0
எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ரி20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் சாமிக்க கருணாரட்ன சகலதுறைகளிலும் பிரகாசிக்க, டீம் ப்ளூஸ் அணியை டீம் க்றீன்ஸ் அணி 4 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த துனித் வெல்லாலகே தலைமையிலான டீம் ப்ளூஸ் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.
பெத்தும் நிஸ்ஸன்க, விஷான் ஹலம்பகே ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2.6 ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பெத்தும் நிஸ்ஸன்க 10 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களையும் விஷான் ஹலம்பகே 4 பவுண்டறிகளுடன் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
குசல் பெரேரா (24), தனஞ்சய டி சில்வா (18) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஆனால் அவர்களது ஆட்டம் இழப்புடன் சீரான இடைவெளியில் ஏனைய விக்கெட்கள் சரிந்தன.
மத்திய வரிசையில் அஹான் விக்ரமசிங்க (11), பின்வரிசையில் அக்கில தனஞ்சய (19) ஆகிய இருவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரவீன் மெத்யூஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் துஷார 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
144 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் தலைமையிலான க்றீன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
லசித் குரூஸ்புள்ளே (10), காமில் மிஷார (15), சதீர சமரவிக்ரம (6), பானுக்க ராஜபக்ஷ (7), பவன் ரத்நாயக்க (2) ஆகிய முதல் ஐந்து வீரர்கள் 42 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழந்ததால் டீம் க்றீன்ஸ் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
எனினும் சாமிக்க கருணாரட்ன 6ஆவது விக்கெட்டில் கமிந்து மெண்டிஸுடன் 65 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் துஷான் ஹேமன்தவுடன் 37 ஓட்டங்களையம் பகிர்ந்து க்றீன்ஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
கமிந்து மெண்டிஸ் 4 பவுண்டறிளுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார். சாமிக்க கருணாரட்ன 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 47 ஓட்டங்களுடனும் துஷான் ஹேமன்த ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் தசுன் ஷானக்க 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெ;களையும் அக்கில தனஞ்சய 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.