பட மூலாதாரம், Getty Images
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் 2016ஆம் ஆண்டில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இந்தியாவில் இருந்து வந்த மிகப் புதுமையான திட்டமாகும். இது உலகம் முழுவதற்கும் ஒரு பாடமாக விளங்குகிறது” என்று கூறினார்.
தற்போது, இருபது ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, மோதி அரசாங்கம் ஒரு புதிய மசோதாவை கொண்டுவந்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2005ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் கீழ், கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு ஓர் ஆண்டில் நூறு நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்தத் திட்டம், சிறப்புத் திறன்கள் இல்லாத கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது இது தொடர்பாகப் புதிய மசோதாவை கொண்டுவந்து அதற்கு, ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ (VB-G RAM G) என்று பெயரிட்டுள்ளது.
இதில், பெயர் மட்டுமின்றி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
இந்தப் புதிய மசோதா ஓராண்டில் 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக முன்மொழிகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் விதிகள்படி, தொழிலாளர்களின் ஊதியத்திற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கிறது. பொருட்கள் மற்றும் உபகரணங்கள் செலவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. திட்டத்தின் நிர்வாகப் பொறுப்பில் மாநில அரசுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
நூறு நாள் வேலைத் திட்டம் திருப்புமுனையாக மாறியது எப்படி?
இப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 12 கோடிக்கும் அதிகமான செயல்பாட்டில் இருக்கும் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு பெரிய திட்டமாக இது திகழ்கிறது.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில், நாட்டில் வேலைவாய்ப்பு நெருக்கடி பெருமளவு அதிகரித்த போதிலும், இந்தத் திட்டத்தின் கீழ் வேலைக்கான தேவை அதிகரித்தது இதன் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
கடந்த 2020-21ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் என்ற சாதனை அளவில் இருந்தது.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகையுடைய ஒரு நாட்டிற்கு வேலைவாய்ப்பு என்பது பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. மேலும், கிராமங்களில் வசிப்போருக்கு இந்த நெருக்கடி இன்னும் அதிகமாக இருந்தது.
அத்தகைய சூழ்நிலையில், பல அமைப்புகள் நீண்ட காலமாக கிராமங்களில் நிலவி வந்த வேலைவாய்ப்பு நெருக்கடி குறித்துக் குரல் கொடுத்து வந்தன.
அப்போது, கிராமங்களில் வாழும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சவால்களைத் தணிப்பதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியது. இது தனித்திறன்களற்ற தொழிலாளர்களின் இடப்பெயர்வு, வேலையின்மை போன்ற நெருக்கடிகளைச் சமாளித்தது மட்டுமின்றி, கிராமப்புற நிலப்பரப்பை மாற்றியமைப்பதிலும் முக்கியப் பங்காற்றியது.
பட மூலாதாரம், Getty Images
கிராமங்களில் இந்தத் திட்டம் ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்து கொள்ள, விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகச் செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர் நிகில் டே, ராஜஸ்தானில் இருந்து ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டார்.
“ராஜஸ்தானில், சில இடங்களில் வறட்சி, வேறு சில இடங்களில் வெள்ளம், பிற இடங்களில் பஞ்சம் எனப் பல பிரச்னைகள் இருந்தன. அங்குள்ள மக்கள் இலவசமாக எதையாவது பெற்றுச் சாப்பிட யாசகம் கேட்க விரும்பவில்லை. அவர்கள் வேலை செய்ய விரும்பினார்கள். ஆனால், கிராமங்களில் 50 பேருக்கு மட்டுமே வேலை இருந்தது. மாறாக, ஆயிரம் பேர் வேலை கேட்டு நின்றனர்,” என்று நிகில் கூறுகிறார்.
“ஒவ்வொரு காலையிலும் முழு கிராமமும் கிராமத் தலைவரின் வீட்டில் கூடியிருக்கும். கிராமத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் மக்கள் கைகூப்பி, காலி விழுந்து வேலை கேட்டு நிற்பார்கள். அவர்கள் கிராமத்தை விட்டு இடம்பெயரவும் விரும்பவில்லை. அந்தச் சூழலில், நூறு நாள் வேலைத் திட்டம் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தை அளித்து, மக்களுக்கு அதிகாரமளித்தது.”
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் நோக்கம், கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவதும், அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதும் ஆகும். இது அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
பட மூலாதாரம், Getty Images
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்றால் என்ன?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் நீடித்த சொத்துகளை உருவாக்குவதையும், பெண்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான சமூக பலன்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தொழிலாளருக்கும், தனித்திறன்களற்ற வேலைகளில் (மண் வெட்டுதல், மண் சுமத்தல் போன்ற சிறப்புத் திறன்கள் தேவைப்படாத வேலைகள்), 15 நாட்களுக்குள் வேலை கேட்டுப் பெறும் உரிமை உண்டு. அப்படிக் கேட்ட பிறகு வேலை கிடைக்காத பட்சத்தில், அவர்களுக்கு வேலையின்மைப்படியைப் பெறும் உரிமை உண்டு.
இந்தத் திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்படுத்தும் சமூக தாக்கத்தை ஒரு சுயாதீனமான நிறுவனம் மூலமாக அவ்வப்போது மதிப்பீடு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில், கிராமப்புறங்களில் சாலைகள், குளங்கள், நீர்ப்பாசன வசதிகள், நதி புனரமைப்பு, தேசிய ஊரக இயக்கத்துடன் தொடர்புடைய பிற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் 262 வகையான வேலைகளை மேற்கொள்ள முடியும். அவற்றில் 164 விவசாயம் தொடர்பானவை.
மூத்த பத்திரிகையாளர் அரவிந்த் சிங், “இந்தத் திட்டத்தில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தில் பெண்களின் பங்கேற்பு 56 சதவிகிதமாக உள்ளது. இது இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் அதிகாரம் பெறுவதைக் காட்டுகிறது,” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
நூறு நாள் வேலைத் திட்டம் கடந்து வந்த பாதை
கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம், அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கிராமங்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தனது பொது குறைந்தபட்ச திட்டத்தில் சேர்த்தது.
முன்னதாக, விபி சிங் தலைமையிலான மத்திய அரசு இதுபோன்ற ஒரு திட்டத்தைக் கருத்தில் கொண்டிருந்தாலும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. உண்மையில், தனது அரசாங்கம் அதன் வரவு செலவுத் திட்டத்தில் 60 சதவிகிதத்தை கிராமங்களுக்கும் விவசாயத்திற்கும் செலவிடும் என்று விபி சிங் உறுதியளித்திருந்தார்.
“தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட மசோதா டிசம்பர் 2004இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட ஒரு வேலைவாய்ப்புத் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட ஒன்று. பின்னர் இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் ஜூன் 2005இல் அந்தக் குழுவின் தலைவர் கல்யாண் சிங், இதை சுதந்திரத்திற்குப் பிறகான மிக முக்கியத்துவம் வாய்ந்த மசோதா என்று விவரித்தார்.” என்கிறார் அரவிந்த் சிங்
பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக செப்டம்பர் 2005இல் ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
பின்னர், 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியன்று, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரால் ஆந்திர பிரதேசத்தின் பங்களபள்ளி கிராமத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில், இது தேர்வு செய்யப்பட்ட 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. மேலும், 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பட்ஜெட் தோராயமாக 15,000 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது அது தோராயமாக 86,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.
கடந்த 2010ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தின் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், அதாவது MNREGA என்று மாற்றப்பட்டது.
இந்தத் திட்டம் கிராமங்களுக்கு அதிகாரம் அளித்தது. மகாத்மா காந்தி இந்தியாவின் கிராமங்கள் வலிமை பெறுவதைக் காண விரும்பினார். எனவே இந்தத் திட்டம் அவரது பெயருடன் இணைக்கப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
“கடந்த 2015ஆம் ஆண்டு, உலக வங்கி இதை உலகின் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் திட்டம் என்று அழைத்தது,” என்கிறார் அரவிந்த் சிங்.
பட மூலாதாரம், Getty Images
திட்டம் குறித்து எழுந்த புகார்கள்
நாட்டின் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை வழங்கும் இந்தத் திட்டம், ஊழல் போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கியுள்ளது.
பல இடங்களில் மக்களுக்கு வேலை வழங்கப்படாமல், வேலை வழங்கப்பட்டதாகக் கணக்கில் மட்டும் காட்டப்பட்டதாக இந்தத் திட்டம் குறித்துப் புகார்கள் எழுந்தன.
இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷின் பதவிக் காலத்தில், இந்தப் புகார்களையும் முறைகேடுகளையும் சரிசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, திட்டக் குழுவின் உறுப்பினராக இருந்த மிஹிர் ஷாவிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டன.
“முன்பு இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்த மக்களே வேலை செய்தார்கள். ஆனால், கணக்கில் அது அதிகமாகக் காட்டப்படும். அதற்கான பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் விழிப்புணர்வு காரணமாக இந்த நிலை மேம்பட்டுள்ளது.
இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எந்தப் பகுதியில் எத்தனை பேர் வேலை செய்துள்ளனர், என்ன வேலை செய்யப்பட்டுள்ளது என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்துகொள்ள முடியும்,” என்று கூறுகிறார் நிகில் டே.
பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகள் போராடுவது ஏன்?
புதிய மசோதாவின்படி மொத்த செலவில் 60 சதவிகிதத்தை மத்திய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசுகளும் ஏற்கும் என முன்மொழியப்பட்டுள்ளது. முன்னதாக, மாநிலங்களின் செலவு சுமார் 10% மட்டுமே என்றிருந்தது.
வடகிழக்கு மாநிலங்கள், உத்தாரகண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படும் செலவில் 90 சதவிகிதத்தை மத்திய அரசு ஏற்கும்.
“மத்திய அரசின் இந்த முன்மொழிவில், இந்தத் திட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை நீக்கும் பல விதிகள் உள்ளன. தற்போது இந்தத் திட்டம் நாடு முழுவதும் பொருந்தும். ஆனால், புதிய முன்மொழிவில், பிரிவு 5(1)இன்படி, இது எங்கு செயல்படுத்தப்படும் என்பதை மத்திய அரசே முடிவு செய்யும்” என்று கூறுகிறார் நிகில் டே.
மேலும் அவர், “இப்போது எந்த மாநிலத்திற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்கான அளவுகோல்களை மத்திய அரசே முடிவு செய்யும். அது கொடுக்கும் பணத்தின் அளவுக்கு ஏற்பவே திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால் இனி மாநிலங்கள் தங்கள் நிதியில் 40 சதவிகிதத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கும்,” என்றார்.

இதுகுறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய், “நூறு நாள் வேலைத் திட்டத்தால் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலை மேம்பட்டது. அவர்களுக்கு வேலை வழங்கி அரசுத் திட்டத்தில் இணைக்கப்பட்டனர். இதன் மூலம் மக்கள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மாநிலங்களின் பொருளாதார நிலை ஏற்கெனவே மோசமாக உள்ளது. அவர்கள் மீதான சுமை அதிகரித்தால், அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த தவறக்கூடும். அல்லது இந்தத் திட்டத்தின் மீதான மாநிலங்களின் ஆர்வம் குறையக்கூடும்,” என்று தெரிவித்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் செய்யப்படும் மாற்றம் தொடர்பாகவும் அதன் பெயர் குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயர் நிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.
அரவிந்த் சிங்கின் கூற்றுப்படி, சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்படுவது இதுவே முதல் முறை.
கூடுதலாக, “புதிய முன்மொழிவு இந்தத் திட்டத்தை நீராதாரங்கள், சாலைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்புகள், கிராமப்புற வீட்டு வசதி ஆகியவற்றுடன் இணைக்கிறது. இவற்றுக்கென ஏற்கெனவே அமைச்சகங்கள் உள்ளன. நூறு நாள் வேலை திட்டத்தின் நிதியை திசைதிருப்ப விரும்புவதாகத் தெரிகிறது. இது இந்தத் திட்டத்தை முழுமையாகப் பாழாக்கிவிடும்.” என்றும் அரவிந்த் சிங் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு