1
35 வருடங்களாக இடம்பெயர்ந்து துன்பத்தில் இருக்கின்றோம் நாம் போராட்டத்தில் ஈடுபட்ட போது அரச அதிகாரிகள் அதனை அலட்சியம் செய்து விட்டனர் இதனால் ஜனாதிபதிக்கு எங்கள் நிலைiயை தெரிவிப்பதற்காக கொழும்பிற்கு வந்தோம் என கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டமொன்று நடைபெற்றது.
குறித்த போராட்டத்தில், விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.
வலிகாமம்விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள் மேலும் தெரிவித்ததாவது. பழைய வர்த்தமானியை நீக்கி எங்களின் காணிகளை எங்களிடம் உடனடியாக ஒப்படைக்கவேண்டும்.
35 வருடங்களாக இடம்பெயர்ந்து பெரும் துன்பத்தில் இருக்கின்றோம்.வலிகாமத்தில் விடுவிக்கப்படவேண்டிய 2400 ஏக்கர் காணி உள்ளது அதனை உடனடியாக விட்டுதரவேண்டும்.
நாங்கள் மயிலிட்டியில் ஐந்து நாள் போராட்டம் நடத்தினோம் அதன்போது எந்த அரச அதிகாரியும் வந்து எங்களுடன் பேசவும் இல்லை எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவும் இல்லை.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கு அந்த செய்தி சென்றிருக்காது என்ற காரணத்தினால் இன்று கொழும்பில் நாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம்.
ஜனாதிபதிக்கு நாங்கள் எங்களின் நிலையை தெரிவிப்பதற்காகவும் அவருக்கு மகஜர் கையளிப்பதற்காகவும் இன்று இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம்
எங்கள் காணிகளை விரைவாக விட்டுத்தரவேண்டும்,மயிலிட்டியில் 1200 ஏக்கர் காணியை விடுவிக்கவேண்டும், அதில் சிறுபகுதிதான் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் பயன்பாட்டின் கீழ் உள்ளது ஏனையது வெறும் காணியாக காணப்படுகின்றது.
அந்தக்காணியின் உரிமையாளர்கள் வந்துவீதியில் நின்று பார்த்துவிட்டு திரும்பிச்செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.சும்மா இருக்கும் காணியை எங்களிடம் தந்தால் நாங்கள் எங்கள் காணிக்குள் சந்தோசமாக இருப்போம்.
இதனை நாங்கள் பல இடத்தில் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை.
ஜனாதிபதி செய்துதருவார் என்ற நம்பிக்கை இருக்கு இதன்காரணமாகத்தான் நாங்கள் இங்கு வந்து போராடுகின்றோம்.ஜனாதிபதி எங்கள் காணிகளை விரைவாக விடுவித்து தரவேண்டும்.
இதேவேளை இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்ணொருவர் நாங்கள் எங்கள் காணிகளை விட்டுவிட்டு இங்கே இருக்கின்றோம் அவர்கள் தேங்காய் மாங்காய் பிடுங்குகின்றார்கள் என தெரிவித்தார்.
காணிகளை விட்டால்தான் நாங்கள் சீவிக்கலாம் இப்பவும் அங்கு ஒரு ஆக்களும் இல்லை எங்கள் கோவிலுக்கு கூட போகமுடியவில்லை என தெரிவித்த அவர் ஜனாதிபதியிடம் இதனை கேட்க போகின்றோம் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் கோவில் நாங்கள் அங்கிருந்து வெளிக்கிட்டு முப்பத்தைந்து நாற்பது வருடங்களாகின்றன என தெரிவித்தார்.