படக்குறிப்பு, வெள்ளை மாளிகை தனது இணையதளத்தில் “ஜனநாயகக் கட்சியினர் அரசை முடக்கியுள்ளனர்” எனக் குறிப்பிடும் ஒரு கவுண்டவுன் கடிகாரத்தை சேர்த்தது.
அமெரிக்காவில் மத்திய (Federal) அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள் மூடப்படலாம் என்ற அபாயமும் உள்ளது.
அமெரிக்க அரசு நிர்வாகத்தின் பணி முடக்கம் என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது, அது டிரம்ப் நிர்வாகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
அமெரிக்க செனட் சபையால், அரசாங்க நிதி ஒதுக்கீட்டைப் பற்றிய மசோதாவில் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. எனவே, அந்த மசோதா நிறைவேறவில்லை.
2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க அரசாங்கப் பணிகள் முடங்குவது இதுவே முதல் முறை. இது பல மத்திய அரசு ஊழியர்களை சம்பளமின்றி விடுப்பில் செல்ல கட்டாயப்படுத்தக்கூடும்.
அரசாங்கத்திற்கு நிதியளிக்க ஜனநாயகக் கட்சியியினர் கொண்டு வந்த அரசு நிதி மசோதா 47-53 என்ற வாக்குகளால் தோல்வியடைந்தது.
அரசாங்க முடக்கத்தைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த முன்மொழிவு, 100 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் தேவையான வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது. அதைத் தொடர்ந்து குடியரசுக் கட்சியின் நிதி மசோதா 55-45 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
பின்னர் வெள்ளை மாளிகை தனது இணையதளத்தில் “ஜனநாயகக் கட்சியினர் அரசை முடக்கியுள்ளனர்” எனக் குறிப்பிடும் ஒரு கவுண்டவுன் கடிகாரத்தை சேர்த்தது. மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அதில் கூறப்பட்டது.
பணி முடக்கம் என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பணி முடக்கத்தால் அத்தியாவசியமற்ற சேவைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படுகின்றன.
அமெரிக்க அரசு இயங்க ஒவ்வொரு ஆண்டும் ஒரு பட்ஜெட் நிறைவேற்றப்பட வேண்டும்.
செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை (அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகள்) அந்த நிதி மசோதாவில் உடன்படவில்லை என்றால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது.
இதனால், “அத்தியாவசியமற்ற” சேவைகள் மற்றும் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. இது தான் பணி முடக்கம் என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை என்ன சொன்னது?
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, வெள்ளை மாளிகை பணி முடக்கத்தை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இந்த முடக்கத்திற்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள், ஆனால் செனட்டில் 60 வாக்குகள் இல்லாததால் எந்தவொரு பட்ஜெட் மசோதாவையும் நிறைவேற்ற முடியவில்லை.
இந்த பணி முடக்கத்தின் தாக்கம் பரவலாக இருக்கும். தேசிய பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.
தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் புள்ளிவிவர பணியகமும் மூடப்படும். இதனால் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவிருந்த மாதாந்திர வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்படாது.
சமீப காலமாக வேலைவாய்ப்பு குறைந்திருப்பதால், இந்த அறிக்கை பொருளாதார நிலையை புரிந்துகொள்ள முக்கியமானதாக இருந்தது. அறிக்கை இல்லாதது பொருளாதாரத்தின் நிலையை மேலும் குழப்பமாக்கும் என்றும், ஏற்கெனவே உள்ள நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். பல மத்திய அரசு நிறுவனங்கள் மூடப்படும். இருப்பினும், ராணுவம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும்.
அரசாங்கத்தின் செயல்பாட்டில் என்ன மாற்றங்கள் ஏற்படும் ?
பட மூலாதாரம், Getty Images
இந்த பணி முடக்கம் அரசு செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தாது. எல்லைப் பாதுகாப்பு, மருத்துவமனைகளில் சிகிச்சை, சட்ட அமலாக்கம், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு போன்ற முக்கிய சேவைகள் தொடரும்.
சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பணம் அரசாங்கத்தால் தொடர்ந்து அனுப்பப்படும், ஆனால் பலன் பெறுவோர் குறித்த சரிபார்ப்பு மற்றும் அட்டை வழங்கல் போன்ற சேவைகள் நிறுத்தப்படலாம்.
அத்தியாவசியத் தொழிலாளர்கள் பொதுவாக பணி முடக்கத்தின் போது வழக்கம் போல் செயல்படுவார்கள்.
அத்தியாவசிய ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் சிலருக்கு அந்த காலத்தில் சம்பளம் வழங்கப்படாது. அத்தியாவசியமற்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் சம்பளமின்றி தற்காலிக விடுப்பில் அனுப்பப்படுகிறார்கள்.
இதனால், உணவு உதவித் திட்டங்கள், மத்திய அரசு நிதியுதவி பெறும் மழலையர் பள்ளிகள், மாணவர் கடன் வழங்கல், உணவு ஆய்வுகள், தேசிய பூங்கா செயல்பாடுகள் போன்ற சேவைகள் குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம்.
இந்த முடக்கம், 2018-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பணி முடக்கத்தை விட பெரியதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
மத்திய அரசின் ஊழியர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர், அதாவது 800,000க்கும் அதிகமானோர், தற்காலிக விடுப்பில் அனுப்பப்படலாம் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்த பணி முடக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும், அது எவ்வளவு பரவலாக உள்ளது என்பதைப் பொறுத்து இந்த முடக்கம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மதிப்பிடலாம்.
முந்தைய காலங்களில் இத்தகைய இடையூறுகள் தற்காலிகமாக இருந்தன. பணி முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அரசு துறைகள் பெரும்பாலும் சில மாதங்களில் இழப்பீடு பெற்றன.
ஆனால் தற்போதைய பணி முடக்கம், ஒவ்வொரு வாரமும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை சுமார் 0.1% முதல் 0.2% வரை குறைக்கக்கூடும் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
டிரம்ப், சில ஊழியர்களை சம்பளமின்றி விடுப்பில் அனுப்புவது மட்டுமல்லாமல், அவர்களை நேரடியாக பணிநீக்கம் செய்வதாகவும் எச்சரித்துள்ளார்.
இந்த மோதல், ஏற்கெனவே வரி (tariffs) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற மாற்றங்களால் சவால்களை எதிர்கொண்டு வரும் அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
பட மூலாதாரம், Anadolu via Getty Images
படக்குறிப்பு, இந்த முடக்கத்தின் தாக்கம் பரவலாக இருக்கும். தேசிய பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன, மேலும் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் தொழிலாளர் புள்ளிவிவர பணியகமும் மூடப்பட உள்ளது.
அமெரிக்காவில் பணி முடக்கம் எவ்வளவு பொதுவானவை?
கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் அரசு பணி முடக்கம் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது.
இது டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் மூன்று முறை நடந்தது, இதில், வரலாற்றில் மிக நீண்ட காலமாக 36 நாட்கள் நீடித்த முடக்கம் ஒன்று, ஜனவரி 2019 இல் முடிவடைந்தது.
1980களில், ரொனால்ட் ரீகனின் ஆட்சிக் காலத்தில் எட்டு முறை இவ்வாறான முடக்கம் ஏற்பட்டது.