• Thu. Sep 19th, 2024

24×7 Live News

Apdin News

அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச் சாவடி – மமக முற்றுகை போராட்டத்தில் ஆவேசம் | thuvakudi tollgate attacked in MMK protest

Byadmin

Sep 17, 2024


திருச்சி: மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை நேற்று முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான ப.அப்துல் சமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 70 சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுங்க கட்டணமாக ரூ.50 கோடியும், ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடியும் செலுத்துகிறோம்.

கேரள மாநிலத்தில் 5 சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளை கணக்கு பார்த்தால் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். இது சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோது பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில் 30 சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டது என்றும், அவற்றை மூடுவதற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஆனால் மத்திய அரசு காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், வருடத்துக்கு 2 முறை சுங்க கட்டணங்களை உயர்த்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலைகளை ஒழுங்காக பராமரிப்பதில்லை. சாலை விபத்துகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. எனவே, தமிழகத்தில் புதிதாக சுங்கச்சாவடிகள் தொடங்கக்கூடாது. காலாவதியான 30 சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும். சுங்க கட்டணங்களை உயர்த்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக இந்த முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து அடுத்த கட்டமாக பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” இவ்வாறு அப்துல் சமது தெரிவித்தார்.

தஞ்சாவூரில் இருந்து முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த வேன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு துவாக்குடி சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர் சுங்கசாவடியின் ஒரு பகுதியை அடித்து நொறுக்கினர். இதில், சுங்கச்சாவடி கண்ணாடி, கண்காணிப்புக் கேமரா, வாகன தடுப்பு கட்டைகள் உடைந்து சேதமடைந்தன.இந்த முற்றுகை போராட்டத்தால் திருச்சி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



By admin