சிவகங்கை: “ஸ்டாலினை முதல்வர் பதவியில் இருந்து இறக்கும் வரை அதிமுக, பாஜக இணைந்து போராடும்” என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது: “அஜித்குமார் குடும்பத்தினர் வாய் திறக்கவே பயப்படுகின்றனர். திமுக பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மிரட்டியுள்ளதாக கூறுகின்றனர். சாத்தான்குளத்துக்கு ஓடோடி சென்ற ஸ்டாலின் குடும்பம், மடப்புரத்துக்கு ஏன் வர மறுக்கிறது?
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட எஸ்பி-யை கேட்காமல், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் கழிப்பறைக்கு கூட போக முடியாது. அவருக்கு தெரியாமல் காவல் நிலையத்தில் எதுவும் நடக்காது. அஜித்குமார் இறந்தபோது திருப்புவனத்துக்கு வந்த எஸ்பி, அஜித்குமாரின் தாயாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், உண்மையை மறைத்து பொய் சொல்லியுள்ளார் எஸ்.பி. குற்றவாளி பட்டியலில் எஸ்.பி.யையும் சேர்க்க வேண்டும்.
நகைக்குரிய பணத்தை நான் தந்து விடுகிறேன். இறந்தவர் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா? நடக்காத குற்றத்துக்கு எஸ்.பி.-யிடம் பேசிய அந்த உயரதிகாரி யார்? ஒருவரை அடித்து கொல்லும் அளவுக்கு அவர் அவ்வளவு பெரிய ஆளா? சமூக வலைதளங்கள் வந்த பின்னர், யாரும் எதையும் மறைக்க முடியாது.
இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் வைத்து அடித்துள்ளனர். அதை எப்படி அறநிலையத் துறை அதிகாரிகள் தடுக்க தவறினர். அங்குள்ள அதிகாரிதான் அஜித்குமாரை காவல் நிலையத்தில் விட்டுள்ளார். ஸ்டாலின் மீது எப்போது குற்றச்சாட்டு வந்தாலும் அதில் அமைச்சர் சேகர்பாபு பங்கும் இருக்கிறது.
அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். ஸ்டாலினை முதல்வர் பதவியில் இருந்து இறக்கும் வரை அதிமுக, பாஜக இணைந்து போராடும். ஸ்டாலின் பொறுப்புக்கு வந்த பின்னர் 25 காவல் மரணங்கள் நடைபெற்றுள்ளன. இது தவிர பல என்கவுன்டர்களும் நடந்துள்ளன. ஊழல், ஊரல், போதை, இந்த அரசு தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்தால் இளைய தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். அதனால், இந்த அரசு தொடரக் கூடாது. அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று ஹெச்.ராஜா பேசினார்.