
-
- எழுதியவர், யோகிதா லிமாயே
- பதவி, பிபிசி நியூஸ்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
வெறும் மூன்று மாதங்களுக்குள், இந்தியாவின் ஜென் ஸி “கரப்பான் பூச்சி” போராட்டங்களின் நிறுவுநரும் முகமுமான 30 வயது அபிஜித் தீப்கே, வளர்ந்து வரும் நடிகர் அல்லது கிரிக்கெட் வீரருக்குக் கிடைக்கும் அளவிலான பிரபல அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
அரசியல் அல்லது சமூக செயல்பாடுகள் துறையில், செல்வாக்கு மிக்க குடும்பப் பின்னணி இல்லாவிட்டால், இத்தகைய அங்கீகாரத்தைப் பெற பல ஆண்டுகள் ஆகலாம். சில நேரங்களில் அது கிடைக்காமலும் போகலாம்.
“இது மிகவும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த பயணம். இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு யாருக்கும் என்னைத் தெரியாது. நான் பாஸ்டனில் உள்ள எனது அறையில் ஆவணப்படங்களைப் பார்த்துக்கொண்டோ அல்லது விரிவுரைகளில் கலந்துகொண்டோ இருந்தேன்,” என்று சமீபத்தில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியல் முதுகலைப் படிப்பை முடித்த அபிஜித் தீப்கே கூறினார்.
“இப்போது நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் கேமராக்கள் சூழ நான் இங்கே இருக்கிறேன். இந்த அளவுக்கு கவனம் கிடைப்பது சற்று திகைப்பாக இருக்கிறது.”
மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊரான சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், அபிஜித் தீப்கேயிடம் கைகுலுக்கவோ புகைப்படம் எடுத்துக்கொள்ளவோ விரும்பும் மக்கள் அவரைச் சூழ்ந்துகொள்வது வழக்கமாகிவிட்டது.
அந்தக் கவனம் அவருக்கு ஒருவேளை தொந்தரவாக இருந்தாலும் கூட, அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஒருவேளை அரசியல் அவருக்கு முற்றிலும் புதிதல்ல என்பதாலும் கூட அப்படி இருக்கலாம். அமெரிக்கா செல்வதற்கு முன்பு, ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து உருவான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருந்தார் அபிஜித் தீப்கே.
வாழ்க்கையை மாற்றிய பதிவு
பின்னர், மே 16ஆம் தேதி அபிஜித் தீப்கே தன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அது அவரது வாழ்க்கையை மாற்றியது:
“எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்றாக சேர்ந்தால் என்ன?” என்பதுதான் அப்பதிவு.
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அந்தப் பதிவை அவர் வெளியிட்டார். போலி பட்டங்களைப் பயன்படுத்தும் இளைஞர்களைக் குறிப்பிட்டே தாம் பேசியதாகவும், நாட்டின் இளைஞர்கள் அனைவரையும் பொதுவாகக் குறிப்பிடவில்லை என்றும் பின்னர் சூர்ய காந்த் விளக்கமளித்தார்.
ஆனால், அந்த விளக்கம் எதிர்ப்பைக் குறைக்கவில்லை.
வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது அந்தப் பதிவை வெளியிட்டதாக அபிஜித் தீப்கே கூறுகிறார். “அது முற்றிலும் தன்னிச்சையானது. அது இவ்வளவு பெரிய இயக்கமாக மாறும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்றார் அவர்.
பல்லாயிரக்கணக்கானோரின் ஆதரவைத் தொடர்ந்து, முன்னாள் சக பணியாளர்கள் மற்றும் சில செயற்பாட்டாளர்களுடன் இணைந்து, நையாண்டி அமைப்பான ‘காக்ரோச் ஜனதா கட்சி’யைத் (CJP) தொடங்கினார் அபிஜித் தீப்கே. அதன் பெயர், தலைமை நீதிபதியின் கருத்தையும் பிரதமர் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சியின் பெயரையும் இணைத்து உருவாக்கப்பட்டது.
அபிஜித் தீப்கேவும் இந்தப் போராட்டமும் ஆதரவுக்கு மத்தியில் அரசு ஆதரவாளர்களால் கடுமையான இணையவழித் தாக்குதலுக்கு உள்ளானது. அவர்களின் இணையதளமும் எக்ஸ் கணக்கும் இந்தியாவில் சிறிது காலத்துக்கு முடக்கப்பட்டன.
அதுகுறித்து எக்ஸ் நிறுவனத்திடமும், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமும் கேட்டபோது, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் அந்தக் கணக்கு முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாக அபிஜித் தீப்கே கூறுகிறார். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு ஆகியவற்றின் நலன் கருதி இணையதளத் தகவல்களை முடக்க இந்தப் பிரிவு அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சகம் பதிலளிக்கவில்லை. ஆனால், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஊடகங்கள், “தேசியப் பாதுகாப்புக் கவலைகள்” காரணமாக இணையதளங்கள் முடக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தன. இதையடுத்து இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்ததாக அபிஜித் தீப்கே கூறுகிறார்.
பட மூலாதாரம், EPA/Shutterstock
இந்தியாவுக்கு திரும்பியது ஏன்?
“என்னுடைய சொந்த அரசாங்கத்தாலேயே நான் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிவிக்கப்பட்டபோது இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. நான் வெளிநாட்டில் இருக்கும்போது எனது அரசாங்கம் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டாமா?” என்றார் அவர்.
“நான் எனது நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை காட்ட வேண்டும் என்று நினைத்தேன். எனது நாட்டை நான் நேசிக்கிறேன். ஆனால், நீங்கள் [அரசாங்கம்] விரும்பும் விதத்தில் அல்ல.”
அவர் இந்தியாவுக்குத் திரும்புவது எளிதான முடிவாக இருக்கவில்லை. சமீப ஆண்டுகளில், அரசாங்கத்தை விமர்சித்த செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் காவல்துறை விசாரணை, சட்ட வழக்குகள் மற்றும் சில நேரங்களில் சிறைத் தண்டனையையும் எதிர்கொண்டுள்ளனர்.
தான் ஆலோசித்த வழக்கறிஞர் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தாம் கைது செய்யப்படலாம் என்று எச்சரித்ததாகவும் அபிஜித் தீப்கே கூறுகிறார். இந்தச் சட்டத்தின் கீழ் முறையான குற்றச்சாட்டு அல்லது விசாரணையின்றி ஒருவரைத் தடுப்புக் காவலில் வைக்க முடியும். பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் எப்போதும் மறுத்து வந்தாலும், பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
“நான் பயந்தேன் என்பதை மறுக்க மாட்டேன். இந்தியாவுக்குத் திரும்பினால் என் வாழ்க்கை மாறிவிடும் என்று நினைத்து தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தேன். ஆனால், நான் அமெரிக்காவில் இருந்தால், காக்ரோச் ஜனதா கட்சியைப் பின்தொடர்ந்தவர்கள் அனைவரும் ஏமாற்றமடைவார்கள். ‘அவர் இந்தியாவுக்கு வரவில்லை. அமெரிக்காவிலேயே ஒளிந்துகொண்டிருக்கிறார்’ என்று நினைப்பார்கள்,” என்றார் அபிஜித் தீப்கே.
அவரது குடும்பமும் கவலையடைந்தது.
“என் அம்மா போனில் பேசும்போது உடைந்து அழுதார். ‘ஏன் திரும்பி வருகிறாய்? அவர்கள் உன்னைச் சிறையில் அடைக்கலாம் அல்லது தாக்கலாம்’ என்றார். இப்போது பின்வாங்க முடியாது, வரவில்லையென்றால் மக்கள் என்னைக் கேலி செய்வார்கள் என்று அவரிடம் கூறினேன்.”
மோதி அரசாங்கம் எதிர்கொண்ட முதல் பெரிய மக்கள் போராட்டம் கரப்பான் பூச்சி போராட்டம் அல்ல. 2019ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன.
அந்தப் போராட்டங்கள் குறிப்பிட்ட மத அல்லது அரசியல் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், இந்தியாவின் நற்பெயருக்கு சேதம் ஏற்படுத்தும் முயற்சிகள் என்றும் அரசாங்க ஆதரவாளர்கள் அடிக்கடி சித்தரித்தனர்.
ஆனால், காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தையும் இதேபோன்று மதிப்பிழக்கச் செய்யும் முயற்சிகள் பல காரணங்களால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தபோதிலும், கல்வியும் வேலைவாய்ப்பும் இளம் இந்தியர்களுக்கு முக்கிய கவலைகளாக உள்ளன. சமீபத்திய அரசு அறிக்கையின்படி, தங்களது திறன்களுக்கு ஏற்ற வேலைகளைப் பெறும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 8%-க்கும் சற்று அதிகமாகவே உள்ளது. பட்டதாரிகளுக்கான வேலையின்மை விகிதம் 29.1% ஆக உள்ளது. பள்ளிக்குச் செல்லாதவர்களைவிட இது ஒன்பது மடங்கு அதிகம்.
மேலும், 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துவரும் மோதி அரசாங்கம், 2020ஆம் ஆண்டில் இல்லாத அளவுக்கு ஆட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்கொள்கிறது.

போராட்டத்திற்கான காரணம்
ஆனால், முக்கியமாக, காக்ரோச் ஜனதா கட்சியும் பரவலாக மக்களை ஈர்க்கக்கூடிய ஒரு பிரச்னையைக் கண்டறிந்தது.
இந்தப் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்), வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இந்தச் சர்ச்சை மாணவர்களையும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களையும் பாதித்தது. அது மதம் மற்றும் சாதி வேறுபாடுகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கவனம் செலுத்தியது திட்டமிட்ட உத்தி அல்ல என்றும், காக்ரோச் ஜனதா கட்சியைத் தொடர்புகொண்ட மாணவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவ்வாறு செய்ததாகவும் தீப்கே கூறுகிறார்.
“நான் தினமும் எங்களை பின்தொடரும் குறைந்தது நூறு பேரிடம் பேசினேன். அவர்களில் பெரும்பாலானோர் வினாத்தாள் கசிவு குறித்து புகார் தெரிவித்தனர். அது தொடர்பாக ஒரு அடிப்படையான அதிருப்தி இருந்தது,” என்றார் அவர்.
ஜூன் 6ஆம் தேதி டெல்லியின் ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி முதன்முறையாக போராட்டம் நடத்தியபோது, நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். ஆனால், அதைக் களத்தில் ஒரு தீவிரமான இயக்கமாகக் கருதும் அளவுக்கு அந்த எண்ணிக்கை போதுமானதாக இருக்கவில்லை.
“நாங்கள் அங்கே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தோமோ, அவ்வளவு அதிகமான மக்கள் எங்களை நம்பத் தொடங்கினர்,” என்றார் தீப்கே. ஆதரவைத் திரட்டுவதில் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் நடத்திய 26 நாள் உண்ணாவிரதப் போராட்டம் முக்கிய பங்காற்றியதாக அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
திருப்புமுனை தருணம்
பின்னர் ஒரு திருப்புமுனை தருணம் ஏற்பட்டது.
ஜூலை 20ஆம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது, அவர்களைக் கலைக்க காவல்துறையும் துணை ராணுவப் படைகளும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், தடிகள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தின. இதில் போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர். காவல்துறையினர் பலரும் காயமடைந்ததாக அரசாங்கம் கூறுகிறது.
இளம் போராட்டக்காரர்கள் மீது பலப்பிரயோகம் செய்யப்பட்ட காட்சிகள் பெரும் ஆதரவு எழுச்சியை ஏற்படுத்தின. ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரளத் தொடங்கினர். போராட்டங்கள் மற்ற நகரங்களுக்கும் பரவின.
எதிர்க்கட்சிகள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவளித்தன. மாணவர்களின் கவலைகளுக்காக ஏன் அவர்கள் இன்னும் தீவிரமாக குரல் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கேள்வி எழுப்பினாரா என்று கேட்டபோது, இல்லை என்று தீப்கே கூறினார்.
“நான் முதன்முறையாக ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தேன். அதனால், அவர்கள் எங்களுக்கு ஆதரவாக வந்ததற்காக நன்றியுடன் இருந்தேன்.”
அரசு திடீரென கடும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து வந்த இரண்டு இரவுகளில், மோதி நாட்டின் இளைஞர்களை நோக்கிப் பேசிய காணொளிகளை வெளியிட்டார். தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால், போராட்டக்காரர்கள் விரும்பியதை அவர் தெரிவிக்கவில்லை என்பதால், அந்தக் காணொளிகள் மேலும் எதிர்ப்பை ஏற்படுத்தின. போராட்டக்காரர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரினர்.
சமீபத்திய மாநிலத் தேர்தல்களில் முக்கிய பங்காற்றிய பாஜக தலைவரான பிரதான் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும் என்று நினைப்பதே கடினமாக இருந்தது.
ஆனால், ஜூலை 25ஆம் தேதி அவர் பதவி விலகினார். “தேச விரோத சக்திகள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக” பதவி விலகுவதாக அவர் கூறினார்.
மோதி அரசாங்கம் இதற்கு முன்பும் தனது முடிவை மாற்றியிருக்கிறது. 2021ஆம் ஆண்டு, ஓராண்டு நீடித்த விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், தர்மேந்திர பிரதான் பதவி விலகியது மிகக் குறுகிய காலத்திலேயே ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு வரை பெரும்பாலானோருக்குத் தெரியாதவர்களால் வழிநடத்தப்பட்ட இயக்கத்தின் அழுத்தத்தால் இது நிகழ்ந்தது.
பிரதான் பதவி விலகியது தீப்கேவுக்குத் தெரிய வந்தபோது, அவர் போராட்டக் களத்தில் மேடையில் இருந்தார். அவர் மண்டியிட்டார். பின்னர் எழுந்து, தனது கையை உயர்த்தி, “நாம் சாதித்துவிட்டோம்” என்று முழக்கமிட்டார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
கேள்விகளை எதிர்கொள்ளும் காக்ரோச் ஜனதா கட்சி
அந்தத் தருணத்தின் பரபரப்பு கடந்துவிட்ட நிலையில், காக்ரோச் ஜனதா கட்சி இப்போது மிகவும் கடினமான கேள்விகளை எதிர்கொள்கிறது. குறிப்பாக, தான் ஈர்த்த கவனத்தை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
அதன் சமீபத்திய பிரசாரம், கிராமப்புற இந்தியாவில் உள்ள அரசு பள்ளிகளின் நிலைமையை மையமாகக் கொண்டுள்ளது.
“கிராமப்புற இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு கண்ணியமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை,” என்று மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்றபோது தீப்கே கூறினார்.
அந்தப் பள்ளியில் மாணவிகளுக்கான கழிப்பறை இல்லை. காலாவதியான உணவுப் பொருட்கள் மதிய உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. மற்றொரு பள்ளியில் தரை, சுவர்கள் மற்றும் கூரையில் விரிசல்கள் காணப்பட்டன.
இந்தப் பிரசாரம் ஓரளவு ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனால், திட்டமிட்ட தேசிய இயக்கத்தைவிட தன்னிச்சையாக நடத்தப்படுவது போன்ற தோற்றம் அளிக்கிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இன்னும் ஒருங்கிணைப்பு குறைந்த அழுத்தக் குழுவைப் போன்றே உள்ளது. இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவு என்று தீப்கே கூறுகிறார்.
“மக்கள் அரசியலைத் தேர்தல்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்குள் மட்டுமே மட்டுப்படுத்திவிட்டனர். அதைக் கடந்து செல்ல நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் அவர்.
“மக்கள் தங்களது உரிமைகள், கடமைகள் மற்றும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசாங்கத்தை எவ்வாறு பொறுப்புக்கூறச் செய்வது என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு கலாசார மாற்றத்தை ஏற்படுத்தவே நாங்கள் இங்கே இருக்கிறோம்.”

இந்த இயக்கம் எதற்காகப் போராடத் தேர்வு செய்கிறது என்பது குறித்தும் கேள்விகள் உள்ளன.
தீப்கே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு, கடுமையான சாதியமைப்பின் கீழ்நிலையில் வைக்கப்பட்ட சமூகங்களில் இதுவும் ஒன்று. இச்சாதியினருக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி இடஒதுக்கீடுகள் தொடர்ந்து கடுமையான விவாதத்துக்கு உள்ளாகி வருகின்றன.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வும், மதப் பிளவுகளும் அதிகரித்துள்ளன.
இந்துக்களின் ஆதரவை இழக்கக்கூடும் என்ற அச்சத்தில், முஸ்லிம்கள் மற்றும் தலித் சமூகத்தினரைப் பாதிக்கும் சர்ச்சைக்குரிய பிரச்னைகளை காக்ரோச் ஜனதா கட்சி தவிர்ப்பதாக சில விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை தீப்கே மறுக்கிறார்.
“ஜந்தர் மந்தரில் நான் ‘ஜெய் பீம்’ என்று முழக்கமிட்டபோது ஆயிரக்கணக்கானோர் அதைப் பின்பற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் அவர். தலித் சமூகத்தின் முக்கியத் தலைவரான பி.ஆர். அம்பேத்கருடன் தொடர்புடைய முழக்கத்தையே அவர் குறிப்பிட்டார். “மேலும், ‘இந்து-முஸ்லிம் அரசியல் இனி எடுபடாது’ என்றும் முழக்கமிட்டோம்.”
இப்போது, காக்ரோச் ஜனதா கட்சியை தேசிய அளவில் பிரபலப்படுத்திய இந்த அசாதாரண கோபத்தை நீடித்த இயக்கமாக மாற்ற முடியுமா என்பதே மிகப்பெரிய சோதனையாக உள்ளது.
திடீரெனப் பொது வாழ்க்கைக்குள் வந்துவிட்டதாகக் கூறும் தீப்கேவைப் பொறுத்தவரை, இந்தச் சோதனை தனிப்பட்ட ஒன்றாகவும் உள்ளது.
“நான் பெரும்பாலான நேரத்தை என் அறையில் தனியாகக் கழிக்க விரும்பும் ஒரு நபர்,” என்றார் அவர்.
“ஆனால் இப்போது நூற்றுக்கணக்கான மக்களுடன் இங்கே இருக்கிறேன். இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தக்கவைக்கவும் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன்.”
கூடுதல் தகவல்கள்: அட்னான் பாட், பிரேம் பூமிநாதன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு