பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
2026 ஐபிஎல் தொடர் இன்று பெங்களூருவில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.
சன்ரைசர்ஸ் கேப்டன் இஷன் கிஷன் 80 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி தரப்பில் ஜேக்கப் டஃபி, ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்த டஃபி
பட மூலாதாரம், Getty Images
முதல் இரு ஓவர்களும் சன்ரைசர்ஸுக்கு நல்லபடியாக இருந்தன. அந்த அணி 2 ஓவர்கள் முடிவில் 18 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது ஓவரைப் பந்துவீச வந்த ஜேக்கப் டஃபி இரண்டு ஓப்பனர்களையும் அந்த ஓவரிலேயே வெளியேற்றினார்.
அபிஷேக் ஷர்மா 7 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நித்திஷ் குமாரை தான் வீசிய அடுத்த ஓவரில் (ஆட்டத்தின் ஐந்தாவது ஓவர்) ஆட்டமிழக்கச் செய்தார் டஃபி. அதனால் 29/3 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது சன்ரைசர்ஸ்.
சிறப்பாகப் பந்துவீசிய ஜேக்கப் டஃப், தன் 4 ஓவர்களையும் தொடர்ச்சியாக வீசி தன் ஸ்பெல்லை முடித்தார். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் 22 ரன்கள் மட்டுமே கொடுத்தார். தன்னுடைய 4வது ஓவரிலும் கூட அவர் ஒருசில வாய்ப்புகளை உருவாக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸை சரிவிலிருந்து மீட்ட கேப்டன்
அதன்பிறகு நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் இஷான் கிஷன், ஹெய்ன்ரிக் கிளாசன் இருவரும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து சன்ரைசர்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
கிளாசன் ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாட, இஷான் கிஷன் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆர்சிபி அணியின் அறிமுக பௌலர் அபினந்தன் சிங் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி, சிக்ஸர் என விளாசி தன் அதிரடியைத் தொடங்கினார் கிஷன். ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் எதிராக பவுண்டரிகள் விளாசிய கிஷன், 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
நிதானத்திலிருந்து அதிரடிக்கு மாறிய கிளாசனை பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் பிடித்து வெளியேற்றினார் ஃபில் சால்ட்.
கிளாசன் அவுட் ஆனதும் கூட இஷான் கிஷனின் அதிரடி குறையவில்லை. அவர் 38 பந்துகளில் 80 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பவுண்டரி எல்லையில் ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து இஷன் கிஷனையும் சால்ட் தான் வெளியேற்றினார்.
பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி அணிக்கு இலக்கு 202
கிஷன் அவுட்டான பிறகு வந்த வீரர்களில் அனிகேத் வெர்மா மட்டுமே பெரிய ஸ்கோர் எடுத்தார். 18 பந்துகளில் 4 சிக்ஸர்கள் விளாசிய அவர் 43 ரன்கள் எடுத்தார். அவர் 26 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச்சை கோலி தவறவிட்டிருந்தார். ஆனால், 19வது ஓவரின் கடைசிப் பந்தில் கோலியிடமே கேட்ச் கொடுத்து அனிகேத் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ். ஆர்சிபி தரப்பில் ஜேக்கப் டஃபி, ரொமாரியோ ஷெபர்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பட மூலாதாரம், Abhishek Chinnappa/Getty Images
கேப்டன்கள் சொன்னது என்ன?
டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பட்டிதார், “இது ஒரு சீசன் தொடக்க ஆட்டம். அதனால் பிட்ச் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். கடந்த சீசனிலிருந்து நிறைய சாதகமான விஷயங்கள் உள்ளன. நாங்கள் எதையும் தற்காத்துக் கொள்ளப் போவதில்லை, ஐபிஎல் 2026-லும் நாங்களே வெற்றி பெறுவோம். [காயங்கள் பற்றி] அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர், அதேபோல் மாற்று வீரர்களும் சிறப்பாக உள்ளனர். வீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடன் இருக்கிறார்கள், மருத்துவக் குழு அவர்களைக் கவனித்து வருகிறது” என்று கூறினார்.
சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் இஷான் கிஷன் தற்காலிகமாக அந்த அணியின் கேப்டனாக செயல்படுகிறார். டாஸின் போது பேசிய அவர், “நாங்களும் முதலில் பந்துவீசவே (fielding) விரும்பினோம். எங்களின் உள்ளுணர்வை நம்பி விளையாட நினைக்கிறோம். இது ஐபிஎல் என்பதால் புதிதாக எதையும் தொடங்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினாலே போதும். பேட் கம்மின்ஸ் நிச்சயமாகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர், ஆனால் மற்ற அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதாகவே தோன்றுகிறது; இந்த முறை நாங்களே வெற்றி பெறுவோம் என்று உணர்கிறேன்.” என்று கூறினார்.
இரு அணிகளிலும் இடம்பெற்றிருக்கும் வீரர்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபில் சால்ட், ரஜத் பட்டிதார் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி, சுயாஷ் ஷர்மா.
இம்பேக்ட் வீரர்கள்: தேவ்தத் படிக்கல், ஜேக்கப் பெதெல், ரஷிக் சலாம், கனிஷ்க் சௌஹான், வெங்கடேஷ் ஐயர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி, அனிகேத் வெர்மா, சலில் அரோரா, ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனத்கட்.
இம்பேக்ட் வீரர்கள்: ஷிவாங் குமார், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் பெய்ன், ஆர் ஸ்மரன், சகிப் ஹுசெய்ன்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு