பட மூலாதாரம், Getty Images
”இன்னும் எல்லா அம்சங்களையும் நாங்கள் பூர்த்தி செய்துவிட்டோம் என்று சொல்ல முடியாது.”
டி20 உலகக் கோப்பையின் குரூப் ஸ்டேஜ் சுற்றில் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பிறகு, இந்திய அணி தேவையான அனைத்தையும் செய்துவிட்டதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பதில் இதுதான்.
சூர்யகுமார் யாதவின் இந்த ஒற்றை வரி பதிலில் இந்திய அணியின் அனைத்துப் பிரச்னைகளும் ஒளிந்துள்ளன. அவை சூப்பர்-8 சுற்றில் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, இந்த முறையும் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ள அணியாகக் கருதப்படுகிறது. குரூப் ஸ்டேஜில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் இந்திய அணி இந்த அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டது.
குரூப் ஏ பிரிவில் மட்டுமல்லாமல், நான்கு குரூப்களில் உள்ள அணிகளுடன் ஒப்பிட்டால் இந்திய அணி +2.500 என்ற மிக உயர்ந்த நிகர ரன் ரேட்டைக் கொண்டுள்ளது.
இவை அனைத்தையும் மீறி, குரூப் ஸ்டேஜ் சுற்றின் போது இந்திய அணியின் பலவீனமாக வெளிப்பட்ட பல விஷயங்கள் உள்ளன.
அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம்
பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் இந்தியாவின் மிக வலுவான வீரராகக் கருதப்பட்ட அபிஷேக் சர்மா, இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.
இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா இன்னும் எந்த ரன்னும் எடுக்கவில்லை. அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் அவர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.
அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு பந்துகளையும், நெதர்லாந்துக்கு எதிராக மூன்று பந்துகளையும் மட்டுமே அவர் எதிர்கொண்டு ஆட்டமிழந்தார்
அபிஷேக் சர்மாவின் இந்த ஃபார்ம் இந்திய அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. ஏனெனில் அவர் தனது கடைசி ஏழு சர்வதேச கிரிக்கெட் இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார் மற்றும் ஐந்து முறை பூஜ்ஜிய ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா ரன் எடுக்காததற்கான காரணங்களில் ஒன்றை கிரிக்கெட் நிபுணர் சாரங் பலேராவ் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர், “உலகக் கோப்பையின் மூன்று இன்னிங்ஸ்களிலும் அபிஷேக் சர்மா பவுண்டரி அடித்து ரன் எடுக்க முயன்றார். அந்த முயற்சியில் அவர் ஆட்டமிழந்தார். அவர் சிங்கிள் எடுத்து முதல் ஓவரை விளையாட முயற்சிக்க வேண்டும். அவர் குறைந்தது 10 பந்துகள் வரை களத்தில் நீடித்தால், தானாகவே ஆபத்தானவராக மாறுவார்” என்று கூறியுள்ளார்.
திலக் வர்மாவின் போராட்டம்
பட மூலாதாரம், Getty Images
“திலக் வர்மாவின் திணறல் இப்போது இந்திய அணிக்கு கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.”. நெதர்லாந்துக்கு எதிராக திலக் வர்மா ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடத் தவறியபோது, அனுப் பால் என்ற நபர் எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
அனுப்பை தவிர, இன்னும் பல சமூக ஊடக பயனர்களும் திலக் வர்மாவின் ஃபார்ம் மற்றும் அணுகுமுறை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவின் மிகவும் நம்பகமான மூன்றாவது வரிசை பேட்ஸ்மேனாக திலக் வர்மா உருவெடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 69 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கியப் பங்காற்றினார்.
ஆனால் திலக் வர்மா கடந்த ஆண்டின் இறுதியில் காயமடைந்தார், மேலும் உலகக் கோப்பைக்கு சற்று முன்னதாகவே அவர் மீண்டும் அணியில் நுழைந்தார்.
அமெரிக்காவிற்கு எதிராக 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஒரு நல்ல இன்னிங்ஸை அவர் விளையாடினார்.
ஆனால், அதிலிருந்து அவரது திணறல் தொடங்கியது. நமீபியாவுக்கு எதிராக 21 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக 24 பந்துகள் விளையாடியும் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். நெதர்லாந்துக்கு எதிராக 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார்.
