பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
இந்திய பிரதமர் நரேந்தி மோதி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு காசான் நகரில் நடந்த சந்திப்பை விட, தியான்ஜினில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்த சந்திப்பு இன்னும் உறுதியானதாகவும், வலுவான கைக்குலுக்கலும் கொண்டதாகவும் இருந்தது.
SCO உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்தது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படாவிட்டாலும், அது அபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இரு தலைவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்பின் சுங்க வரிகளாலும், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு ஒரு தலைப்பட்சமாக எடுத்த நடவடிக்கைகளாலும் பாதிப்படைந்தவர்கள்.
இந்த சந்திப்பு எச்சரிக்கையுடனான மறுசீரமைப்பாக கருதப்பட்டது. ‘நாங்கள் முன்னேற்றத்திற்கான கூட்டாளிகள், போட்டியாளர்கள் அல்ல’ என இந்தியா மற்றும் சீனா கூட்டு அறிக்கையை வெளியிட்டது.
மேலும், இந்த வேறுபாடுகள் மோதலாக மாறிவிடக் கூடாது என்பதையும் வலியுறுத்தியது.
2020ஆம் ஆண்டில் நடந்த கல்வான் மோதல்களுக்குப் பிறகு உருவான நீண்ட பதற்றத்திற்கு பின், உறுதித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்தது.
இரு தலைவர்களும் வர்த்தகம், எல்லை மேலாண்மை பற்றி மட்டுமல்லாமல், பலதுருவ ஆசியா மற்றும் பலதுருவ உலகம் பற்றிய விரிவான பார்வையையும் முன்வைத்தனர். அமெரிக்காவை மட்டுமே உலகத் தலைவராகக் கருத முடியாது என்ற இதன் உட்பொருள் தெளிவாக இருந்தது.
டிரம்பால் ஏற்பட்ட பாதிப்புகள்:
பட மூலாதாரம், Getty Images
இந்த சந்திப்பின் பின்னணியை தவிர்க்கமுடியாது. டிரம்பின் வரி விதிப்பு, இந்தியாவை சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளியது. அவசர அதிகாரங்களின் கீழ் விதிக்கப்பட்ட அந்த வரிகள், ரஷ்ய எண்ணெயை தள்ளுபடியில் வாங்கியதற்கான தண்டனையாக நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் உண்மையில், அவை அமெரிக்காவிற்கு இடமில்லாத யூரேஷிய கூட்டமைப்புகளுக்குள் இந்தியாவை மேலும் ஆழமாக இழுத்துச் செல்கின்றன.
“ஆம், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் பணியாற்ற தயார் எனச் சிக்னல் கொடுக்கிறது. அமெரிக்கா, இந்தியா உறவு டிரம்பின் நடவடிக்கைகளால் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்த திட்டம் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் இதை குறுகிய காலத் தீர்வாகவே பார்க்க வேண்டும்.” என இந்திய வெளிநாட்டு கொள்கையில் முன்னணி அறிஞராக விளங்கும் இன்டியானா பல்கலைக்கழக பேராசிரியர் சுமித் கங்குலி பிபிசியிடம் கூறினார்.
ஆனால், மோதி மற்றும் ஜின்பிங் பயன்படுத்திய வார்த்தைகள் திட்டமிட்டு சிக்கலாக்கப்பட்டது. எல்லையில் அமைதியும், அமைதியான சூழலும் முன்னேற்றத்திற்குத் தேவையானவை என்ற பிரதமர் மோதியின் நினைவூட்டல், சமரசமானதாக மட்டுமல்ல எச்சரிக்கையாகவும் இருந்தது. எல்லையில் படைகளின் விலகல் (disengagement) மற்றும் தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்த குறியீடுகள், சிறிய முன்னேற்றங்களை கூட அர்த்தமுள்ளவையாக காட்டும் வகையில் அமைந்தது.
பொருளாதாரத்தில், சுமையை குறைப்பது மற்றும் வர்த்தகத்தை ஆழப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள், இந்தியா, சீனாவுடன் கூட வர்த்தகத்திற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டு அரசியல் செய்தியாக முன்வைக்கப்பட்டன.
“மூன்றாம் நாட்டின் பார்வையில் இருந்து மறுக்கப்பட்டதன் மூலமும், மூலோபாய சுயாட்சி (strategic autonomy) வலியுறுத்தப்பட்டதன் மூலமும், அமெரிக்க அழுத்தம் பெய்ஜிங் உடன் உள்ள ஈடுபாட்டை நிர்ணயிக்க அனுமதிக்கப் போவதில்லை என்பதை டெல்லி வாஷிங்டனுக்கு தெளிவுபடுத்தியது.
