• Fri. Jul 4th, 2025

24×7 Live News

Apdin News

அஜித்குமார் படுகொலை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு | Ajith Kumar murder: Human Rights Commission orders IG to file report

Byadmin

Jul 3, 2025


சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொலை செய்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார்.

நடந்தது என்ன? – சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி அக்கோயிலுக்கு சாமி கும்பிட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்தார். திரும்பி வந்தபோது, பையில் வைத்திருந்த 10 பவுன் நகை. ரூ.2,500 காணவில்லை என புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரிடம் திருப்புவனம் போலீஸார் விசாரித்தனர். மற்றவர்களை விடுவித்த நிலையில், அஜித்குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் வெளியே அழைத்துச் சென்று விசாரித்தனர். ஜூன் 28-ம் தேதி போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்தனர். ஜூன் 30-ம் தேதி திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ்பிரசாத் விசாரணை நடத்தினார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஐஜி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் அஜித்குமாரின் உடலில் 40-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும், ரத்தக் கசிவு இருந்ததும் தெரியவந்தது. அன்று இரவே இது கொலை வழக்காக மாற்றப்பட்டு, தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரனை தவிர்த்து காவலர்கள் மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து காவலர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

அதேநேரம், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், அரசே தனது குடிமகனை கொலை செய்துவிட்டதாக அதிருப்தியை தெரிவித்தனர். மேலும் மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக விசாரணையை தொடங்க உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்றும் இன்றும் திருப்புவனம் வந்த அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிவகங்கை மாவட்ட போலீஸார் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினார்.

இதனிடையே, மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்தும், எஸ்பி ஆஷிஷ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும் அரசு உத்தரவிட்டது. மேலும் அஜித்குமாரின் தாயார், சகோதரரிடம் முதல்வர் ஸ்டாலின் செல்போன் மூலம் பேசி, தனது வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



dtoany_content addtoany_content_bottom">

By admin