• Sat. Jul 5th, 2025

24×7 Live News

Apdin News

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை விரைவாக நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் | Investigation into AIADMK internal party issue will be conducted expeditiously: EC informs HC

Byadmin

Jul 4, 2025


சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தப்படும், காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும்வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரி, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், சுரேன் பழனிசாமி உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுகவுக்கு எதிரான இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா என்பதை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்து 7 வாரங்கள் கடந்த நிலையில், தேர்தல் ஆணையம் தனக்குரிய அதிகார வரம்பு குறித்து இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் ஆரம்பக்கட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரியும் அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘2026-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக வேண்டிய சூழலில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக விசாரிக்கும் அதிகார வரம்பு குறித்து தேர்தல் ஆணையம் ஆரம்பக்கட்ட விசாரணையை முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடிப்பது சட்டவிரோதமானது. தேர்தல் ஆணையத்தின் இந்தப் போக்கு அதிமுக குறி்த்த தேவையற்ற தகவல்களைப் பரப்ப வழிவகுத்துவிடும்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் தேர்தல் ஆணையத்தின் இத்தகையப் போக்கை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே அதிகார வரம்பு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் இனியும் தாமதிக்காமல், துரிதமாக நடத்தி முடிக்கும் வகையில் காலவரம்பை உயர் நீதிமன்றம் நிர்ணயம் செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் இன்று (ஜூலை 4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றும், எவ்வளவு விரைவாக விசாரணை நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்தவோம். காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க வேண்டாம் என தெரிவித்தார்.

அப்போது ஓபிஎஸ் மற்றும் பெங்களூர் புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தங்கள் தரப்புக்கு மனுவின் நகல்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஓபிஎஸ் மற்றும் புகழேந்தி தரப்புக்கு, நகல்களை வழங்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



By admin