• Mon. Jul 7th, 2025

24×7 Live News

Apdin News

‘அதிமுக எப்போதும் விவசாயிகள், மக்களுடன் இருக்கும்’ – தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய இபிஎஸ் பேச்சு | Edapadi Palanisamy claims ADMK always stand with people, farmers

Byadmin

Jul 7, 2025


கோவை: “அதிமுக அரசாங்கம் என்பது மக்களுக்கான அரசாங்கம், விவசாயிகளுக்கான அரசாங்கம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. எப்போதும் நாங்கள் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என கோவையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது முதலாவது பிரச்சாரப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று (ஜூலை 7) தொடங்கினார். இதையொட்டி இன்று காலை தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் பழனிசாமி தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாய அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி இக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அவர் வலியுறுத்திப் பேசினர்.

அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது : தமிழகம் முழுவதும் உள்ள 6000-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரபட்டது அதிமுக ஆட்சியில் மட்டும்தான். நானும் ஒரு விவசாயி தான். தற்போதும் நான் விவசாயம் செய்து வருகிறேன்.

ஒரு பிள்ளையை தாய் எவ்வாறு பாதுகாக்கிறாரோ அதேபோல் தான் விவசாயிகள் பயிர்களை பாதுகாப்பர். சொட்டுநீர் பாசன திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக தான். 25 சதவீதம் மானியம் கொடுத்தும், மத்திய அரசிடம் நிதி பெற்றும் அந்தத் திட்டத்தை கொண்டு வந்தோம்.

கால்நடை மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதும் அதிமுக ஆட்சியில்தான். அமெரிக்கா சென்று ஆய்வுசெய்து இங்கு வந்து பசு ஆராய்ச்சி செய்ய மையம் தொடங்கினோம். கலப்பினப் பசுவை உருவாக்கி, பால் உற்பத்தியை அதிகப்படுத்த முயற்சித்தோம். ஆடு, மீன், பன்றி, கோழி வளர்ப்பு எல்லாமே அங்கு மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. விவசாயிகளை நேரடியாக அழைத்துச்சென்று பயிற்சி அளிக்க முயற்சித்தோம். ஆனால், அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் எல்லாம் கிடப்பில் போடப்பட்டது.

பசுக்களை இலவசமாக விவசாயிகளுக்கு கொடுத்ததும் அதிமுக ஆட்சியில்தான். கால்நடைகளுக்கு நோய் வருவதற்கு முன்பாக அதைத் தடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எவ்வாறெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள ஒரு மையம் அமைத்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியதும் அதிமுக ஆட்சியில்தான்.

எங்கள் ஆட்சியில், மும்மனை மின்சாரம் இலவசமாக வழங்கினோம்.வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்ததோம். வனவிலங்குகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகளை உடனடியாக மதிப்பீடு செய்து அதன் இழப்பீட்டை வழங்கியது நான் முதல்வராக இருந்தபோதுதான்.

திமுக ஆட்சியில் நான்கு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

அதிமுக ஆட்சியில் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நீர் பிரச்சினையை தீர்க்க வழி வகுத்தோம். தற்போது ஆட்சி மாற்றம் ஆன பிறகு அந்தப் பிரச்சினை குறித்து இந்த அரசு பேசவோ, அல்லது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவோ இல்லை.

நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்காக ரூ.11,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2019-ம் ஆண்டில் நான் முதல்வராக இருந்தபோது பிரதமரை சந்தித்தேன். ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை விளக்கி அதற்காக நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன் அடிப்படையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசாங்கம் என்பது மக்களுக்கான அரசாங்கம், விவசாயிகளுக்கான அரசாங்கம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. எப்போதும் நாங்கள் விவசாயிகளுடன்; மக்களுடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் சூளை தொழிலாளர்களின் கோரிக்கை மனுக்களின் மீது அதிமுக ஆட்சியில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.



class="a2a_kit a2a_kit_size_32 addtoany_list" data-a2a-url="https://24x7livenewz.com/tamil/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af/8262146/" data-a2a-title="‘அதிமுக எப்போதும் விவசாயிகள், மக்களுடன் இருக்கும்’ – தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய இபிஎஸ் பேச்சு | Edapadi Palanisamy claims ADMK always stand with people, farmers">

By admin