர்ந்து வெற்றியை எளிதாக்கினர்.
பட மூலாதாரம், Getty Images
பேட்டிங்கில் கேப்டனாக தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்தார் பட்டிதார். 16 பந்துகளில் 5 பவுண்டரி, ஒருசிக்ஸர் என 36 ரன்களில் சிறிய கேமியோ ஆடி வெற்றியை நெருங்கவைத்துவிட்டு சென்றார். விராட் கோலியுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்து பட்டிதார் பிரிந்தார்.
‘வெற்றிக்கு காரணம் இவர்கள்தான்’
முதல் வெற்றிக்குப் பின் ஆர்சிபி கேப்டன் ரஜப் பட்டிதார் கூறுகையில் ” எனக்கு முதல் போட்டி என்பதால் அழுத்தம் இருந்தது ஆனால், சிறந்த நாளாக முடிந்தது. இதேபோல அடுத்தடுத்து இருக்கும் என நம்புகிறேன். சூயாஷ் குமார் ரன்கள் கொடுத்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றினார். க்ருணால் பந்துவீச்சு ஆட்டத்தை திருப்பிவிட்டது. இருவருக்கும்தான் வெற்றிக்கு முழுப்பங்கு இருக்கிறது. கேப்டன் கோலி எனக்கு தொடர்ந்து களத்தில் ஆதரவு அளித்தார் ஆலோசனை வழங்கினார் அவரிடம் இருந்த கற்று வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு