பட மூலாதாரம், AFP via Getty Images
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகாவின் முடிவுகள் குறித்து பாகிஸ்தானிய முன்னாள் வீரர்கள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது, இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இந்தியா நிர்ணயித்த 176 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் ஆரம்பத்திலிருந்தே தடுமாறியது. 18 ஓவர்களில் 114 ரன்னில் பாகிஸ்தான் அணி ஆல்அவுட் ஆனது.
ஷாஹித் அஃப்ரிடி, கம்ரான் அக்மல், பசித் அலி, ரமீஸ் ரஸா உள்பட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணியை பாராட்டி இருப்பதுடன், பாகிஸ்தானின் தோல்வி ‘மற்றுமொரு அவமானகரமான தோல்வி’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் சல்மான் அகாவின் பல முடிவுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. போட்டியின் ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் அதை அந்த அணி தக்க வைத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதுதவிர, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர்களை முறையாக பயன்படுத்தவில்லை என்றும் சல்மான் அகா மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
கேப்டனின் முடிவுகள் குறித்து அஃப்ரிடி கோபம்
பட மூலாதாரம், AFP via Getty Images
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி குறுகையில், “இந்தியாவின் பவுலிங், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவற்றை பார்க்கும்போது அவர்கள் இதற்கு (வெற்றிக்கு) தகுதி வாய்ந்தவர்களாக இருப்பது தெரிகிறது. தவறுகள் நடக்கும், ஆனால் நாம் பெரும் தவற்றை இழைத்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கேப்டனின் முடிவுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த அஃப்ரிடி, “முதல் ஓவர் தவிர்த்து, கேப்டனின் மற்ற முடிவுகள் குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நம்முடைய துருப்புச்சீட்டு பவுலரான, நாம் மறைத்து வைத்திருந்த உஸ்மார்ன் தாரிக் முதல் 10 ஓவகளில் பவுலிங் செய்ய வரவே இல்லை. ஆரம்பத்தில் மிகவும் நம்பிக்கையுடன் தோன்றாத ஷாஹீனை (அஃப்ரிடி) கடைசி ஓவரில் பவுலிங் செய்ய இறக்கினோம். ஃபாஹீம் அஷ்ரஃப் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் பவுலிங் செய்தார், அதன்பின், ஷாஹீன் அவருடைய இடத்தில் பந்து வீசினார்.” என தெரிவித்துள்ளார்.
“இந்திய பந்துவீச்சைப் பொறுத்தவரை, அது பாகிஸ்தானின் சிறந்த பேட்டிங் வரிசையின் பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆகும் இடத்திலும், கொஞ்சம் ஸ்விங் ஆகும் இடத்திலும், எங்கள் பேட்ஸ்மேன்களின் நுட்பங்கள் அனைத்தும் வீணாகிவிட்டன.”
பாகிஸ்தான் இந்த போட்டியில் 7 பவுலர்களை பயன்படுத்தியது. இதுகுறித்து கேள்வியெழுப்பிய ஷாஹித் அஃப்ரிடி, “இப்போட்டியில் பாகிஸ்தான் அணி ஐந்து பவுலர்கள் மற்றும் ஒரு ஆல்-ரவுண்டருடன் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கக் கூடுமா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 6 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. அவர்கள் 18 ஓவர்களை வீசினர். டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ஓவர்களை வீசிய வகையில் இது ஒரு சாதனையாகும். மற்ற இரண்டு ஓவர்களையும் ஷாஹீன் அஃப்ரிடி வீசியிருந்தார்.
ஃபகார் ஸமன் அணியில் இடம்பெறாதது குறித்தும் ஷாஹித் அஃப்ரிடி கூறியுள்ளார். “ஒரு மூத்த வீரரை அழைத்துச் சென்றுவிட்டு அவரை களமிறக்காதது போன்ற நாம் சில தவறுகளை செய்துள்ளோம்.” என்றார்.
பாபர் ஆஸம் அவுட்டான விதம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ஷாஹித் அஃப்ரிடி, “போட்டியில் வெற்றி பெறுவதும் தோற்பதும் தொடர்ந்து நடக்கும், ஆனால் பாகிஸ்தானின் தோல்வி புரிதலுக்கு அப்பாற்பட்டதாக தெரிகிறது. மூத்த வீரர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
“மழை பெய்திருந்தால் நல்லது”
பட மூலாதாரம், AFP via Getty Images
பசித் அலியும் கேப்டன் சல்மான் அகாவின் முடிவுகள் குறித்து சற்று கோபத்துடன் இருப்பதாக தோன்றுகிறது.
கேம் பிளான் எனும் யூடியூப் சேனலில் பசித் அலி பேசியபோது, “முதல் மூன்று போட்டிகள் இந்த ஆடுகளத்தில் தான் விளையாடப்பட்டன. முதலில் யார் பேட்டிங் செய்தார்களோ அவர்கள் வென்றார்கள். ஆனால் பாகிஸ்தான் டாஸ் வென்றும் முதலில் பந்துவீச முடிவெடுத்தது, சுழற்பந்துவீச்சு தங்களிடத்தில் மிக நன்றாக இருப்பதாக தெரிவித்தது. சல்மான் அகாவின் பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மா போன்ற வீரர் முதல் ஓவரிலேயே அவுட்டானார். அதன்பின்னும் ஏன் கேப்டன் ‘டிஃபென்சிவாக’ விளையாட வேண்டும்? இதை கூறுவதற்கு மன்னிக்கவும், கேப்டன் மிகவும் தைரியமற்றவராக மாறிவிட்டார்.” என தெரிவித்துள்ளார்.
பசித் அலி கூறுகையில், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உஸ்மான் தாரிக்கை மிகவும் தாமதமாக பந்து வீச வைத்தார்கள். முதலில் பேட்டிங் செய்யலாமா, பந்து வீசலாமா என்று தெரியாதவர்கள் பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளராகிவிட்டனர்.” என தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “தோல்வியடைவதற்குப் பதிலாக மழை பெய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், குறைந்தபட்சம் ஒரு புள்ளியாவது கிடைத்திருக்கும். இப்போது நமீபியாவுக்கு எதிரான போட்டி முக்கியமானதாகிவிட்டது.” என தெரிவித்தார்.
பாபர் ஆஸம் குறித்து பசித் அலி கூறுகையில், “சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வருகிறார்.” என தெரிவித்துள்ளார்.
அவர் இஷான் கிஷனின் ஆட்டத்தை ‘உயர்தர’ பேட்டிங் என்று அழைத்தார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், “இஷான் கிஷானின் அச்சமற்ற மற்றும் ஆக்ரோஷமான அரைசதம் இரு அணிகளுக்கும் இடையிலான பெரிய வித்தியாசத்தை உணர்த்தியது” என்று கூறினார்.
போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹெசன், “அவர் அச்சமற்றவர் என்று நான் நினைக்கிறேன். அவர் மைதானத்தின் இருபுறமும் ரன்கள் எடுக்க வல்லவர். அவர் லெக் சைடில் மிகவும் வலிமையானவர் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் ரிவர்ஸ் ஷாட்டையும் விளையாட முடியும் என்று காட்டினார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக, அதுவும் குறிப்பாக பவர்ப்ளேயில் அவரை கட்டுப்படுத்துவது சவாலானது” என்றார்.
டாஸ் முடிவு குறித்து எழும் கேள்விகள்
பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற பிறகு முதலில் பந்து வீச முடிவு செய்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவை கிரிக்கெட் விமர்சகர் சமி சவுத்ரி விமர்சித்துள்ளார்.
சூழ்நிலைக்கேற்ப டாஸில் எடுக்கப்படும் முடிவில்தான் அனைவரின் கவனமும் குவிந்திருக்கும் இந்த ஆட்டத்தில், டாஸில் வென்ற பிறகு, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சல்மான் அகாவின் காதுகளில் என்ன மந்திரம் கிசுகிசுக்கப்பட்டது என்று அவர் விமர்சித்துள்ளார்.
இலங்கை ஆடுகளத்தைக் கருத்தில் கொண்டால், முதலில் பேட்டிங் செய்கையில் ரன் சேர்ப்பது கடினமாக இருக்கும்போது, இரண்டாவது பேட் செய்து இன்னும் பழைய ஆடுகளத்தில் இவ்வளவு பெரிய இலக்கை யாரால் துரத்த முடியும் என்று சமி சவுத்ரி கூறினார்.
பாகிஸ்தான் தனது சுழற்பந்து வீச்சாளர்களைப் பற்றி பெருமைப்படும் அதே வேளையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களும் டி20 கிரிக்கெட்டில் சிறந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கொழும்புவில் திடீரென மழை பெய்யத் தொடங்கி பந்து வீச்சாளர்களின் கைகளில் இருந்து பந்து நழுவத் தொடங்கும் என்பதால், இந்திய பந்துவீச்சுக்கு எதிராக இலக்கைத் துரத்துவது எளிதாக இருக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம்தான்.
கேம் பிளான் யூடியூப் சேனல் விவாதத்தில் பேசிய கம்ரான் அக்மல், “டாஸ் வென்ற பிறகு பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால் 160 முதல் 170 ரன்கள் வரை எளிதாக எடுத்திருக்க முடியும். தவறான முடிவால் நீங்கள் ஒரு முக்கியமான வாய்ப்பை இழந்தீர்கள். உஸ்மான் தாரிக் 4 ஓவர்களில் 24 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்தியா போன்ற ஒரு அணிக்கு எதிராக. உஸ்மான் அநீதியாக நடத்தப்பட்டுள்ளார்” என்றார்.
“பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. பாகிஸ்தான் அணியிடம் எந்த உத்தியும் இருப்பதாகத் தெரியவில்லை, முதல் ஓவர் மட்டுமே சரியாக அமைந்தது” என்று கம்ரான் அக்மல் கூறினார்.
பாகிஸ்தான் அணி எந்த திட்டத்தையும், எந்த உத்தியையும் வெளிப்படுத்தவில்லை என்றும், “மற்றொரு அவமானகரமான தோல்வியை” சந்தித்ததாகவும் ரமீஸ் ரஸா கூறினார்.

தனது யூடியூப் சேனலான ரமீஸ் ஸ்பீக்ஸில் பேசிய அவர், “பாகிஸ்தானின் பேட்டிங் ஒரு பேரழிவாக இருந்தது. இந்திய அணி கடந்த மூன்று ஆண்டுகளாக அதே பந்துவீச்சு கூட்டணியுடன் விளையாடி வருகிறது, ஆனால் பாகிஸ்தான் அணி எதையும் கற்றுக்கொள்ளவில்லை. குல்தீப், பும்ரா, அக்சர் படேல் ஆகியோருக்கு எதிராக எப்படி விளையாடுவது என கற்றுக்கொள்ளவில்லை” என்று அவர் கூறினார்.
“பும்ரா இந்தியாவிடம் உள்ள ஆபத்தான பந்துவீச்சாளர். அவர் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார், அவர் போட்டியை வென்று கொடுக்கக் கூடிய திறன் படைத்தவர். நீங்கள் அவரது பந்துவீச்சுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப்பும் எக்ஸ் பக்கத்தில் ஷாஹீன், பாபர் மற்றும் ஷதாப்பை விமர்சித்துள்ளார்.
அவர் தன் பதிவில், “ஷாஹீன், பாபர் மற்றும் ஷதாப் ஆகியோருக்கு நேரம் கடந்துவிட்டதாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் டி20 அணிக்கு பலவீனமான எதிராளிகளுக்கு எதிராக வெற்று வெற்றிகளைப் பெறுவதற்குப் பதிலாக உண்மையான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய புதிய வீரர்கள் தேவை.” என தெரிவித்துள்ளார்.
முகமது யூசுப்பை போலவே, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹிப் மக்சூத் தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகப்பெரிய பிரச்னை, நம் நாட்டிற்குள்ளேயானதாக நமது கிரிக்கெட் மாறிய போது தொடங்கியது. ஆரம்பத்தில் வலுவான அணிகள் முழு பலமிக்க அணியாக வரவில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பாகிஸ்தானில் விளையாட வந்தபோது, அவர்கள் பெரும்பாலும் 7 அல்லது 8 முக்கிய வீரர்கள் இல்லாமல் வந்தனர். நாங்கள் தொடர்களை வென்றோம், எங்கள் கிரிக்கெட் சரியான திசையில் நகர்கிறது என்று நினைத்தோம்” என பதிவிட்டுள்ளார்.
“உண்மையில், உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில், அனைத்து அணிகளும் தங்கள் முழு பலத்துடன் களத்தில் இறங்கும் போது, நம் பலவீனங்கள் வெளிப்படும். இந்த போட்டியிலும், சல்மான் அகாவின் கேப்டன்சி மோசமாக வெளிப்பட்டது. அழுத்த மிக்க சூழலை சமாளிக்க முடியாமல் அவரது கேப்டன்சி தோல்வியடைந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு