டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து பாகிஸ்தானிலும் அதிக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இதை ‘பாகிஸ்தானின் வெற்றி’ என்று விவரிக்கின்றனர்.
ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷீத் லத்தீப், “இந்த முடிவுக்கு, பாகிஸ்தானுக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசாங்கங்கள் தலையிட்டதால், இது விளையாட்டைத் தாண்டிச் சென்றுவிட்டது.”
“பாகிஸ்தானின் இந்த முடிவு வங்கதேசம் மற்றும் நமது பிற கிரிக்கெட் உறுப்பினர்களின் நலனுக்காக அவசியமானது, ஏனெனில் இந்த உறுப்பு நாடுகளும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து பணத்தைப் பெறுகின்றன,” என்றார்.
“நாங்கள் அவர்களுக்காக இதைச் செய்தோம். பாகிஸ்தான் ஐ.சி.சி-யை மண்டியிட வைத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் நமது முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்” என்று லத்தீஃப் கூறினார்.
“நாங்கள் மிகவும் முதிர்ச்சியான முடிவை எடுத்தோம். எங்கள் நட்பு நாடுகளுக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாட முடிவு செய்தோம். நாங்கள் விரும்பினால், வருவாய் பகிர்வில் எங்கள் பங்கை அதிகரிக்கக் கோரியிருக்கலாம், ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை, கண்ணியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்” என்று கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத் கூறினார்.
“இப்போது இந்த விஷயத்தில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது, இந்த விஷயத்தை இத்துடன் முடிக்க வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றோம் என்றோ அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றோ யாரும் சொல்லக்கூடாது” என்று அகமது ஷாசாத் கூறினார்.
“இந்தியாவுக்கு எங்களுடன் பிரச்னைகள் இருந்தால், அது எங்களுடனான போட்டியை விளையாட மறுத்திருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஐ.சி.சி பாகிஸ்தானை போட்டியில் விளையாட வற்புறுத்தியது, அதாவது பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் போட்டியில் செயல்பட முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கிரிக்கெட்டுக்கு நாங்கள் முக்கியம், எங்கள் நட்பு நாடுகளின் நலனுக்காக இந்த முடிவை எடுத்தோம். இது மிகவும் நல்ல முடிவு, இந்த விஷயத்தில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்” என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் பக்த் கூறினார்.
பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Images
‘ஐசிசிக்கு நன்றி’
இந்தியாவுடன் ஒரு போட்டியில் விளையாட பாகிஸ்தான் எடுத்த முடிவு குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “ஐசிசி பிரதிநிதியால் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவுகளைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பேச்சுவார்த்தைகள் ஐசிசி தலைவரின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டன. லாகூருக்கு சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேசிய பிரதிநிதிகளாலும் இது சாத்தியமானது. வங்கதேசம் கிரிக்கெட் வாரியத்துடனும் அவர்கள் பேசினார்கள்.”
“இது ஒரு நல்ல தீர்வு. இதற்கு ஐசிசி முழு பாராட்டும் பெற வேண்டும். இந்த முயற்சியை எடுத்து பாகிஸ்தானை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்ததற்காக ஐசிசிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
வங்கதேசத்தைப் பற்றி குறிப்பிட்ட ராஜீவ் சுக்லா, “இந்த உரையாடலின் மூலம், வங்கதேசத்தின் உணர்வுகளும் மதிக்கப்பட்டுள்ளன, அவர்களின் வாரியமும் சிறிது நிம்மதியைப் பெற்றுள்ளது, அவர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஐ.சி.சியின் முயற்சிகளை அவர்கள் உண்மையிலேயே பாராட்டியுள்ளனர்” என்றார்.
“பிசிசிஐ மிகவும் வலுவான கிரிக்கெட் அமைப்பாகும், இருப்பினும் அது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை (பிசிபி) சார்ந்துள்ளது. இந்தப் போட்டியை விளையாடுவதா? இல்லையா? என்பதை பிசிபி தான் தீர்மானிக்கிறது. இந்தப் போட்டியை விளையாடாததற்காக விதிக்கப்படும் அபராதத்தை செலுத்த பாகிஸ்தானிடம் பணம் இருக்காது என்பதால், இந்தப் போட்டியை விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. பிசிசிஐக்கு லாபம் தான் முக்கியம்” என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கூறினார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதுல் வாசன், “இது ஒரு வகையான நாடகம். சில நேரங்களில் அவர்கள் மறுக்கிறார்கள், கோபப்படுகிறார்கள், சில சமயங்களில் ஒப்புக்கொள்கிறார்கள், எல்லாம் தங்கள் சொந்த திருப்திக்காக செய்யப்படுகிறது. இந்தியா எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை ஐ.சி.சி-க்கு நாங்கள் காட்டியுள்ளோம். அதனால்தான் அவர்கள் மனதில் இந்த தவறான எண்ணங்கள் அனைத்தும் உள்ளன. இதற்கு எந்த தீர்வும் இல்லை.” என்று கூறினார்.
பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Image
படக்குறிப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி
பாகிஸ்தான் தனது முடிவை மாற்றியது எப்படி?
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளித்தார். நட்பு நாடுகளின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பிரதிநிதிகள் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடையேயான உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஷாபாஸ் ஷெரீஃப்பிடம் தெரிவித்தார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு விடுத்த முறையான கோரிக்கைகள் மற்றும் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற நாடுகளிடமிருந்து பெறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசு கூறுகிறது என பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் முடிவுக்கு இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெறும்.
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக கடந்த திங்கட்கிழமை, வங்கதேச கிரிக்கெட் வாரியம் 2026 டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டுமென பாகிஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்தது.
தன்னுடைய அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் ராசா நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தானின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் நன்றியைத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதிஅன்று, பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.
வங்கதேசத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை காரணம் காட்டி பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்திருந்தது.
பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, இந்தியாவில் நடைபெறவிருந்த தனது டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட மறுத்து, தனது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்றுமாறு வங்கதேசம் விடுத்த கோரிக்கையையை ஐசிசி ஏற்கவில்லை.
பிறகு, டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்துக்கு இடம் அளிக்கப்பட்டது.