-
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் பெயரில் மாவட்ட நீதிபதியின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காவலாளி அஜித் குமாருக்கு எதிராக நகையை காணவில்லை என மனுதாரர் நிகிதா அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக குற்றம்சாட்டு வைக்கும் அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர்கள் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளனர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், வரும் 8ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
தற்போது வரை யாரெல்லாம் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்?
முதல் மூன்று நாட்கள் நடந்த விசாரணையின் போது, ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோவில் அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை தாக்கியது தொடர்பான வீடியோவை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா, அஜித் குமாரின் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
நான்காவது நாளான வெள்ளிக்கிழமை காலை நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அஜித் குமார் மீதான நிகிதாவின் புகார் மனு, அந்தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்த அவர், சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்த நீதிபதி, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறனிடம் விசாரித்தார். தொடர்ந்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார், அன்று பணியில் இருந்த போலீஸ்காரர் இளையராஜா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார்.
இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடமும் விசாரணை நடத்தினார்.
முதல் தகவல் அறிக்கையில் என்ன உள்ளது?
நிகிதாவின் புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் முரண்பட்டதாக உள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக அஜித் குமார் உட்பட ஐந்து இளைஞர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்தது தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா.
புகார் மனுவில் உள்ள நேரமும் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நேரமும் வேறு வேறாக உள்ளது என்கிறார் கார்த்திக் ராஜா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், ” முதல் தகவல் அறிக்கையில் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நகை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகிதா கொடுத்த புகார் மனுவில் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து தானும் (நிகிதா) அம்மா சிவகாமியும் கோவிலுக்குப் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.”
முதல் தகவல் அறிக்கையில் குளறுபடிகளா?
நிகிதா 27ம் தேதி இரவு அளித்த பேட்டியில். காவலாளி சீருடையில் இருந்த அஜித் குமார் , தனது தாய்க்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்து கொடுத்தற்காக ரூ.500 கொடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்ததாகவும், கோவிலில் இருந்து வீடு திரும்பிய பின்னர் காரில் இருந்த நகை காணாமல் போனதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் நிகிதா அளித்த புகார் மனுவில் உயிரிழந்த அஜித்குமார் 500 ரூபாய் கேட்டதாக குறிப்பிடப்படவில்லை என்கிறார் கார்த்திக் ராஜா. தொடர்ந்து பேசிய அவர். “நிகிதா 27ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். நகை காணாமல் போனதாக 3 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் வாய் மொழியாக முதலில் புகார் அளித்துள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் புகார் மனு அளித்துள்ளார்.”
“எனவே முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. நீதிமன்றத்தில் அஜித் குமார் கொல்லப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு திருப்புவனம் காவல்துறையினரால் தாமதமாக அவசரகதியில் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையாக இதனை நான் பார்க்கிறேன்.” என்று கூறினார்.
இந்த வழக்கில் நிகிதாவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். “உயிரிழந்த அஜித் குமார் மீது இதுவரை எந்த காவல் நிலையத்திலும் குற்ற பின்னணி இல்லை, ஆனால் புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அஜித்குமார் மரணத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாற்றி எதிரியாக நிகிதாவை சேர்க்க வேண்டும்” என்றார்.
சட்டத்திற்குப் புறம்பாக விசாரித்துள்ளனரா?
பட மூலாதாரம், Henri Tiphagne
நிகிதா புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர். “நகை காணவில்லை என்பது தொடர்பாக 27 ஆம் தேதி 3 மணிக்கு நிகிதா புகார் அளித்ததாகவும் அது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.”
“முதல் கட்ட விசாரணை தொடங்கிய திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் திருக்கோயில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அஜித் குமாரை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில் அஜித் குமார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றிருக்கிறார்.”
“காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த அஜித் குமார் காணாமல் போன நகை தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது தான் எடுக்கவில்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நிகிதா இரவு 7 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு ஊடகங்களுக்கு காரில் வைத்திருந்த நகையைக் காணவில்லை, நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.” என்று தெரிவித்தார்
நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறிய டிஎஸ்பி
பட மூலாதாரம், Nikitha
திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த மானாமதுரை டி.எஸ்.பி சிறப்பு தனிப்படை போலீசாரை அழைத்து அஜித் குமாரை விசாரிக்குமாறு ஒப்படைத்துள்ளார்.
ஒப்படைக்கப்பட்ட அஜித் குமாரை காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் பிரதாப் விடுப்பில் இருந்தால் தனிப்படை தலைமைக் காவலர் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரத்தை அழைத்து அஜித் குமார் தொடர்பாக தகவல்களை அளித்ததாக அஜித் குமார் இறப்பு தொடர்பாக தனிப்படை தலைமைக் காவலர் கண்ணன் அளித்துள்ள புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.எஸ்.பி அஜித் குமாரை விசாரிக்க அனுமதி அளித்தன் அடிப்படையில் அஜித்குமாரை 27ஆம் தேதி இரவு கடுமையாக தாக்கியுள்ளனர் என்கிறார் ஹென்றி திபென்
அஜித் குமார் நகையை தான் திருடவில்லை எனச் சொல்வதாக தலைமை காவலர் மீண்டும் டிஎஸ்பியை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதற்கு டி.எஸ்.பி சண்முகசுந்தரம் அஜித் குமாரை “நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறியுள்ளார்”.
தொடர்ந்து பேசிய அவர், “டி.எஸ்.பி உத்தரவின் பெயரில் சம்மன் அளிக்காமல் அருண்குமார், அஜித் குமார் மற்றும் அவரின் தம்பி நவீன் குமாரையும் விசாரணைக்கு அழைத்து வந்து கடுமையாக போலீசார் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் 28ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நிகிதா கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.”
“அப்படியெனில் சட்டத்திற்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் மூன்று இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியது முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே நிகிதாவின் முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.” என்றார்.
“காவல் அதிகாரிகளை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை?”
ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென்.
“அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசாருக்கு உத்தரவிட்ட திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் இதுவரை ஏன் வழக்கில் சேர்த்து அவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்வி நிகிதாவின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எழுகிறது” என அவர் விவரித்தார்.
உடற்கூராய்வுக்கு அனுப்ப ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென்.
“28 ஆம் தேதி மாலை அஜித்குமார் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் 29ஆம் தேதி மாலை வரை உடற்கூராய்வுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம் என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது” என்றார்.
“2011 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிகிதாவை ஏன் காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை” என்ற கேள்வி எழுவதாக கூறுகிறார் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு