பட மூலாதாரம், Serenity Strull/ BBC
-
- எழுதியவர், கேட்டி ரைட்
- பதவி,
-
உங்கள் கவனத்தை மேம்படுத்துவது முதல் விளையாட்டில் செயல்திறனை அதிகரிப்பது வரை, பின்னர் பயன்படுத்திக் கொள்வதற்காக தூக்கத்தைச் ‘சேமித்து’ வைப்பது பலவிதமான நன்மைகளைத் தருவதாக சில விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
தூக்கத்தைச் சேமித்து வைப்பதா? அப்படியென்றால் என்ன? இங்கு விரிவாகக் காண்போம்.
அலாரத்தை அணைத்துவிட்டு படுக்கையில் கூடுதலா ஒரு மணிநேரம் அல்லது கூடுதலாகச் செலவிடுவதற்கு வார இறுதி நாட்கள் ஒரு சரியான வாய்ப்பு. இப்படியாக, வார நாட்களில் இழந்த ஓய்வைப் பெறுவதற்காக வாரத்தின் இறுதியில் அதிக நேரம் தூங்குவது நம்மில் பலரும் பயன்படுத்தும் ஒரு பொதுவான உத்தி.
ஆனால், நாம் இதைத் தவறான கோணத்தில் சிந்திக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. தூக்கமில்லாத இரவுகளின் விளைவுகளை எதிர்கொள்ள உதவும் வகையில், ஒரு பரபரப்பான காலத்திற்கு முன்பே கூடுதல் அளவு தூக்கத்தைச் ‘சேமித்து’ வைப்பது சிறந்ததாக இருக்குமா?
உங்கள் தூக்கம் தடைபட வாய்ப்புள்ள ஒரு காலகட்டத்திற்கு முன்பாக, பல இரவுகளுக்கு அதிக நேரம் தூங்கும் ‘தூக்க சேமிப்பு’ என்பது ஒரு பயனுள்ள உத்தியாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மூளைக்குத் தேவையான முக்கிய வளங்களைப் பின்னர் பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைக்க உதவுகிறது என்றும், தூக்கமின்மை ஏற்படும் போது சிறந்த அறிவாற்றல் செயல்திறனை வெளிப்படுத்த உதவுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த யோசனை டிக்டோக்கில் சுகாதாரம் தொடர்பான ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அவர்கள் உளவியல் செயல்திறனை மேம்படுத்த அல்லது ஒரு பரபரப்பான காலத்திற்கு முன்பு ஒரு ‘பாதுகாப்பு வலையாக’ செயல்பட, நீண்ட தூரப் பயணங்கள் அல்லது பெரிய வேலை நிகழ்வுகளுக்கு முன்பு தூக்கத்தைச் சேமித்து வைப்பதை வலியுறுத்துகின்றனர். அப்படியானால், இது உண்மையில் வேலை செய்யுமா?
வங்கியில் இருந்து பணம் எடுக்கும்போது வங்கிக் கணக்கு விரைவில் பற்றாக்குறை ஆவதைத் தவிர்ப்பதற்காக, கணக்கில் பணத்தை நிரப்புவதை எடுத்துக்காட்டாகக் கொண்டால், தூக்க சேமிப்பு என்ற கருத்து 2009இல் அமெரிக்காவின் சில்வர் ஸ்பிரிங்கில் உள்ள வால்டர் ரீட் ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தூக்க ஆய்வாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்போது யூட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டிரேசி ரப் தலைமையிலான அந்தக் குழு, ராணுவ வீரர்கள் பணிகளுக்கு முன்பு தங்கள் விழிப்புணர்வை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பே தூங்கும் நேரத்தை நீட்டிப்பது உதவுமா என்று யோசித்தது. அவர்களின் ஆய்வு 24 ராணுவ வீரர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தது. அதில் ஒரு குழு ஓர் இரவுக்கு ஏழு மணிநேரம் படுக்கையில் செலவிட்டது. மற்றொரு குழுவினர் 10 மணிநேரம் செலவிட அனுமதிக்கப்பட்டனர். அடுத்த வாரத்தில் பங்கேற்பாளர்கள் ஒவ்வோர் இரவும் மூன்று மணிநேரம் மட்டுமே படுக்கையில் இருக்க அனுமதிக்கப்பட்டனர், பின்னர் மீண்டும் ஓர் இரவுக்கு எட்டு மணிநேரம் தூங்க அனுமதிக்கப்பட்டனர்.
இதன் முடிவுகள் ஈர்க்கக்கூடியதாக இருந்தன. கூடுதலாக மூன்று மணிநேரம் தூக்கத்தைச் சேமித்து வைத்திருந்தவர்கள், தூக்கக் கட்டுப்பாடு காலகட்டத்தில் தங்கள் விழிப்புணர்வு மற்றும் கவனத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் திறனில் குறைந்த சரிவையே வெளிப்படுத்தினர். தூக்கத்தைச் சேமித்து வைக்காதவர்களைவிட அவர்கள் இயல்பு நிலைக்கு வேகமாகத் திரும்பினர்.
பல்வேறு சூழல்களில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பிற்கால ஆராய்ச்சிகள், தூக்கமில்லாத இரவுகளுக்கு முன்னதாக உளவியல் மற்றும் உடல் ரீதியான தடுப்பு நடவடிக்கையாக தூக்கத்தைச் சேமிப்பது எவ்வாறு செயல்பட முடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட உதவியுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2023இல் மயாமியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மூன்று இரவுகளுக்கு சுமார் 90 நிமிடங்கள் தூக்கத்தைச் சேமிப்பது, அதைத் தொடர்ந்த இரண்டு வார இரவுப் பணி நேரங்களில் மேம்பட்ட செயல்திறனை பெறுவதற்கு வழிவகுத்தது கண்டறியப்பட்டது.
இந்த உத்தி விளையாட்டிலும் செயல்திறனை மேம்படுத்துவதில் நன்மை பயப்பதாகத் தெரிவதை பிற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. தூக்கத்தைச் சேமிப்பது படகோட்டும் பந்தயங்களின்போது போட்டியாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான உத்திதான். இது குறுகிய படகோட்டும் பந்தயங்களின்போது ஏற்படும் தவறுகள் மற்றும் எதிர்வினையாற்றும் நேரம் மீதான தூக்கமின்மையின் விளைவுகளைக் குறைப்பதாகத் தெரிகிறது.
மூன்று வாரங்களுக்கு ஓர் இரவுக்கு 10 மணிநேரமாக தூக்கத்தை நீட்டிக்கும் தொழில்முறை ரக்பி வீரர்கள் குறைந்த அளவிலான உடல் அழுத்தத்தை அனுபவிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம், ஒரு வாரத்திற்கு ஓர் இரவுக்கு ஒன்பது மணிநேர தூக்கம் டென்னிஸ் வீரர்களிடையே சர்வ் செய்யும் துல்லியத்தை மேம்படுத்தியது.
ஐந்து முதல் ஏழு வார காலத்திற்குத் தங்கள் தூக்கத்தை நீட்டித்த கூடைப்பந்து வீரர்கள், தங்கள் துல்லியத்தன்மை அதிகரிப்பதையும், வேகமாக ஓட முடிவதையும் கண்டனர்.
இது சேமிப்புப் பெட்டகமா அல்லது கடன் அட்டையா?
ஆனால், தூக்கத்தைச் சேமிக்கும் கருத்து சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது. நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டியிருக்கும் போது, பின்னர் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் தூக்கத்தை ‘சேமித்து வைப்பது’ சாத்தியம் என்பதை அனைத்து ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்வதில்லை. உடல் எதிர்காலத்திற்காக உண்மையாகவே தூக்க நேரத்தை ‘சேமித்து வைக்கிறதா’ அல்லது ஏற்கெனவே உள்ள தூக்க கடன் அல்லது தேவையை ஈடுசெய்கிறதா என்பதைப் பிரித்தறிவது கடினம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஷிஃப்ட் முறையில் பணியாற்றுவோரிடையே தூக்கத்தைச் சேமிப்பதற்கான ஆதாரங்கள் குறித்த ஓர் அறிவியல் ஆய்வு, சில ஆய்வுகள் நடத்தப்பட்ட விதத்தில் உள்ள சாத்தியமான சார்புத்தன்மையின் அபாயத்தை எடுத்துக் காட்டியுள்ளது. செயல்திறனில் காணப்படும் மேம்பாடுகள், முன்கூட்டியே தூக்க நேரத்தை நீட்டித்ததன் நேரடி விளைவு என்பதை அந்த ஆய்வு நிரூபிக்கவில்லை என்று அந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த வாதத்தின் மையத்தில், நம் உடலுக்கு ஏன் தூக்கம் தேவைப்படுகிறது என்ற கேள்வி உள்ளது.
“நான் ஏன் தூங்குகிறோம் என்பதற்குப் பல கோட்பாடுகள் உள்ளன” என்கிறார் ஹேக்கன்சாக் மெரிடியன் மருத்துவப் பள்ளியின் தூக்க மருத்துவத் துணைப் பேராசிரியர் பீட்டர் போலோஸ்.
“நமது தூக்கத்தின்போது வளர்சிதை மாற்றம், ஹார்மோன், நரம்பியல் மற்றும் அறிவாற்றல் தொடர்பான பல சிக்கல்கள் கையாளப்படுகின்றன. குறைந்தபட்சம் மூளையைப் பொறுத்தவரை, இது எண்ணங்களை ஒருங்கிணைப்பதற்கும் அல்லது முக்கியமான ‘விஷயங்களுக்கு’ முன்னுரிமை அளிப்பதற்குமான நேரம் என்று கருதப்படுகிறது.”
உடலியல் ரீதியாக, நம் உடலிலுள்ள டிரில்லியன்கணக்கான அணுக்களுக்குத் தூக்கம் அத்தியாவசியமானது. “உங்கள் அணுக்கள் அனைத்தும் புத்துணர்ச்சி பெறவும், பழுதுபார்த்துக் கொள்ளவும் ஆரோக்கியமான தூக்கம் தேவை,” என்கிறார் மின்னசோட்டா பல்கலைக் கழகத்தின் நரம்பியல் பேராசிரியர் மைக்கேல் ஹவல்.
“நாள் முழுவதும் நமது உடலிலும் மூளையிலும் பல்வேறு கழிவுப் பொருட்கள் சேர்கின்றன. தூக்கத்தின்போதுதான் நமது மூளை அவற்றை வெளியேற்றுகிறது.”
பெரும்பாலான பெரியவர்கள் இரவு ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்கும்போது சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்று ஹவல் கூறுகிறார். “நான்கு அல்லது ஐந்து மணிநேரத் தூக்கத்தில் சமாளிக்கும் பழக்கமுள்ளவர்கள் மிகவும் அரிதானவர்கள்.”
அதனால்தான் கடுமையான தூக்கமின்மை மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாக உள்ளது. “அனைவராலும் அவ்வப்போது ஒரு மணிநேரத் தூக்க இழப்பைச் சமாளிக்க முடியும். பொதுவாக எந்தப் பின்விளைவுகளும் இருக்காது. அது ஒரு நாள்பட்ட விஷயமாக மாறும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. அதன் விளைவுகள் காலப்போக்கில் குவிந்து, வேலை அல்லது சமூகத் தொடர்புகளில் செயல்திறன் குறைதல், உந்துதல் இல்லாமல் மற்றும் அறிவாற்றல் ரீதியாக மந்தமாக உணருதல் போன்ற சிக்கல்களை உள்ளடக்கியது,” என்கிறார் போலோஸ்.
போதுமான ஓய்வுநேரம் இல்லாவிட்டால், உங்கள் மூளையால் கழிவுகளை வெளியேற்ற முடியாது, அதாவது அடுத்த நாள் முக்கியமான விவரங்களில் கவனம் செலுத்துவதற்கும் அவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கும் நீங்கள் சிரமப்படக்கூடும் என்று ஹோவெல் கூறுகிறார்.
“நீங்கள் ஒரு மொழியையோ அல்லது ஓர் இசைக் கருவியையோ கற்க முயல்கிறீர்கள் என்றால், அல்லது ஒரு புதிய திறனைக் கற்க முயலும் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், உங்களால் கவனம் செலுத்தி தகவல்களை உள்வாங்கிக் கொள்வதில் சிக்கல் ஏற்படும்,” என்று அவர் கூறுகிறார்.
“ஆனால், அந்தத் தகவல்களை நீண்டகால சேமிப்புக்காகவும் பின்னர் பயன்படுத்துவதற்காகவும் குறியீடு செய்வதிலும் சிக்கல் ஏற்படும்” எனவும் தெரிவித்தார் அவர்.
ரூப் மற்றும் அவரது சகாக்கள், தூக்கத்தைச் சேமித்து வைப்பது, மூளையில் உள்ள நரம்பணுக்களின் கழிவுகளை அகற்றவும், ரத்த குளுக்கோஸ் குறையும்போது ஆற்றலுக்காக மூளை நம்பியிருக்கும் கிளைகோஜென் இருப்புகளை நிரப்பவும் மூளைக்கு அதிக நேரம் கொடுப்பதன் மூலம் செயல்படுவதாக நம்புகிறார்கள். இதனால், தூக்கமின்மை ஏற்படும்போது நமது மூளை அதைச் சமாளிக்கச் சிறந்த முறையில் தயாராகிறது.
தூக்கத்தை காலையில் சேமிப்பதா? இரவில் சேமிப்பதா?
நீண்ட தூர விமானப் பயணம், தேர்வுகளுக்காகப் படிப்பது அல்லது ஒரு காலக்கெடுக்குள் பணியை முடிப்பதற்காக இரவு தாமதமாக வேலை செய்வது போன்ற தூக்கக் குறைபாடு ஏற்படக்கூடிய காலகட்டத்தை எதிர்கொள்ளும் யாராக இருப்பினும், இந்த அணுகுமுறை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தூக்கத்தைச் சேமிக்கும் முறையை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.
“நீங்கள் தூக்கத்தைச் சேமிக்கும் முறையை முயன்று பார்க்க விரும்பினால், தூக்கமின்மைக்கு ஆளாக நேரிடும் என சந்தேகிக்கும் எந்தவொரு பணிக்கும் ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முன்பு, உங்களால் முடிந்தால் 30 முதல் 60 நிமிடங்கள் வரை கூடுதல் நேரம் தூங்குவதற்கு உங்களை நீங்களே அனுமதித்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த முறையைத் தொடங்குவதற்கு நான் பரிந்துரைக்கும் ஓர் அம்சம்,” என்கிறார் ஹோவெல்.
காலையில் அலாரத்தை தாமதமாக வைப்பது எளிது என்று அவர் நம்புகிறார். ஏனெனில், “பொதுவாக மக்கள் சீக்கிரம் தூங்குவதைவிட, தாமதமாகக் கண்விழிப்பது எளிது. ஆனால், இது அனைவருக்கும் பொதுவானது இல்லை.”
போலோஸ், இதற்கு மாறாக, சிலருக்கு சீக்கிரம் படுக்கைக்குச் செல்வது சிறந்த உத்தியாக இருக்கலாம் என்கிறார். “உங்கள் உடல் காலை 6 மணிக்கு விழித்தெழப் பழகியிருந்தால், அலாரத்தை காலை 7 மணிக்கு வைக்கலாம். ஆனால் எப்படியும் நீங்கள் காலை 6 மணிக்கே விழித்தெழ நேரிடலாம்,” என்று கூறுகிறார் போலோஸ்.
ஹோவெலின் கூற்றுப்படி, “உங்கள் இரவு நேரத் தூக்கத்தைப் பாதிக்காத வரை, நீங்கள் பின்னர் தூங்கப் போகிறீர்கள் என்றால், பகல் நேரத் தூக்கம் என்பது தூக்க கணக்கில் சிறிதைச் சேர்ப்பதற்கான மிகவும் பயனுள்ள வழியாக இருக்கும்.”
பட மூலாதாரம், Getty Images
இந்த விஷயத்தில் ஆராய்ச்சியாளர்களால் ஒருமித்த கருத்தை எட்ட முடியாத ஓர் அம்சம் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே குறிப்பிடத்தக்க அளவு தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டு, தூக்கக் கடனில் இருக்கும்போது, தூக்கத்தைச் சேமித்து வைப்பது பயனுள்ளதாக இருக்குமா என்பதே அது.
ரூப் மற்றும் அவரது சகாக்கள் அது சாத்தியம் என வாதிடுகின்றனர். ஆனால், “தூக்கக் கடனை கூடிய விரைவில் முடித்துவிட வேண்டும்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் நரம்பியல் பேராசிரியரான எலிசபெத் க்ளெர்மென் இந்தக் கருத்தை மறுக்கிறார்.
அதுகுறித்துப் பேசியபோது, “தூக்கத்தைச் சேமித்து வைக்க முடியும் என்பதைக் காட்ட, ஒருவர் சோர்வாக இல்லாதபோதும் தூங்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை,” என்றார் அவர்.
பங்கேற்பாளர்களுக்கு படுக்கையில் அதிக நேரம் வழங்கப்பட்டும், அவர்களால் நீண்ட நேரம் தூங்க முடியவில்லை என்பதை நிரூபித்த பரிசோதனைகளையும் எலிசபெத் மேற்கோள் காட்டுகிறார். அதனால்தான் தூக்கம் என்பது உண்டியலில் சேமிப்பதைவிட ஒரு கடன் அட்டையைப் போன்றது என்று அவர் வாதிடுகிறார். அதோடு, “வேறுவிதமாகக் கூறுவதெனில், உங்களால் கடன் வாங்க முடியும், ஆனால், உபரியை உருவாக்க முடியாது,” என்றும் விளக்கினார்.
தூக்கத்தைச் சேமித்து வைப்பது பயனுள்ளதாக இருக்குமென மக்கள் நம்பினால், அவர்கள் முன்பு நன்றாகத் தூங்கியிருந்தால், தங்களைத் தூக்கமின்றி வைத்துக் கொள்வது பரவாயில்லை என்று கருதக்கூடும் என்று எலிசபெத் கவலைப்படுகிறார்.
“அதாவது, அவர்கள் இப்போது தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கும் முக்கியமான ஒன்றை இழக்கிறார்கள்” எனக் கூறிய அவர், இருப்பினும் இழந்த தூக்கத்தை ஈடு செய்வதை ஆதரிக்கிறார். ஆனால், 45 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் மதிய தூக்கத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கிறார்.
ஏனெனில், அவை தூக்க மந்தநிலையை (ஸ்லீப் இனர்ஷியா) ஏற்படுத்தக் கூடும். இது, ஆழ்ந்த தூக்கத்திற்குப் பிறகு நீங்கள் எழும்போது ஏற்படும் மந்தமான உணர்வுக்கான தொழில்நுட்பச் சொல்லாகும்.

எதிர்காலத்திற்காக நாம் தூக்கத்தைச் சேமித்து வைத்தாலும் சரி, அல்லது நமக்கு நாமே செலுத்த வேண்டிய தூக்கக் கடனை அடைத்தாலும் சரி, ஒவ்வோர் இரவும் கூடுதலாக அரை மணிநேரம் தூங்குவது நன்மை பயக்கும் என்று தெரிகிறது (ஒருவேளை நீங்கள் வழக்கமாக ஓர் இரவுக்கு 12 மணிநேரத்திற்கும் மேலாகத் தூங்க வேண்டியிருந்தால் மட்டும், அது ஓர் அடிப்படைப் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் ஹோவெல்).
தூக்கத்தைச் சேமித்து வைப்பது வேலை செய்தாலும்கூட, அதுவொரு நீண்டகால தீர்வாகக் கருதப்படக்கூடாது என்கிறார் போலோஸ். தூக்கப் பிரச்னைகள் அனைத்திற்கும் அல்லது வேலை அல்லது சமூகம் உங்கள் மீது சுமத்தும் கோரிக்கைகள் அனைத்திற்குமான தீர்வாக இதை நம்ப வேண்டாம் என்று அவர் எச்சரிக்கிறார். உங்களுக்கும் தூக்கத்திற்கும் இடையிலான உறவை மாற்றி அமைத்துக்கொள்வது ஒரு சிறந்த நீண்டகால விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“படுக்கைக்குச் செல்லும்போதும் விழித்தெழும் நேரங்களிலும் ஒரு வழக்கமான அட்டவணையைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். போதுமான, தரமான, அளவான தூக்கத்தைப் பெறுவதை உறுதி செய்யுங்கள்,” என்று போலோஸ் அறிவுறுத்துகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு