பட மூலாதாரம், Getty Images
“அன்ஷுல் விளையாடுவார் என்றோ, இந்திய அணியில் அவரது அறிமுக ஆட்டம் இன்றுதான் எனவோ எங்களுக்குத் தெரியாது. டாஸ் போடும் நேரத்தில்தான், அவர் விளையாடுவதே எங்களுக்குத் தெரிந்தது…”
மான்செஸ்டர் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமான அன்ஷுல் காம்போஜின் தம்பி சன்யம், பிபிசியிடம் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பையின் நான்காவது டெஸ்ட் புதன்கிழமை (2025, ஜூலை 23) தொடங்கியது. டாஸ் போடுவதற்கு சற்று முன்பு, 25 வயதான அன்ஷுல் காம்போஜுக்கு அறிமுகத் தொப்பி வழங்கப்பட்டது. அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் 318வது கிரிக்கெட் வீரர் ஆனார்.
அன்ஷுலின் பயிற்சியாளர் சதீஷ் ராணாவிடம் பிபிசி பேசியது. கிரிக்கெட் பயிற்சி தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே, இந்திய அணிக்காக அன்ஷுல் விளையாடுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஹரியாணாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஃபாசில்புரா கிராமத்தில் வசிக்கும் அன்ஷுல், 11 வயதிலிருந்தே கர்னாலில் உள்ள சதீஷ் ராணாவின் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
பட மூலாதாரம், Satish Rana
அன்ஷுலின் தந்தை ஒரு விவசாயி. மகனை கர்னாலில் உள்ள இந்த அகாடமிக்கு முதன்முதலில் அவர்தான் அழைத்துச் சென்றார்.
ஆரம்ப ஆண்டுகளில், அன்ஷுலின் தந்தை அவரை பயிற்சிக்காக தினமும் அகாடமிக்கு அழைத்துச் செல்வார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனியாகவே பேருந்தில் ஏறி கிரிக்கெட் பயிற்சிக்காக கர்னாலுக்கு செல்லத் தொடங்கிவிட்டார் அன்ஷுல்.
இப்போது அன்ஷுலின் குடும்பம் கர்னாலுக்கு குடிபெயர்ந்துவிட்டது. இருப்பினும் அவர்கள் இன்றும் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தின் ரசிகராக இருந்து வருகிறார். அன்ஷுல் தனது சிறுவயது முதல் ‘அவரைப் போலவே (மெக்ராத்)’ இருக்க விரும்பினார்.
மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் சீராக பந்துவீசும் திறன் கொண்ட அன்ஷுலின் லைன் மற்றும் லென்த் மீதான கட்டுப்பாடும் சிறப்பாக உள்ளது.
மான்செஸ்டர் போட்டியில் மகன் விளையாடுவது பெற்றோருக்குப் பெருமையாக இருப்பதாகக் கூறும் அன்ஷுலின் சகோதரர் சன்யம், “அம்மாவும் அப்பாவும் மிக மகிழ்ச்சியாக உள்ளனர். அன்ஷுலின் அறிமுகத்திற்குப் பிறகு, வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுக்கு இனிப்புகளை விநியோகித்து மகிழ்ந்தார்கள்” என்று கூறுகிறார்.
அன்ஷுலின் அறிமுகப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்வதால், இந்தியாவுக்காக அவர் விளையாடுவதைப் பார்ப்பதற்கான காத்திருப்பு சற்று அதிகமாக இருக்கும். ஆனால், “இது டெஸ்ட் போட்டி. எனவே, இந்தக் காத்திருப்பு ஏற்றுக் கொள்ளத்தக்கது. இந்தியா நன்றாக விளையாடி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அவரது தம்பி தெரிவித்தார்.
பி.காம் இறுதி ஆண்டு மாணவரான சன்யமைவிட அன்ஷுல் நான்கு வயது மூத்தவர். “ஆரம்பத்தில் அன்ஷுல் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுவார். பின்னர் அவரை அப்பா அகாடமியில் சேர்த்துவிட்டார்” என்று கூறினார்.
‘க்ளென் மெக்ராத்தால் ஈர்க்கப்பட்டார்’
“ஆரம்பத்தில் கிரிக்கெட் அகாடமிக்கான கட்டணம் பெரிதாக இல்லை. பின்னர் சதீஷ் ராணா சார் எல்லாவற்றையும் சமாளித்தார். இப்போதும் அன்ஷுல் அதே அகாடமியில் பயிற்சி செய்கிறார். அன்ஷுல் ஆரம்பத்தில் இருந்தே கிளென் மெக்ராத்தின் பந்துவீச்சைப் பார்த்து ரசிப்பார்” என்று அன்ஷுலின் சகோதரர் கூறுகிறார்.
அன்ஷுலின் தந்தைக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தாலும், தாயாருக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இல்லை. கிரிக்கெட் ஆர்வம் இல்லாவிட்டாலும், தனது மகனின் போட்டிகளை நிச்சயமாகப் பார்க்கத் தவறமாட்டார், தனது மகன் இந்திய அணியில் அறிமுகமானதில் அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.
இந்திய அணிக்கு அன்ஷுல் தேர்வு செய்யப்பட்ட பிறகு குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருந்தது என்ற கேள்விக்குப் பதிலளித்த சன்யம், “எங்களால் அதிகம் பேச முடியவில்லை. பயிற்சி எப்படிப் போகிறது என்றுதான் அப்பா அன்ஷுலிடம் கேட்டார்” என்று பதிலளித்தார்.
ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு தனது கிராமத்திற்குச் சென்ற அன்ஷுலை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது, கிராமத்தில் உள்ள பிற குழந்தைகளும் கிரிக்கெட் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர்.
“இந்திய அணியில் அறிமுகமானதும் அன்ஷுல் கிராமத்தில் மிகுந்த மகிழ்ச்சி நிலவுகிறது. இங்கு பண்டிகையைப் போல் இருக்கிறது. நாங்கள் இனிப்புகளை விநியோகிக்கிறோம். அனைவருக்கும் இனிப்புகளை ஊட்டி மகிழ்கிறோம்” என்று அன்ஷுலின் மாமா யஷ்பால் காம்போஜ் கூறுகிறார்.
அன்ஷுலுக்கு கிரிக்கெட் தவிர வேறு எதுவும் பிடிக்காது என்றும் அவர் கூறினார். “ஜிம், மைதானம் மற்றும் கிரிக்கெட், இவைதான் அன்ஷுலின் வாழ்க்கை. கடந்த 10 ஆண்டுகளாக மைதானத்திலோ அல்லது ஜிம்மிலோ தான் அவரைப் பார்க்க முடிகிறது” என்கிறார் அவர்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு நழுவியபோது சிதைந்த கனவு
பட மூலாதாரம், Getty Images
ஹரியாணா அணிக்காக 14 வயதுக்கு உட்பட்டோர், 16 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட்டில் அன்ஷுல் விளையாடியுள்ளார். 2020ஆம் ஆண்டில், 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை அணிக்கும் அன்ஷுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் போட்டிக்கு சற்று முன்பு ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் அதில் பங்கேற்க முடியவில்லை. அந்த நேரத்தில் அன்ஷுல் மிகவும் ஏமாற்றமடைந்தார்.
“நான் அன்ஷுலுக்கு நிலைமையை புரிய வைக்க முயன்றேன். தினமும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் தொலைபேசியில் பேசுவோம். ‘இன்னும் எதுவும் முடிந்துவிடவில்லை, உன் முழு எதிர்காலமும் அங்கு இருக்கிறது’ எனக் கூறுவேன்” என பயிற்சியாளர் சதீஷ் ராணா கூறுகிறார்.
கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது, அன்ஷுல் கிராம மைதானத்தில் தனது பயிற்சியைத் தொடர்ந்தார்.
அன்ஷுல் காம்போஜின் மாமா கௌரவ் காம்போஜ் இவ்வாறு கூறுகிறார், “ஊரடங்கு காலத்தில், நாங்கள் கிராமத்தில் உள்ள மைதானத்தில் விளையாடுவோம். அப்போது நாங்களும் கிராமத்தில் இருந்தோம். ஊரடங்கு காலம் முழுவதும், கிராமத்தில் நான்கு முதல் ஐந்து மணிநேரம் வரை பயிற்சி செய்வோம்.”
“எந்தவிதமான சூழ்நிலையாக இருந்தாலும் அனுசரித்து வாழக் கூடியவர் அன்ஷுல். கிராமத்தில் உள்ள அனைவரும் அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகின்றனர். இது அவரது வெற்றி மட்டுமல்ல, முழு கிராமத்தின் வெற்றி” என கௌரவ் காம்போஜ் கூறுகிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் அன்ஷுல் தனது பந்துவீச்சில் முத்திரையைப் பதித்தார்/ ஹரியாணாவை வெற்றி பெறச் செய்வதில் முக்கியப் பங்கு வகித்த அன்ஷுல், அந்தத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை பயணம்
விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் மிளிர்ந்த அவரது திறமை ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. 2024ஆம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணி அன்ஷுலை ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது. முதல் சீசனில், அன்ஷுல் மூன்று போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
ஆனால் அதே ஆண்டில், ரஞ்சி கிரிக்கெட்டில் வரலாறு படைத்த அன்ஷுல், கேரளாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில், 30.1 ஓவர்களில் 49 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஞ்சி டிராபியில் இந்தச் சாதனையை நிகழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையும் அவருக்கு வந்து சேர்ந்தது.
இதன் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அன்ஷுலை ரூ.3.8 கோடிக்கு வாங்கியது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், அன்ஷுல் 8 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
“ஆரம்பத்தில் இருந்தே, அன்ஷுல் வேகப்பந்து வீச்சாளராக விரும்பினார். அவர் க்ளென் மெக்ராத் போல தனது லைன் அண்ட் லென்த்-ஐ கட்டுப்படுத்தி பந்து வீசினார். அதனால்தான் அவரது லைன் அண்ட் லென்த் மிகவும் நன்றாக இருக்கிறது” என்று சதீஷ் ராணா கூறுகிறார்.
“எப்போதுமே தனது விளையாட்டில் கவனம் செலுத்தி வந்த அன்ஷுல், தற்போதும் அதை அப்படியே தொடர்கிறார். தினசரி 8 முதல் 10 மணி நேரம் வரை பயிற்சி செய்யும் அன்ஷுல், காலையில் அகாடமிக்கு வந்துவிட்டால், மாலையில்தான் கிளம்புவார். இரவும் பகலும் கடுமையாக உழைத்த அன்ஷுல் சிறப்பான வீரராக உருவெடுத்துள்ளார்.”
“ரஞ்சி போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு நிலைமை மாறியது. சென்னைக்காக சிறப்பாக விளையாடிய அன்ஷுல், தோனியுடன் விளையாடியதன் பலனையும் பெற்றுள்ளார். தோனி மிகவும் கூலாக இருக்கிறார் என்று அன்ஷுல் சிலாகித்துப் பேசுவார்” என சதீஷ் ராணா கூறுகிறார்.
தனது அறிமுகப் போட்டிக்கு ஒரு நாள் முன்பு அன்ஷுல், தனது பயிற்சியாளர் சதீஷ் ராணாவுடன் பேசினார். அப்போது, “எனக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தால், எனது 100 சதவிகித திறமையையும் காட்ட முயல்வேன் என்று அன்ஷுல் கூறினார்” என சதீஷ் ராணா கூறுகிறார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு