2014-ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய விண்கல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
டைனோசரை அழித்த விண்கல்லைக் காட்டிலும் 200 மடங்கு பெரிய விண்கல் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கியது.
இதை பற்றி தெரிந்து கொள்வதற்காக, தென்னாப்பிரிக்காவில் இந்த விண்கல் விழுந்த பகுதிக்கு விஞ்ஞானிகள் சென்றனர். அங்கு அவர்கள் ஸ்லெட்ஜ் சுத்தியல்களை கொண்டு அந்த விண்கல்லின் சில பாறை துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
மிகப்பெரிய இந்த விண்கல் தாக்கியதால் பூமியில் பேரழிவு ஏற்பட்டதையும் தாண்டி, பூமியில் உயிர்கள் செழிக்க உதவியது என்பதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது.
“பூமி உருவான கால கட்டத்தில், விண்வெளியில் ஏராளமான சிறிய விண்கல்கள் சுற்றிக்கொண்டிருந்தன. அவற்றில் பலவும் பூமி மீது மோதியிருக்கலாம் என்பதை நாம் அறிவோம்”, என்று இந்த புதிய ஆராய்ச்சியை வழிநடத்திய ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நட்ஜா டிராபன் கூறுகிறார்.
“ஆனால் இதுபோன்ற மிகப்பெரிய விண்கல் மோதலுக்கு நடுவே, பூமியில் உயிர்கள் தாக்குப்பிடிக்குமா என்ற நெருக்கடியான நிலை இருந்தது என்பதை கண்டறிந்தோம். ஆனால் அதன் பிறகே உயிர்கள் மிகவும் செழிப்பாக உருவாகி வளர்ந்துள்ளன”, என்று அவர் கூறுகிறார்.
நமக்கு இதற்கு முன் தெரிந்த விண்கற்களை விட S2 விண்கல் மிகப் பெரிய ஒன்று. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் அழிவுக்கு வழிவகுத்த விண்கல் சுமார் 10 கிலோமீட்டர் அளவுக்கு அகலமானது.
பூமியின் தொடக்க காலகட்டத்தில் S2 விண்கல் பூமியை தாக்கியது. அப்போது பூமி பெரும்பாலும் கடலால் சூழப்பட்டு இருந்தது. சில கண்டங்கள் மட்டுமே உருவாகியிருந்தன. அப்போது இருந்த உயிர்களும் ஒற்றை செல் உடைய எளிய உயிர்களாக இருந்தன.
இந்த விண்கல் தாக்கிய கிழக்கு பார்பர்டன் கிரீன்பெல்ட் பகுதி பூமியின் பழமையான இடங்களில் ஒன்றாகும். இங்கு விண்கல்லின் எச்சங்கள் இன்னும் உள்ளன.
பேராசிரியர் டிராபன், தன்னுடன் பணியற்றுபவருடன் இணைந்து மூன்று முறை இந்த பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இந்த மலைப்பகுதிகளில் யானைகள், காண்டாமிருகங்கள் போன்ற வன விலங்குகளிடமிருந்தும் மற்றும் வேட்டையாடுபவர்களிடமிருந்தும் அவர்களைப் பாதுகாக்க துப்பாக்கிகளுடன் படைவீரர்கள் உடன் சென்றனர்.
அவர்கள் இந்த விண்கல்லின் சிறிய துகள்களை தேடிச் சென்றனர். சுத்தியலை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கிலோகிராம் பாறை துண்டுகளை சேகரித்து ஆய்வகங்களுக்கு அவர்கள் கொண்டு சென்றனர்.
இதில் முக்கியமான மதிப்பு மிக்க விண்கல் துகள்களை பேராசிரியர் டிராபன் தனது பெட்டியில் வைத்திருந்தார்.
“நான் பயணம் செய்யும் போது பெட்டிகளை சோதனை செய்வதற்காக நிறுத்தப்படுவேன். அப்போது அதிகாரிகளிடம் விஞ்ஞானம் எவ்வளவு அற்புதமானது என்பதைப் பற்றி ஒரு பெரிய விளக்கத்தை கொடுப்பேன். இதை கேட்டு அவர்கள் சலிப்படைந்து என்னை கடந்து செல்ல அனுமதிப்பார்கள்”, என்று அவர் கூறுகிறார்.
