• Sat. Sep 12th, 2026

24×7 Live News

Apdin News

பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியவாதியுமான சாலமன் பாப்பையா காலமானார்

Byadmin

Sep 12, 2026


பட்டிமன்றத்தின் மூலம் உலக தமிழர்களிடத்தில் பிரபலமான பேச்சாளரும் இலக்கியவாதியுமான சாலமன் பாப்பையா வயது மூப்பின் காரணமாக இன்று (11) மதுரையில் தனது 90ஆவது வயதில் காலமானார்.

1936ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி சாத்தங்குடி எனும் இடத்தில் பிறந்தார் சாலமன் பாப்பையா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்று, கல்லூரி பேராசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய இவர், தமிழர்கள் மீதும், தமிழ்மொழி மீதான பற்றின் காரணமாக இலக்கிய கூட்டங்களில் பங்குபற்றினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்மொழியின் தனித்துவமான அடையாளமாக திகழும் பட்டிமன்றத்தில் தன்னுடைய பங்களிப்பை பாரிய அளவில் வழங்கி தமிழ் சிந்தனையை பாமர மக்களுக்கும் இலக்கிய தரத்துடன் விதைத்தார்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக பொறுப்பேற்று, மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்ததன் மூலம் கிடைத்த புகழை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ ஆகிய படங்களில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

தமிழ் மொழி இலக்கியத்தின் மீது இவருக்கு இருந்த வற்றாத பற்றின் காரணமாக இலக்கிய திறனாய்வு சார்ந்த நூல்களையும், பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதி இருக்கிறார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் மதுரை கம்பன் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், மாதந்தோறும் அங்கு நடைபெறும் சொற்பொழிவுகளை தொகுத்து நூலாகவும் வெளியிட்டு இலக்கியப் பணியை செவ்வனே மேற்கொண்டார். தனியார் தொலைக்காட்சியில் நாளாந்தம் காலையில் தோன்றி திருக்குறளை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் உரை நிகழ்த்தி மக்களிடத்தில் திருக்குறள் தொடர்பான தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தினார்.

இவரது இலக்கியப் பணியினை மெச்சிய இந்திய அரசு 2021 ஆம் ஆண்டில் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது.

தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் விருதுகளை பெற்ற இவர்.. அண்மைக்காலமாக இலக்கிய கூட்டங்களில்… பட்டிமன்றங்களில்.. பேசுவதில் இருந்து விலகி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் 90 வயதை கடந்த அவர் இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார்.

அவருக்கு தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் துறையில் இருந்து ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

By admin