மேலக்கோட்டையூர்: தமிழியக்கம் மற்றும் மறைமலை அடிகள் கல்வி அறக்கட்டளை சார்பில், மறைமலை அடிகள் 150-வது பிறந்த நாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா, வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள விஐடி சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு, தமிழியக்கத்தின் தலைவரும் விஐடி வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
விழாவில், மறைமலை அடிகளார் பேரன் மறை தி.தாயுமானவன் தயாரித்த மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு என்ற தலைப்பிலான நூலை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட, ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ பெற்றுக் கொண்டார்.
விழாவில், கோ.விசுவநாதன் பேசும்போது, ”தமிழ் மொழிக்கு பிறகு சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் சம்ஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.2,500 கோடி செலவு செய்துள்ளது.
அதுவே, தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு வெறும் ரூ.140 கோடி தான் செலவு செய்துள்ளது. இதில் இருந்தே மத்திய அரசின் அணுகுமுறையை அறிந்து கொள்ளலாம். தற்போது, தமிழுக்கு நேரடியாக அல்ல மறைமுகமாகஆபத்து வருகிறது. தமிழ்நாடு பல விதங்களில் நெடுக்கருக்கடிகளை சந்தித்து வருகிறது. இச்சூழலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழை பாதுகாக்க வேண்டும்” என்றார்.
விழாவில், எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில், “இந்த உலகம் உள்ளவரை தமிழ் மொழி நெடுங்காலம் வாழும். இன்றைய தலைமுறையினரிடம் ஆழ்ந்த வாசிப்பு பழக்கம் இல்லை. இளம் தலைமுறையினர் அவ்வாறு இல்லாமல் நம்முடைய வேரை தேடி போக வேண்டும். நீண்ட நெடு போராட்டத்துக்கு பிறகு தான் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது” என்றார்.
விழாவில் தமிழியக்கம் மாநிலச் செயலாளர் சொற்கோ.மு.சுகுமார், பொதுச்செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் புலவர் வே.பதுமனார், மேலாண்மைக் குழு உறுப்பினர் முனைவர் வெ.முத்து, சென்னை கம்பன் கழகம் செயலாளர் முனைவர் சாரதா நம்பி ஆரூரன், மறைமலை அடிகள் கல்வி அறக்கட்டளை தலைவர் மறை தி.தாயுமானவன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பு.செந்தில்நாதன், மறைமலை அடிகள் கல்வி அறக்கட்டளை பொருளாளர் செ.அருட்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.