திலக் வர்மா மெதுவான ரன் சேர்ப்பது அவருடன் களத்தில் இருக்கும் சக பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஓவர்களைத் தவிர, சமீப ஆண்டுகளில் இந்திய அணி காட்டி வந்த தரத்திற்கு இணையாக விளையாட முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
இருப்பினும், ஆரம்ப ஓவர்களில் விரைவாக ரன் எடுக்க முடியாத இந்திய அணியின் நிலையை கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆதரித்துப் பேசினார்.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் கூறுகையில், “ஆம், எங்களுக்கு ஒரு மெதுவான தொடக்கம் அமைந்தது. ஆனால் எங்களது பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடவும், சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள்” என்றார்.
பிரச்னையாக மாறிய ஆஃப்-ஸ்பின்
பட மூலாதாரம், Getty Images
இந்தத் தொடரின் நான்கு போட்டிகளிலும், இந்திய பேட்ஸ்மேன்கள் பெரும்பாலான சமயங்களில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்துப் போராடியுள்ளனர். அமெரிக்க சுழற்பந்து வீச்சாளர்களான முகமது மொஹ்சின் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கணிசமான நெருக்கடியைக் கொடுத்தனர்.
முகமது மொஹ்சின் நான்கு ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
ஹர்மீத் சிங் நான்கு ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நமீபியா கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் நான்கு ஓவர்களில் 20 ரன்களுக்கு நான்கு இந்திய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தார்.
பாகிஸ்தானின் பகுதி நேர பந்துவீச்சாளர் சைம் அயூபும் இந்தியாவிற்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். உஸ்மான் தாரிக்கிற்கு எதிராகவும் இந்திய பேட்ஸ்மேன்கள் சற்றே அசெளகரியமாகத் தெரிந்தனர்.
இப்போது, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில், ஆர்யன் தத் தனது சுழற்பந்து வீச்சின் மூலம் முதல் ஓவரிலிருந்தே இந்திய பேட்ஸ்மேன்களின் பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
அவர் நான்கு ஓவர்களில் 19 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்த நான்கு போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக எதிரணி சுழற்பந்து வீச்சாளர்களின் சிறந்த செயல்பாடு, இந்திய பேட்ஸ்மேன்களிடம் நிச்சயமாக ஏதோ தவறு இருப்பதைக் காட்டுகிறது.
ஃபீல்டிங் மற்றும் கடைசி ஓவர் சிக்கல்
பட மூலாதாரம், Getty Images
இந்த கவலைகளைத் தவிர, வரவிருக்கும் போட்டிகளில் இந்திய அணிக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய மற்ற இரு காரணிகள் உள்ளன. அவை, ஃபீல்டிங் மற்றும் கடைசி ஓவர்களில் வெளிப்படும் பந்துவீச்சு.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா மிக எளிதாக வெற்றி பெற்றிருந்தாலும், அந்தப் போட்டியில் இந்திய ஃபீல்டர்கள் நான்கு கேட்சுகளைத் தவறவிட்டனர்.
கேட்சுகளைத் தவறவிடும் இந்தப்போக்கு நெதர்லாந்துக்கு எதிராகவும் தொடர்ந்தது.
நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஓவர்களில் இந்தியா மோசமாகப் பந்துவீசியது. 16 ஓவர்களுக்குப் பிறகு, நெதர்லாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால் அதன் பிறகு நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் கடைசி நான்கு ஓவர்களில் 51 ரன்கள் எடுத்தனர், அதே நேரத்தில் இந்திய பந்துவீச்சாளர்களால் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா, கிரிக்பஸ் நிகழ்ச்சியில் இந்தியாவின் இந்த பலவீனம் குறித்துப் பேசினார்.
“சூப்பர் 8 சுற்றில் இந்தியாவின் பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பது பற்றிய கேள்விகள் இன்னும் நீடிக்கின்றன. பேட்டிங்கில் 8-வது வரிசையில் அக்சர் படேல் இருக்கிறார். ஆனால் டெத் ஓவர்களில் யார் பந்துவீசுவார்கள்? டெத் ஓவர்களில் இந்தியாவின் பந்துவீச்சு குறித்து நெதர்லாந்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இனி நாம் வலுவான அணிகளை எதிர்கொள்ளப் போகிறோம்,” என்றார் அவர்.
சூப்பர் 8 போட்டிகள் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்க உள்ளன. சூப்பர் 8-ன் குரூப் 1 பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது, இதில் இந்தியாவுடன் , மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் உள்ளன.
இந்தியா இப்போது பிப்ரவரி 22-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.
ஆனால் இந்தத் தொடரில் முதலிடம் என்ற அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், பட்டத்தை வெல்லும் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்களைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு