பட மூலாதாரம், Getty Images
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 17) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தப்பிக்கும் மும்பை இந்தியன்ஸ்
இந்த வெற்றி மூலம் மும்பை அணி மெல்ல ப்ளே ஆஃப் சுற்றை நோக்கி தன்னைப் பாதுகாப்பாக நகர்த்தியுள்ளதோடு, தொடர்ந்து 2வது வெற்றியையும் பெற்றுள்ளது. ஏழு போட்டிகளில் 4 தோல்வி, 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் மும்பை 7வது இடத்தில் இருக்கிறது.
இதில் நிகரரன்ரடே் +0.239 என இருப்பது கூடுதல் சாதகம். இன்னும் மும்பை அணிக்கு 7 போட்டிகள் மீதம் இருப்பதால், அதில் குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வெற்றி கட்டாயம். அப்போதுதான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.
ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. கடந்த 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது, 7 போட்டிகளில் 2 வெற்றி 5 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் 7 போட்டிகள் இருப்பதால், அதில் குறைந்தபட்சம் 6 வெற்றிகள் பிரமிப்பூட்டும் வகையில் தேவை. அல்லது 7 போட்டிகளிலும் வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும். அடுத்து வரும் போட்டிகளில் 2 தோல்விகளைச் சந்தித்தாலே சன்ரைசர்ஸ் அணியின் பயணம் லீக் சுற்றோடு முடிந்துவிடும்.
மெதுவான ஆடுகளம்
பட மூலாதாரம், Getty Images
மும்பை அணியின் வெற்றியில் ஆடுகளத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. மெதுவான, மந்தமான ஆடுகளத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியது வெற்றிக்குக் காரணம்.
குறிப்பாக ஆஃப் ஸ்பின்னர் வில் ஜேக்ஸ் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 36 ரன்களையும் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
பும்ரா 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். போல்ட் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார்.
பொறுமை, நிதானம் இல்லை
சன்ரைசர்ஸ் அணி சிவப்பு மண் கொண்ட பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஆடிப் பழகியவர்கள். இதுபோன்ற மெதுவான ஆடுகளத்தில் அதிரடி பேட்டிங் மனப்பான்மை கொண்ட அந்த பேட்டர்களால் விளையாட முடியவில்லை. வான்கடே ஆடுகளம் மோசமானது என்று நிராகரிக்க முடியாது, இந்த ஆடுகளத்திலும் குறைந்தபட்சம் 180 ரன்கள் வரை சராசரியாக சேர்க்க முடியும்.
ஆனால் இந்த ஆடுகளத்தில் நிதானமாக பேட் செய்து பந்துகளைக் கணித்து ஆட வேண்டும். அந்தப் பொறுமையும் நிதானமும் சன்ரைசர்ஸ் பேட்டர்களிடம் இல்லை. பவுலர்கள் கைகளில் இருந்து ரிலீஸ் ஆகும் பந்து பேட்டரை நோக்கி வேகமாக வராது, நினைத்த வேகத்தைவிடக் குறைவாகவும், சற்று ஸ்விங்குடன் அல்லது டர்ன்னுடன் வரும் என்பதால் பேட்டர்கள் கவனத்துடன் ஆட வேண்டும். ஆனால், சன்ரைசர்ஸ் பேட்டர்கள் யாரும் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடவில்லை, ஒருவர்கூட அரைசதம் அடிக்கவில்லை.
அபிஷேக் சர்மா எடுத்த 40 ரன்கள்தான் அதிகபட்சம். அடுத்தார்போல கிளாசன் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்டர்கள் அனைவரும் 25 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்தனர். நிதானமாக பேட் செய்திருந்தால் கூடுதலாக 20 முதல் 25 ரன்களை சேர்த்திருக்கலாம், ஆட்டத்தை நெருக்கடியாகக் கொண்டு சென்றிருக்கலாம்.
அதிர்ஷ்டத்தை தவறவிட்ட சன்ரைசர்ஸ்
பட மூலாதாரம், Getty Images
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவருக்கும் நேற்றைய ஆட்டம் சிறப்பான தொடக்கமாக இல்லை. இருவரும் நினைத்து போல ஷாட்களை அடிக்க முடியவும் இல்லை.
இதில் டிராவிஸ் ஹெட் ரன்சேர்க்க மிகவும் திணறினார், அபிஷேக் ஓரளவு சமாளித்து பவுண்டரிகளை விளாசினார். அதிலும் தீபக் சஹர் பந்துவீச்சில் அபிஷேக் சர்மா அடித்த கேட்சை வில் ஜேக்ஸ் தவறவிட்டார், டிராவிஸ் ஹெட்டுக்கு கரன் சர்மா ஒரு கேட்சை கோட்டை விட்டார்.
இந்த இரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைத்தும் இருவரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி சன்ரைசர்ஸ் 46 ரன்கள் சேர்த்தது.
ஹர்திக் பாண்டியா வீசிய 10வது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஸ்குயர் லெக் திசையில் அடித்த ஷாட் கேட்சானது. அப்போது அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ஹர்திக் வீசியது நோபால் என அறிவிக்கப்பட்டதால் ஹெட் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். டிராவிஸ் ஹெட்டுக்கு 2வது அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தும் அவரால் நிலைத்து பேட் செய்ய முடியவில்லை.
மந்தமான பேட்டிங்
பவர்ப்ளேவில் பும்ரா 2 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து சன்ரைசர்ஸ் ரன்ரேட்டை சுருக்கினார். கரன் சர்மாவுக்கு விரலில் ஏற்பட்ட காயத்தால் பந்துவீச முடியாத சூழலில் வில் ஜேக்ஸ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஜேக்ஸ் தனது 2வது ஓவரிலேயே இஷான் கிஷன் விக்கெட்டையும், 12வது ஓவரில் டிராவிஸ் ஹெட்(28) விக்கெட்டையும் வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணிக்கு அதிர்ச்சியளித்தார். அபிஷேக் சர்மா 40 ரன்களில் பாண்டியா ஓவரிலும், இஷான் கிஷன் 3 ரன்களில் ஜேக்ஸ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.
ஆடுகளம் பேட் செய்யக் கடினமாக இருந்தது, பந்து பேட்டரை நோக்கி மெதுவாக வந்தது என்பது சரியான கூற்றுதான். ஆனால், பேட்டர்கள் சற்று பொறுமையுடன் ஷாட்களை நேர்த்தியாக அடித்திருந்தால் விக்கெட்டை காப்பாற்றியிருக்க முடியும். சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.
சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் நேற்று மிக மந்தமாக பேட் செய்தனர். பேட்டர்களிடம் இருந்து பவுண்டரி, சிக்ஸர் வராததுதான் ஸ்கோர் உயராததற்கு முக்கியக் காரணம். 8 முதல் 15வது ஓவர்களுக்கு இடையே சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் 4 பவுண்டரி மட்டுமே அடித்திருந்தனர். நிதிஷ் ரெட்டி 21 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்ததில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார். அவரும் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
காப்பாற்றிய கிளாசன்
பட மூலாதாரம், Getty Images
ஆனால் கிளாசன் களத்தில் இருந்ததால் ஓரளவுக்கு ஸ்கோர் உயர்ந்தது. கிளாசன், அனிகேத் வர்மா இருவரும் கடைசி 3 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்ததுதான் சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களை கடக்க உதவியது.
கிளாசன் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். அனிகேத் வர்மா தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களையும், கம்மின்ஸ் ஒரு சிக்ஸரையும் விளாசவே சன்ரைசர்ஸ் 162 ரன்கள் சேர்த்தது.
ஆனால், சன்ரைசர்ஸ் அணி சேர்த்தது இந்த ஆடுகளத்தில் டிபெண்ட் செய்யப் போதுமானது அல்ல. இன்னும் கூடுதலாக 25 ரன்கள் சேர்த்திருந்தால் எதிரணிக்கு நெருக்கடி அளித்திருக்கலாம்.
மும்பை அதிரடித் தொடக்கம்
இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய ரோஹித் சர்மா, ரெக்கில்டன் ஜோடி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா இந்த சீசனில் முதல் அரைசதத்தை இன்னும் அடிக்கவில்லை என்ற போதிலும், 3 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தி 26 ரன்களில் கம்மின்ஸ் பந்தவீச்சில் ஆட்டமிழந்தார். ரெக்கில்டன் தொடக்கத்தில் திணறியபோதும், மலிங்கா ஓவரில் இஷான் 3 பவுண்டரிகளை விளாசினார்.
ஜீசன் அன்சாரி பந்துவீச்சில் ரெக்கில்டன் அடித்த ஷாட் கேட்சானது. ஆனால், விக்கெட் கீப்பிங் செய்த கிளாசனின் கைகள் ஸ்டெம்புக்கு வெளியே வந்ததால் நோபால் என அறிவிக்கப்பட்டது. இதனால் பெவிலியன் சென்ற ரெக்கில்டன் திரும்ப அழைக்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட ரெக்கில்டன் 31 ரன்னில் ஹர்சல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சிரமப்படாத வெற்றி
பட மூலாதாரம், Getty Images
மூன்றாவது விக்கெட்டுக்கு வில் ஜேக்ஸ், சூர்யகுமார் ஜோடி 52 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் வில் ஜேக்ஸ் 36 ரன்னில் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார்.
திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஜோடி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி அணியைச் செலுத்தினர். ஹர்திக் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 9 பந்துகளில் 21 ரன்கள் எனச் சிறிய கேமியோ ஆடி ஆட்டமிழந்தார். திலக் வர்மா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
‘பேட் செய்யக் கடினமாக இருந்தது’ – ஹர்திக்
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “நாங்கள் மிகவும் ஸ்மார்ட்டாக, துல்லியமாகப் பந்து வீசினோம் என நினைக்கிறேன். திட்டங்களை சரியாகச் செயல்படுத்தியுள்ளோம். ஆடுகளம் பேட்டிங் செய்யக் கடினமாக இருந்தது, சில பந்துகளை விளையாடவே முடியவில்லை. இருப்பினும் சில நல்ல ஷாட்களை அடித்தோம்.
ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருந்தது. வேகத்தைக் குறைத்து யார்க்கர் பந்துகளை வீச வைத்தோம், வேகத்தைக் குறைத்து பந்துவீச வைத்தவுடன் நல்ல பலன் கிடைத்தது,” என்று தெரிவித்தார்.
அதனால்தான் பவர்ப்ளே முடிந்தவுடன் ஜேக்ஸை அழைத்து பந்துவீச வைத்ததாகக் கூறிய ஹர்திக், “அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எங்கள் வெற்றிக்கு பந்துகளும், ரன்களும் சரிசமமாக இருந்தபோது, முன்னெடுத்துச் செல்ல சில பவுண்டரிகள், சிக்ஸர்கள் இருந்தால் பதற்றம் குறையும் என்பதால், சிறிய கேமியோ ஆடி வெற்றியை நோக்கி நகர்த்தினோம்,” எனத் தெரிவித்தார்.
அடுத்த முக்கிய ஆட்டங்கள்
பட மூலாதாரம், Getty Images
இன்றைய ஆட்டம்
- ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம்: பெங்களூரு
- நேரம்: இரவு 7.30
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- நாள் – ஏப்ரல் 20
- இடம் – மும்பை
- நேரம்- இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே
- நாள் – ஏப்ரல் 20
- இடம் – மும்பை
- நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
- ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்
- நாள் – ஏப்ரல் 20
- இடம் – நியூ சண்டிகர்
- நேரம்- மாலை 3.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு?
- நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்)
- சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)
- மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்)
பர்பிள் தொப்பி யாருக்கு?
- நூர் அகமது (சிஎஸ்கே) 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
- குல்தீப் யாதவ் (டெல்லி) 11 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
- கலீல் அகமது (சிஎஸ்கே) 11 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு