• Sun. Feb 22nd, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இங்கிலாந்திடம் இலங்கை வீழ்ந்தது எப்படி? – ஆல் ரவுண்டராக பங்களித்த வில் ஜேக்ஸ்

Byadmin

Feb 22, 2026


வில் ஜேக்ஸ் - இங்கிலாந்து - இலங்கை - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

பல்லேகலே. இங்கிலாந்தை 146 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி மகிழ்ச்சியாக டிரஸிங் ரூமுக்குள் நுழைந்தது இலங்கை அணி. அப்போது பேசிய 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை ஸ்பின்னர் டுனித் வெல்லாலகே, “இங்கிலாந்தை இந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தியது நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருந்தார். வர்ணனையாளர்களும் அவர்களின் பந்துவீச்சை பாராட்டியிருந்தார்கள்.

147 ரன்கள் தான் இலக்கு. சராசரியாக ஓவருக்கு 7.35 ரன்கள் தேவை. பல்லேகலேவில் இங்கிலாந்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றை இலங்கை அணி வெற்றியோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறான விஷயங்களே அங்கு அரங்கேறின. இலங்கை வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.

இந்த சூப்பர் 8 சுற்று தொடங்குவதற்கு முன்பு இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு பற்றி பிபிசி தமிழில் எழுதியிருந்த தமிழ்நாடு முன்னாள் கிரிக்கெட் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன், “இலங்கை அணியின் பந்துவீச்சு எப்படியும் நன்றாகவே இருக்கும். ஆனால், அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவது அவர்கள் பேட்டர்களின் கையில் தான். அதிலும் குறிப்பாக பதும் நிசங்காவின் கையில் தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னதைப் போலவே பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருக்க, பேட்டர்கள் நல்லதொரு பங்களிப்பைக் கொடுக்கத் தவறிவிட்டார்கள். அதிகம் கவனம் பெற்றிருந்த பதும் நிசங்காவே அந்த அணியின் விக்கெட் வீழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கூட அமைக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ, 51 ரன்களில் தோல்வியை சந்தித்தது இலங்கை.

மறுபக்கம், இங்கிலாந்து அணி பந்துவீச்சில் கொடுத்த செயல்பாட்டை நிச்சயம் குறிப்பிடவேண்டும். அவர்கள் அடித்த ஸ்கோர் போதுமானதாக இருக்குமா என்று பல கேள்விகள் எழுந்த நிலையில், முதல் ஓவரில் இருந்து சிறப்பாகப் பந்துவீசி தொடர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தது. பந்துவீசிய அனைவருமே சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

By admin