அரியலும்: “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், குழு தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: “தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தமிழ்நாட்டிலும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்தாய்வு செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கு நிலுவையிலும் உள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் இந்த நடவடிக்கையை தள்ளிப் போட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எதிர்பார்ப்பு. முதல்வர் இதனைப் பரிசீலிப்பார் என நம்பப்படுகிறது. அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் ஒன்றிணைந்து, இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். பிஹாரில் நடந்தது போல வாக்குத் திருட்டு போன்ற ஒரு மக்கள் விரோத நடவடிக்கை இங்கே அரங்கேறிவிடக் கூடாது. இதற்காக எல்லாக் கட்சிகளோடும் ஓரணியில் அதிமுகவும் திரள வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று சந்தித்து ஆறுதல் சொல்வதுதான் இவ்வளவு காலமாக அரசியல் தலைவர்கள் பின்பற்றி வரும் நடைமுறை. விஜய் அனைவரையும் சென்னைக்கு வரவழைத்துப் பார்த்தது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கிறது. இது குறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை.
நடைமுறை சாத்திய கூறுகளை ஆய்வு செய்துதான் 2026 தேர்தலில் மீண்டும் திமுகதான் வெற்றி பெறும் என மக்கள் விரும்புவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். திமுக தலைமையிலான கூட்டணி மட்டும்தான் இப்போது கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறிக் கிடக்கின்றன. அந்த உண்மையை கருத்தில் கொண்டே அவர் கருத்து சொல்லியிருக்கிறார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இப்போது புதிதாகத் தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்பதால், அவருடைய பங்குக்கு அவர் ஏதேனும் கருத்து சொல்ல வேண்டும் என்ற நிலையில், திருமாவளவன் 3 முறை எம்பியாக இருந்தும் இந்த தொகுதிக்கு எதுவும் செய்யலில்லை என சொல்லியிருப்பார். மற்றபடி அதில் கருத்து சொல்லுவதற்கு எதுவும் இல்லை” என்றார் திருமாவளவன்.