• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

WASP-107b: பூமியை விட 11 மடங்கு பெரிய புறக்கோளில் என்ன நடக்கிறது? கோவை விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு

Byadmin

Jan 21, 2026


Wasp-107b புறக்கோளில் தமிழக விஞ்ஞானி கண்டுபிடித்த அதிசய நிகழ்வு – ஆய்வில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம், University of Geneva/NCCR PlanetS/Thibaut Roger

படக்குறிப்பு, WASP-107 நட்சத்திரம் மற்றும் WASP-107b புறக்கோளின் சித்தரிப்பு ஓவியம்

விண்வெளியில் உள்ள பல கோடி நட்சத்திரங்களில் ஒன்று WASP-107. அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையில் கட்டுண்டு, அதைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் கோள்களில் ஒன்றுதான் WASP-107b. இந்தப் புறக்கோளில் தமிழக விஞ்ஞானி ஒருவர், பூமியின் இயற்கை வரலாற்றில் நிகழ்ந்ததை ஒத்த ஓர் அதிசய நிகழ்வு நடப்பதைச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்தவரும் கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக வானியற்பியல் விஞ்ஞானியுமான முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர், பூமியில் இருந்து 210 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இந்த பிரமாண்டமான புறக்கோளை ஜேம்ஸ்வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து இதைக் கண்டறிந்துள்ளனர்.

அளவில் மிகப் பெரிதான இந்தப் புறக்கோள் தான் சுற்றி வரும் நட்சத்திரத்திற்கு வெகு அருகில் இருப்பதால் வெப்பம் மிகுந்ததாகவும் உள்ளது. இந்த அதீத வெப்பம் காரணமாக, அதன் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் ஆவியாகிக் கொண்டிருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய முனைவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

அதுகுறித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக அவதானித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பிரமாண்டமான ஹீலியம் வாயு மேகம் அதிலிருந்து வெளியேறுவதைத் தாங்கள் கண்டதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை நேச்சர் அஸ்ட்ரானமி ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

இந்த வாயு மேகம், கோளின் மொத்த அளவைவிட சுமார் 10 மடங்கு பெரிதாகப் பரவியிருந்ததாக இதுகுறித்து மெக்கில் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

By admin