டெல்லியின் போர் மேலாண்மை பள்ளியில் சீன நிபுணராக உள்ள பேராசிரியர் ஃபைசல் அஹ்மது நேரடியாக தனது கருத்தைப் பதிவிட்டார். “இந்தியா, சீனா உறவுகள் இருதரப்பாகவும் சரி, எஸ்சிஓ-விலும் சரி வலிமைமிக்க நிலைப்பாட்டில் இருந்து முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தியான்ஜினில் நடந்த மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.” என்கிறார்.
இந்த சந்திப்பு நம்பிக்கையை வளர்க்கும் என அவர் நம்புகிறார். “மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு இருதரப்பு நம்பிக்கையில்லாதன்மையை குறைக்க ஓர் ஊக்கம் அளிக்கிறது.
எஸ்சிஓ அளவிலும், தியான்ஜின் சந்திப்பு பிராந்திய பிரச்னைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தியது. சர்வதேச குற்றங்களை கையாளுதல், மக்கள் மத்தியிலான இணைப்பை வலுப்படுத்துதல் போன்றையும் இதில் அடங்கும்.
தோற்றங்களும் விளைவுகளும்:
பட மூலாதாரம், @narendramodi
உண்மையில் சில நேரங்களில் காட்சிகளும் முடிவுகளுக்குச் சமமான முக்கியத்துவத்தை பெறுகின்றன. தியான்ஜினில் ஜி ஜின்பிங் மற்றும் புதின் உடன் பிரதமர் தோன்றிய காட்சி, எஸ்.சி.ஓ அரங்கத்தைக் கடந்தும் பரவச் செய்தது.
இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான நேரமாக இருந்தது. சில நாட்களுக்கு முன், டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்தார் அந்தச் வரி சட்டத்திற்கு முரணானவை என்று அமெரிக்க கூட்டாட்சி மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் டிரம்புக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதால் அந்த வரிகள் இன்னும் நீக்கப்படவில்லை.
ஷீ ஜின்பிங் மற்றும் புதினுடன் பிரதமர் மோதி தோன்றிய நிகழ்ச்சி, அடையாளச் சின்னங்கள் நிறைந்ததாக இருந்தது. பேராசிரியர் ஃபைசல் அஹ்மது, இந்த தருணத்தை வெறும் புகைப்படத்தை விட அதிகமாகக் கருதுகிறார். “டிரம்பின் வரி நடவடிக்கை மிகவும் முறையற்றது. தியான்ஜினில் மோடி, ஜின்பிங், புதின் ஒரே மேடையில் தோன்றியது, அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச பாதுகாப்புக் கொள்கைகளுக்கு பதிலடியாக இருந்தது.” என்றார்.
7 ஆண்டுகளில் முதல்முறையாக பிரதமர் மோதி சீனா சென்றுள்ளார். இது ஒரே ஒரு பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வது பற்றியது மட்டுஅல்ல. ஜின்பிங் உடன் நடந்த இந்த சந்திப்பு, உறவுகளை மீட்பதற்கான வாய்ப்பை வழங்கியது. அதே சமயம், விரிவான எஸ்சிஓ சந்திப்பு, வாஷிங்டனை தாண்டி இந்தியாவுக்கு கூட்டாளிகள் உள்ளன என்பதை காட்டும் அரங்காக அமைந்தது.
“சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் மோதி பங்கேற்றதை, மூலோபாய திசை மாற்றமாக அல்லாமல், விரிவான தூதரக சமநிலைப்படுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்” என முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபால் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.சி.ஓ-வின் முக்கியத்துவங்கள்:
பட மூலாதாரம், @narendramodi
வாஷிங்டனில், எஸ்.சி.ஓ பெரும்பாலும் அதிகாரவாதிகளின் சங்கமாகவே புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியா மற்றும் பிற எஸ்.சி.ஓ உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. இந்தியாவுக்கு, அதன் பயன் வேறு இடத்தில் இருக்கிறது. ரஷ்யா, சீனா, மத்திய ஆசியா, இப்போது ஈரானும் கூட ஒரே மேடையில் அமரக் கூடிய அரங்கத்தை அது வழங்கியுள்ளது.
இந்த மாநாட்டை பயன்படுத்தி, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார். டெல்லியை பொறுத்தவரை, இந்த சந்திப்பு உறுதித்தன்மை பற்றிய பேச்சுகள், எதிர்பார்க்கக்கூடிய உறவாக மாறுமா என்பதைச் சோதிக்கும் முயற்சியாக இருந்தது. டெல்லியில் இருப்பவர்கள் யதார்த்தத்தை புரிந்துகொண்டனர்.
எல்லைப் பிரச்னை தொடர்ந்து வலியை உண்டாக்குகிறது. மேலும் சீனாவுடனான 99 பில்லியன் டாலர் வர்த்தக பற்றுச்சுமை அரசியல் தலைவலியாக உள்ளது. இது கடினமாக இருந்தாலும், பேச்சுவார்த்தை அவசியமானதாக உள்ளது.
“இதற்கு மாற்று என்ன? சீனாவை நிர்வகிப்பதே அடுத்த பல தசாப்தங்களுக்கு, இந்தியாவின் பிரதான பணியாகும்” என்கிறார் பகுப்பாய்வாளர் ஹாப்பிமான் ஜேக்கப்.
ஆறு உறுப்பினர்களுடன் எளிமையாக தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தற்போது 10 உறுப்பினர்களாக விரிவடைந்துள்ளது. அதோடு 2 பார்வையாளர்கள் மற்றும் 14 உரையாடல் கூட்டாளிகளும் உள்ளனர். இப்போது, அது மற்ற பிராந்திய அமைப்பை விட பரந்த புவியியல் பரப்பை கொண்டதாக, உலக மக்கள்தொகையில் மிகப்பெரிய பங்கை அளிக்கிறது.
ஹாங்காங்கை மையமாக கொண்ட மூத்த பகுப்பாய்வாளர் ஹென்றி லீ, எஸ்.சி.ஓ குறித்துப் பேசினார். “எஸ்.சி.ஓ-பன்முகத்தன்மை அதிர்ச்சிகரமாக உள்ளது. வரலாறுகள், கலாசாரம், அரசியல் அமைப்புகள், வளர்ச்சி நிலைகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியவை. “இத்தகைய வேறுபாடுகள் இருந்தபோதிலும், எஸ்.சி.ஓ தனது உறுப்புநாடுகளின் தேவைகளையும் தற்போதைய சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கும் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.” என்றார்.
மேலும், “ஒரு விதத்தில், எஸ்.சி.ஓ உலகுக்கு பல்வேறு நாடுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை காட்டுகிறது. இது இன்னும் முழுமையாக இல்லை என்றாலும், நாடுகள் ஒன்றிணைந்தால் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்பதை இது நிரூபித்துக் காட்டுகிறது” என்றார்.
ரஷ்யாவின் பங்கு:
பட மூலாதாரம், @narendramodi
இந்த விஷயத்தில் ரஷ்யாவின் பங்கு சாதாரணமானதாக இல்லை. ரஷ்யாவின் விலை குறைந்த கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதனால் இந்தியாவில் பணவீக்கத்தில் இருந்து நாட்டு மக்களை காக்க முடிந்தது.
இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
ரஷ்யா இந்தியாவுக்கு வெறும் எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் மட்டும் வழங்கவில்லை. அது சுயாட்சி சின்னமாக இருந்தது. மேலும், நரேந்திர மோதி அரசு அமெரிக்காவுக்கு அடிபணியாமல் உறவுகளை சமநிலைப்படுத்த முடியும் என்பதை இது நிரூபிக்கும்.
ஆனால் “ரஷ்யா பலவீனமாகும் சக்தி, அதன் பொருளாதார மற்றும் தூதரக திறன்கள் வரையறுக்கப்பட்டவை.” என பேராசிரியர் கங்குலி எச்சரிக்கிறார்.
மேலும், “யுக்ரேனுடனான சண்டையால் ரஷ்யா நீண்டகால பிரச்னைகளை எதிர்கொள்வது அவசியம். மோதலில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா தற்போது உயர் தொழில்நுட்பம், ஆயுதப் பாகங்கள் மற்றும் எண்ணெய் விற்பனையை அதிகம் சார்ந்துள்ளது” எனக் கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, இந்தியா ரஷ்யாவிடம் நெருங்கிப் பழகுவது அன்பு அல்ல, அவசியம் என்கிறார். அமெரிக்காவுடன் சுமூகமான உறவு இல்லாத சூழலில், இந்தியாவிற்கு இது தனி இடத்தை அளிக்கும் ஆதரவாகும்.
“இது சரியான தேர்வு அல்ல, ஆனால் சிறந்த தேர்வு” என நேர்காணல் ஒன்றில் முன்னாள் இந்திய தூதர் ஜதிந்திரநாத் மிஸ்ரா கூறியுள்ளார்.
அமெரிக்காவை மீறிச் செல்லும் நாடுகள்?
பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மோதியின் எஸ்.சி.ஓ வருகை மற்றும் புதினின் டெல்லி வரவு, அமெரிக்காவின் உத்தரவுக்கு பிறகான தாக்கத்தின் தொடக்கமா?
இது அப்படியல்ல. பிரதமர் மோதி, புதின் மற்றும் ஷீ ஜின்பிங் ஒரே மேடையில் காட்சியளித்தது, வேறுமாதிரி தோன்றினாலும், இந்தியா பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் இன்னும் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. சீனாவின் வெறுப்புணர்வை சமாளிக்க இந்தியாவின் மூலோபாய மையமாக குவாட் உள்ளது. எனினும் இந்த மாற்றம் சுவாரஸ்யம் அளிக்கிறது.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரதமர் மோதி சமநிலை ஏற்படுத்தி, குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வர மறுக்கிறார். “கிடைத்த தருணத்தை வீணடிக்கக் கூடாது. என பேராசிரியர் அஹ்மது வலியுறுத்துகிறார். குறிப்பாக, நரேந்திர மோதி, ஷீ ஜின்பிங், இடையிலான முறைசாரா உச்சி மாநாடு தொடர வேண்டும். அப்போதுதான் இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசை கிடைக்கும் என்கிறார்.
டிரம்பின் தோல்வியும், இந்தியாவின் பொறுமையும்:
பட மூலாதாரம், Getty Images
விசித்திரம் என்னவென்றால், டிரம்ப் மிகவும் பயப்படுவதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தியாவுக்கு அதிக வரிகள் விதிப்பதன் மூலம், அமெரிக்கா அதனை சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அருகே தள்ளுகிறது. நீதிமன்றத்தில் தோல்வி அடைந்ததால், உலக வர்த்தக விதிகளை மாற்றுவதற்கான அவர்களது உரிமையும் குறையும்.
மிதமான கூட்டாளிகளுடன் அதிகமாக தொடர்பு கொள்ள முயற்சித்து, அவர் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கிறார். ஜப்பான், அமெரிக்காவில் அதிக முதலீடு செய்ய அழுத்தம் தரப்பட்டதால், வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளது.
இது, பாரம்பரியமாக அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருந்த நாடுகளும் இப்போது எதிர்ப்பு காட்ட தொடங்கியுள்ளன.
மாற்று வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக பிரதமர் மோதியை பாராட்ட வேண்டுமா? இந்தியா அமெரிக்காவை விட்டு இன்னமும் விலகவில்லை, குறைந்தது இப்போதைக்கு அது நிகழவில்லை. இரு நாடுகளின் கூட்டாண்மை மிக பரந்தது விரிந்தது மட்டுமன்றி ஆழமுமானதும்கூட.
எந்த தரப்பையும் தேர்வு செய்வது என்பதை விட தன் விருப்பப்படி செயல்படுவதே தனக்கு சவாலான ஒன்று என மோதி அரசு நன்கு அறிந்துள்ளது.
“இந்தியாவின் தற்போதைய நிலை கடினமாக உள்ளது. ஆனால், இந்தியா எதிர்கொள்ளும் பெரும்பாலான சவால்கள், தானே உருவாக்கப்பட்டவை அல்ல. டிரம்பின் உறுதித்தன்மை இல்லாத நடத்தையையும், அவரின் பரிமாற்ற நோக்கோடு நடத்தப்படும் கொள்கைகளையும் புரிந்துகொள்ளாததற்காகவும் மட்டுமே இந்தியாவை குறை கூற முடியும்.” என்கிறார் பேராசிரியர் காங்குலி.
உண்மையில், மோதியின் சீன பயணம் சொல்லும் செய்தி இதுதான் என பல பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர்.
“இது அமெரிக்காவிற்கான நினைவூட்டல். இந்தியாவுக்கு பல விருப்பங்கள் உள்ளன. இந்தியாவை அடிபணிய வைக்க முடியாது. இந்தியா, தூதரக சுயாட்சியை தனது வெளிநாட்டு கொள்கையின் மையமாக முன்வைக்கிறது என்பதும் வெளிப்பாடு” என அவர்கள் கூறுகின்றனர்.
டிரம்பை, நண்பர்களிடமிருந்து தன்னை பிரித்து அமெரிக்காவின் வீழ்ச்சியை வேகப்படுத்திய அதிபராக வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளலாம். மோதியை, இந்தியாவின் தனிப்பட்ட செயல்திறலை பாதுகாத்து, எந்த ஒரு சக்தியிடமும் அடிபணியாமல் செயல்படுபவராக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு