பட மூலாதாரம், Getty Images
பெங்களூருவில் நேற்று (ஏப்ரல் 24) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஆனாலும், ஆர்சிபியின் நிகர ரன்ரேட் 0.482 என மும்பையைவிட குறைவாகவே இருக்கிறது.
மும்பை அணி அடுத்து ஓர் ஆட்டத்தில் வென்றால் 2வது இடத்திற்கே நகர்ந்துவிடும் அளவுக்கு நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்துள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 9 போட்டிகளில் தொடர்ந்து சந்திக்கும் 5வது தோல்வி இது. 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் நீடிக்கிறது.
ஆர்சிபி அணி இந்த சீசனில் இதுவரை சொந்த மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில் பெங்களூருவில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஆட்டத்தை மாற்றிய ஒரே ஓவர்
இந்த ஆட்டத்தில் சேஸிங்கின் தொடக்கத்தில் இருந்து ஆட்டம் ராஜஸ்தான் பக்கம்தான் இருந்தது. அந்த அணிதான் வெல்லும் என்று ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், அனைத்தும் புவனேஷ்வர்குமார் வீசிய 18வது ஓவர் வரைதான். ஹேசல்வுட் வீசிய 19வது ஓவர்தான் ஆட்டத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது.
கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி ஆடி வந்த துருவ் ஜூரெல்(47) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஜோப்ரா ஆர்ச்சரும் ஆட்டமிழக்கவே, ஹேசல்வுட் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த ஓவர்தான் வெற்றியை ராஜஸ்தான் கரங்களில் இருந்து ஆர்சிபி பறித்தது.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. யஷ் தயால் வீசிய ஓவரில் ஷுபம் துபே, ஹசரங்கா ஆட்டமிழந்து, 5 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் அந்த அணி தோல்வி அடைந்தது.
தொடர்ந்து 3வது முறை
பட மூலாதாரம், Getty Images
இந்த சீசனில் தொடர்ந்து 3வது முறையாக சேஸிங்ஸில் வெற்றிக்கு அருகே வந்து தோல்வியைச் சந்தித்துள்ளது ராஜஸ்தான் அணி. இதற்கு முன் லக்னெள அணிக்கு எதிராகவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் கடைசி ஓவரில் 9 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் அணி தோற்றது. இந்தப் போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து கடைசி ஓவரில் 17 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் தோற்றது.
ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் ராஜஸ்தான் பேட்டர்கள் வெளுத்துவிட்டனர். ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஆனால் நடுப்பகுதியில் குர்னல் பாண்டியா, சூயஸ் ஷர்மா இருவரும் ராஜஸ்தான் ரன்ரேட்டுக்கு பிரேக் போட்டனர்.
இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 62 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தினர். குறிப்பாக கேப்டன் ரியான் பராக், நிதிஷ் ராணா ஆகிய பெரிய விக்கெட்டுகளை குர்னல் பாண்டியா வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்க்க உதவினர். அடுத்த 14 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 134 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 8.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. 15வது ஓவரில் 150 ரன்களை எட்டிய நிலையில் அதன் பிறகு ஆட்டத்தில் மந்தநிலை ஏற்பட்டது.
இருப்பினும் புவனேஷ்வர்குமார் வீசிய 18வது ஓவரில் துருவ் ஜூரெல் 22 ரன்களை விளாச, ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல், ஆர்ச்சர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஒரு ரன் சேர்த்தனர். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்து ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
திருப்புமுனையான ஹேசல்வுட்டின் 2 ஓவர்கள்
பட மூலாதாரம், Getty Images
ஹேசல்வுட் வீசிய 17வது மற்றும் 19வது ஓவர்தான் ஆட்டத்தை ஆர்சிபி பக்கம் கொண்டு வந்தது. செட்டில் பேட்டர் ஷிம்ரன் ஹெட்மயரை(11) தனது 17வது ஓவரில் ஹேசல்வுட் ஆட்டமிழக்கச் செய்தார். ராஜஸ்தான் அணிக்கு எந்த நேரத்திலும் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய ஹெட்மயரை வீழ்த்தி ஹேசல்வுட் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
அடுத்ததாகத் தனது 19வது ஓவரில் மற்றொரு செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல் விக்கெட்டுக்கு ஹேசல்வுட் குறிவைத்தார். ஏனென்றால் புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் ஜூரெல் 22 ரன்கள் சேர்த்ததால், ஹேசல்வுட் ஓவரை அடித்து துவம்சம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், துருவ் ஜூரெலுக்கு துல்லியமான யார்க்கரை ஹேசல்வுட் வீசினார். யார்க்கரில் இருந்து தப்பிக்க ஜூரேல் பேட்டால் தடுக்கவே பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. 3வது நடுவரிடம் அப்பீல் செய்யவே, பந்து துருவ் ஜூரெல் பேட்டில் பட்டுச் சென்றது தெரிய வந்தது. விக்கெட் உறுதியானதால் பெரிய விக்கெட்டை வீழ்த்திய நிம்மதி ஆர்சிபிக்கு கிடைத்தது. அடுத்து களமிறங்கிய ஆர்ச்சருக்கு டெஸ்ட் லென்த் பந்தை வீசிவே வேறுவழியின்றி கேட்ச் கொடுத்து ஆர்ச்சர் ஆட்டமிழந்தார். இந்த ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை ஹேசல்வுட் வீழ்த்தினார்.
ஹேசல்வுட் 4 ஓவர்களை வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஜெய்ஸ்வால் இருக்கும் வரை ஹேசல்வுட் ஓவரை குறிவைத்து ஹாட்ரிக் பவுண்டரி, சிக்ஸர் என விளாசித் தள்ளினார். ஆனால் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஹேசல்வுட் வீழ்த்திய பிறகு மற்ற பேட்டர்களுக்கு ஹேசல்வுட் சிம்ம சொப்பனமாக மாறினார்.
ராஜஸ்தானுக்கு நெருக்கடியளித்த குர்னல்
பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தான் சேஸிங்கை தொடங்கியதில் இருந்து ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை கொண்டு சென்றது. ஜெய்ஸ்வால், 14 வயது வைபவ் சூர்யவன்ஷி(16ரன்கள்) இருவரும் சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பந்துவீச்சை விளாசித் தள்ளினர்.
ராஜஸ்தான், 4.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து தனது கடமையைச் செய்துவிட்டுச் சென்றார். 8 ஓவர்களில் 100 ரன்களை எட்டி ராஜஸ்தான் வலுவாக இருந்தது. ஆனால், குர்னல் பாண்டியா, சூயஸ் ஷர்மா இருவரும் வீசிய 8 ஓவர்களுக்கு ராஜஸ்தான் ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர்.
குறிப்பாக கேப்டன் ரியான் பராக்(22) விக்கெட்டை 10வது ஓவரில் குர்னல் பாண்டியா வீழ்த்தி ராஜஸ்தானை லேசாக தடுமாறச் செய்தார். ஆனால் நிதிஷ் ராணா களத்தில் இருக்கிறாரே என்ற துணிச்சல் இருந்தது.
ஆனால், நிதிஷ் ராணா(28) விக்கெட்டையும் 14வது ஓவரில் குர்னல் பாண்டியா எடுக்கவே ராஜஸ்தானுக்கு முதல் சறுக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு, சூயஸ் ஷர்மா, குர்னல் இருவரும் ராஜஸ்தான் பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடி கொடுத்துப் பந்துவீசினர்.
கோலி, படிக்கல் அரைசதம்
பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்(26) பவர்ப்ளே முடிந்ததும் ஆட்டமிழந்தார். பவர் ப்ளேவில் கோலி, சால்ட் இருவரும் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த படிக்கல், கோலி ஜோடி ஸ்கோரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. 2வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.
விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலியின் கணக்கில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும்.
படிக்கல் தனக்கு இருமுறை கேட்ச் நழுவவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி 26 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்டிதாரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா கூட்டணி 19 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 200 ரன்கள் கடக்க உதவினர்.
முதல் 10 ஓவர் வரை நம்பிக்கையில்லை
பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் “எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட வெற்றியாகப் பார்க்கிறோம். இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக, எதிர்பார்த்தது போல் இருந்தது.
பத்தாவது ஓவருக்கு பிறகுதான் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. இதற்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம். ஆட்டத்தை திருப்பி வெற்றிக்கு இழுத்து வந்த பந்துவீச்சாளர்களின் துணிச்சல் அபாரமானது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை தொடக்கத்தில் பார்த்து நம்பிக்கையிழந்தேன்,” என்று கூறினார்.
மேலும், “ஆட்டம் நெருக்கடியாகச் செல்லும் என்று முதலில் கணித்தேன். ஆனால், 10வது ஓவருக்கு பின் விக்கெட்டுகளை எடுத்த பிறகு, என் கணிப்பு மாறியது. விக்கெட் எடுத்தால்தான் ரன்களை தடுக்க முடியும் என்று நினைத்தேன் அதற்கேற்றார்போல் திட்டமிட்டோம்,” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்
இன்றைய ஆட்டம்
- சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ்
- இடம்: சென்னை
- நேரம்: இரவு 7.30
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- நாள் – ஏப்ரல் 30
- இடம் – சென்னை
- நேரம்- இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்
- நாள் – ஏப்ரல் 27
- இடம் – மும்பை
- நேரம்- மாலை 3.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
- ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ்
- நாள் – ஏப்ரல் 27
- இடம் – டெல்லி
- நேரம்- இரவு 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு
- சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-417 ரன்கள் (8 போட்டிகள்)
- விராட் கோலி(ஆர்சிபி)392 ரன்கள்(9 போட்டிகள்)
- நிகோலஸ் பூரன்(லக்னெள)-377 ரன்கள்(9 போட்டிகள்)
நீலத் தொப்பி
- பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 16 விக்கெட்டுகள்(8 போட்டிகள்)
- ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 16 விக்கெட்டுகள்(9 போட்டிகள்)
- குல்தீப் யாதவ்(டெல்லி) 12 விக்கெட்டுகள்(8 போட்டிகள்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.