S2 விண்கல் பூமியில் விழுந்த போது என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதேபோன்ற மாதிரியை இந்த குழு செயற்கையாக மீண்டும் உருவாக்கி ஆய்வு செய்தது. இந்த விண்கல் பூமியில் விழுந்த போது 500 கிலோமீட்டர் அளவிற்கு பெரிய பள்ளத்தை உருவாக்கியது. அதிலிருந்து சிறு பாறை துண்டுகள் மிக வேகமாக சிதறின. இதனால் உலகம் முழுவதும் புகை மண்டலம் போல உருவானது.
“ஒரு மழை மேகத்தை கற்பனை செய்து பாருங்கள். அதிலிருந்து நீர்த்துளிகள் கீழே விழுவதற்கு பதிலாக, வானத்தில் இருந்து உருகிய பாறைத் துகள்கள் பொழிவதை போன்றது அது”, என்று பேராசிரியர் டிராபன் கூறினார்.
உலகம் முழுவதும் கடலில் ஒரு பெரிய சுனாமி எழும்பி, கடலோரப் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்திருக்கும்.
“அந்த சுனாமியுடன் ஒப்பிடுகையில், 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி மிகவும் சாதாரண ஒன்று” என்று பேராசிரியர் டிராபன் கூறுகிறார்.
அப்போது வெளிப்பட்ட அதிக அளவிலான ஆற்றல், அதிக அளவில் வெப்பத்தை ஏற்படுத்தி கடலை கொதிக்கச் செய்து, பல மீட்டர் ஆழம் அளவிற்கு தண்ணீரை ஆவியாகச் செய்திருக்கிறது. இதனால் காற்றின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருக்கும்.
வானம் தூசி மற்றும் துகள்களால் நிறைந்து கருப்பாக மாறி இருந்திருக்கும். இந்த கருமையை தாண்டி சூரிய ஒளி ஊடுருவாது என்பதால், ஒளிச்சேர்க்கையை நம்பியிருந்த நிலத்திலும் நீரிலும் இருந்த உயிர்கள் அழிந்திருக்கக் கூடும்.
இந்த தாக்கங்கள் S2 விண்கல் போன்ற மற்ற பெரிய விண்கல் தாக்கிய இடங்களை போல ஒத்திருந்தது என்று புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்
ஆனால் பேராசிரியர் டிராபன் மற்றும் அவரது குழு அடுத்து கண்டுபிடித்ததுதான் ஆச்சரியமாக இருந்தது. இந்த பாறை துகள்கள் மாதிரிகளை ஆராய்ந்து பார்த்ததில் உலகில் உள்ள உயிர்களின் உணவான பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள் அதில் இருந்தன.
“பூமியில் இருந்த உயிர்கள் தாக்குப்பிடித்து, விரைவாக மீண்டு வந்து செழித்துள்ளன”, என்று அவர் கூறுகிறார்.
“இது காலையில் பல் துலக்குவது போன்றது. என்னதான் அது 99.9% பாக்டீரியாவைக் கொன்றாலும், மாலைக்குள் அவை அனைத்தும் மறுபடியும் உண்டாகிவிடும் அல்லவா?” என்றார் அவர்.
S2 விண்கல் மோதியதால் ஏற்பட்ட மிகப்பெரிய தாக்கம் என்னவென்றால், பாஸ்பரஸ் போன்ற உயிர்கள் செழிக்கத் தேவையான இன்றியமையாத பொருட்களை உலகம் முழுக்கப் பரவச் செய்திருக்கலாம் என்று புதிய கண்டுபிடிப்பு கூறுகிறது.
அப்போது ஏற்பட்ட சுனாமி கடலின் அடியாழத்தில் இருந்து இரும்புச்சத்துள்ள நீரை மேலே கொண்டு வந்ததன் மூலம் பூமியின் தொடக்க காலத்தில் இருந்த எளிய உயிர்களுக்கு கூடுதல் ஆற்றல் கிடைத்திருக்கலாம்.
பூமியின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த விண்கற்களின் அடுத்தடுத்த மோதல்களே ஆரம்ப கால உயிர்கள் தோன்ற வழிவகுத்திருக்கலாம் என்ற விஞ்ஞானிகளின் கருதுகோளுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு வலுசேர்க்கிறது.
“பூமியில் இந்த விண்கல் மோதலுக்குப் பிந்தைய சூழல் உயிர்கள் செழிக்க சாதகமான சூழலை உருவாக்கியிருக்கலாம் என்பது போல் தோன்றுகிறது” என்று அவர் கூறுகிறார்.
இந்த கண்டுபிடிப்புகள் அறிவியல் இதழான PNAS-இல் வெளியிடப்பட்டுள்ளன.