படக்குறிப்பு, சதம் அடித்த மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி தனது தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியுள்ளது. 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோற்றிருந்த அந்த அணி, நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 246 ரன் இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து ரசிகர்களை வியக்க வைத்தது.
அந்த அணியின் தொடக்க ஜோடியான அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட், இந்த தொடரில் முதன் முறையாக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, அபிஷேக் சர்மா சிக்சர் மழை பொழிந்து சாதனை சதத்துடன் அந்த அணியை எளிதாக வெற்றி பெறவும் வைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப் பட்டியலிலும் ஏற்றம் கண்டுள்ளது. அதிரடியால் மிரட்டிய அபிஷேக் சர்மா பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அதிரடி
ஐதராபாத்தில் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக இருந்த அந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டியது. முந்தைய போட்டியில் வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோல்வியில் தள்ளிய இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே மிரட்டினார்.
முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பிரப்சிம்ரன் பவுண்டரிக்கு விரட்ட, அவரது அடுத்த ஓவரின் முதல் பந்தை கிரீசுக்கு வெளியே வந்து சிக்சருக்கு விளாசினார் ஆர்யா. ஷமியின் அடுத்த பந்தில் அவர் பவுண்டரி அடித்தார். இருவரது அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரிலேயே 50 ரன்களைக் கடந்தது.
ஆனால் ஆர்யாவின் வாண வேடிக்கை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சன்ரைசர்ஸ் அணியில் வழக்கமாக இறுதிக்கட்ட ஓவர்களை வீசும் ஹர்ஷல் படேல் நேற்றைய ஆட்டத்தின் போக்கால் தொடக்கத்திலேயே கொண்டு வரப்பட்டார். அதற்கு சன்ரைசர்ஸ் அணிக்க பலனும் கிடைத்தது. 13 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களை விளாசியிருந்த ஆர்யா, ஹர்ஷல் படேல் பந்தில் நிதிஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாசும் தொடக்கம் முதலே பட்டாசாய் வெடித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரப்சிம்ரன்
ஸ்ரேயாஸ் விளாசல்
பஞ்சாப் கிங்ஸ் அணி தனக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. ஆர்யா அவுட்டான பிறகு ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரனும் கேப்டன் ஸ்ரேயாசும் ரன்ரேட்டை அதிகபட்ச நிலையில் அப்படியே பராமரித்தனர். இருவரது பேட்டில் இருந்தும் பந்துகள் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் சென்ற வண்ணம் இருந்தன.
ஸ்ரேயாஸ் தனது ஐபிஎல் வரலாற்றில் மிக வேகமான அரைசதத்தை எட்டினார். 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் அரைசதம் கண்டார். மறுபுறம் சன்ரைசர்ஸ் சார்பில் ஐபிஎல் அறிமுகம் கண்ட ஈஷான் மலிங்கா தனது முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரனை ஆட்டமிழக்கச் செய்தார். பிரப்சிம்ரன் 23 பந்துகளில் 1 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களை சேர்த்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஸ்ரேயாஸ்
ஹர்ஷல் படேல் இம்பாக்ட்
சன்ரைசர்ஸ் அணிக்கு தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்த ஹர்ஷல் படேல் இறுதிக்கட்ட ஓவர்களிலும் தாக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 250 ரன்களை எளிதாக தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அதற்கு அணை போட்டவர் ஹர்ஷல் படேல்தான். ஆட்டத்தின் 15-வது ஓவராக தனது மூன்றாவது ஓவரை வீச வந்த ஹர்ஷல் படேல் அதிரடியில் எதிரணிகளை மிரட்டக் கூடிய ஷஷாங்க் சிங் விக்கெட்டை வீழ்த்தினார்.
அதேபோல், 18-வது ஓவரில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மற்றும் தடாலடி வீரர் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் ஹர்ஷல் பெவிலியனுக்கு அனுப்பினார். ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 82 ரன் எடுத்தார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார்.
முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு அவரது அணி ரசிகர்களை குஷிப்படுத்தினார். முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை குவித்தது. ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹர்ஷல் படேல் (பவுலர்)
சன்ரைசர்ஸ் பதிலடி
246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா ஜோடி இந்த சீசனில் முதன் முறையாக சிறப்பான தொடக்கம் தந்தது. யான்சென் வீசிய இரண்டாவது ஓவரில் அபிஷேக் சர்மா ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி வாண வேடிக்கையை தொடங்கி வைத்தார்.
அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். நடப்பு சீசனில் முந்தைய போட்டிகளில் ஜொலிக்காத அபிஷேக் அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் போட்டியில் அதிரடியில் மிரட்டினார். அவர் 2 முறை அவுட்டாகும் வாய்ப்பில் இருந்து தப்பவும் செய்தார்.
28 ரன்களை எடுத்திருந்த போது டீப் பாயிண்டில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை யாஷ் தாகூர் தவறவிட்டார். அதேபோல், 57 ரன்கள் எடுத்திருந்த போது, சாஹல் வீசிய ஓவரில் அபிஷேக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சாஹல் தவறவிட்டார். இரு கண்டங்களில் இருந்தும் தப்பிய அபிஷேக் தனது அதிரடியை ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்தில் தொய்வடைய விடவே இல்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட் – மேக்ஸ்வெல் வாக்குவாதம்
19 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து அவர் அசத்தினார். அபிஷேக் – ஹெட் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 7.3 ஓவரிலயே சதத்தை எட்டிவிட்டது. டிராவிட் ஹெட் 31 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் மேக்ஸ்வெல் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அப்போது மேக்ஸ்வெல் ஏதோ சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்டாய்னிஸ் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார்.
சேஸிங்கில் 9-வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்குத் தேவையான ரன்னில் பாதியை எடுத்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி 171 ரன்களை எட்டிய போது ஒருவழியாக முதல் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. 13-வது ஓவரில் சாஹல் வீசிய இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் அடித்த பந்தை மேக்ஸ்வெல் கேட்ச் செய்தார். எனினும், இதனை பெரிய அளவில் கொண்டாடும் மனநிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இருக்கவில்லை. காரணம், முதல் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்திய போது சன்ரைசர்ஸ் அணி சாத்தியமில்லாததாக கருதப்பட்ட வெற்றியை சாத்தியமான ஒன்றாக ஆக்கியிருந்தது. டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்களை சேர்த்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட்
அபிஷேக் சர்மா சதம்
டிராவிஸ் ஹெட் அவுட்டானதும் அடுத்த 4 பந்துகளில் அபிஷேக் சர்மா சதம் அடித்தார். ஐபிஎல்லில் அவரது முதல் சதம் இதுவாகும். தொடக்கம் முதலே வாண வேடிக்கை நிகழ்த்திய அபிஷேக் 40 பந்துகளில் தனது முதல் சதத்தை அதுவும், சேஸிங்கில் அடித்தார். சதம் அடித்ததும் தனது ஸ்டைலில் கொண்டாடினார். அத்துடன், ‘இது ஆரஞ்சுப் படைக்கானது’ என்று ஒரு பேப்பரை பெவிலியனை நோக்கி காட்டினார்.
இந்த சீசனில் முந்தைய போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத அபிஷேக் இந்தப் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 55 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 10 சிக்சர், 14 பவுண்டரிகளை விளாசி, 141 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த கட்டத்தில் ஆட்டம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது.
கிளாசனும், இஷான் கிஷனும் எளிதான வெற்றியை விரைவிலேயே தங்களது அணிக்கு பெற்றுக் கொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை 9 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே சன்ரைசர்ஸ் அணி எட்டியது. சன்ரைசர்ஸ் வெற்றிக்கு வழிவகுத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அபிஷேக் சர்மா
சாதனைமேல் சாதனை
அபிஷேக் சர்மா அடித்த 141 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன் லோகேஷ் ராகுல் அடித்த 132 ரன்களே ஐபிஎல்லில் இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.
அபிஷேக் சர்மா சேர்த்த 141 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணி பேட்டர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.
அபிஷேக் சர்மா மூன்றாவது முறையாக 20 பந்துகளுக்குள் அரைசதம் கண்டுள்ளார். அந்த வரிசையில், நிகோலஸ் பூரனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அவர் இருக்கிறார்.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. அந்த வகையில், ஆர்சிபி அணியுடன் இந்த சாதனையை அந்த அணி பகிர்ந்து கொண்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அபிஷேக் சர்மா
இன்றைய ஆட்டங்கள்
முதல் ஆட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இடம்: ஜெய்ப்பூர்
நேரம்: மாலை 3.30
இரண்டாவது ஆட்டம்
டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
இடம்: டெல்லி
நேரம்: இரவு 7.30
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்
நாள் – ஏப்ரல் 14
நேரம்- இரவு 7.30
இடம் – லக்னெள
ஆரஞ்சு தொப்பி யாருக்கு?
நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)- 349 ரன்கள் (6 போட்டிகள்)