ஹைதராபாத் – டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 242 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்திய இந்த ஜோடி 53 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 97 ஆக இருந்தபோது இந்த கூட்டணியை அக்ஸர் படேல் உடைத்தார்.
டிராவிஸ் ஹெட் 37 ரன்களில் சமீர் ரிஸ்வியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இருந்தபோதிலும், இஷான் கிஷனுடன் சேர்ந்த அபிஷேக் சர்மா தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். கிட்டத்தட்ட 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர், பந்துகளை சிக்சர், பவுண்டரி என பறக்க விட்டார்.
14.4 ஓவரில் அணியின் ஸ்கோர் 176 ஆக இருந்தபோது, 25 ரன்களுக்கு இஷான் கிஷன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஹெய்ன்ரிச் கிளாசென் உடன் அபிஷேக் சர்மா மேலும் ஒரு சிறந்த கூட்டணியை அமைத்தார். ஒரு பக்கம் கிளாசென் 13 பந்துகளில் 37 ரன்கள் விளாச, மறுபக்கம் அபிஷேக் சர்மா தனது சதத்தை கடந்தும் அதிரடியாக ஆடினார். அவர் 68 பந்துகளில் 10 பவுண்டரி, 10 சிக்சர் என 135 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது.
பந்துவீச்சில் டெல்லி அணிக்காக அக்ஸர் படேல் மட்டும் ஒரு விக்கெட் எடுத்தார். முகேஷ் குமார், நிதிஷ் ராணா ஆகியோர் தலா 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர். நடராஜன் 40 ரன்கள் வழங்கினார்.
பட மூலாதாரம், ANI
டெல்லி ஆட்டம் எப்படி?
243 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய டெல்லி அணி தொடக்கத்திலேயே அழுத்தத்தில் சிக்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாத்தும் நிஸாங்கா 8 ரன்களில் அவுட் ஆகி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அடுத்து, நிதிஷ் ராணாவுடன் கே.எல். ராகுல் கூட்டணி அமைத்தார்.
இதில் கே.எல். ராகுல் நிதானமாக ஆடிய நிலையில், நிதிஷ் ராணா அதிரடி போக்கை எடுத்தார். சுமார் 188 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர், பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார்.
இருவரும் சேர்ந்து 86 ரன்கள் குவித்த நிலையில், ஷகிப் ஹுசேன் பந்தில் 37 ரன்களுக்கு கே.எல். ராகுல் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 107 ரன்களுக்கு 2 விக்கெட் ஆக இருந்தது.
ஆனால் அடுத்து இஷான் மலிங்கா பந்தில் நிதிஷ் ராணா 57 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் மில்லரும் வந்த வேகத்தில் அவுட் ஆனார். இதனால், அணியின் ஸ்கோர் 107 ரன்னாக இருந்தபோதும் விக்கெட் இழப்பு 4 ஆக உயர்ந்தது.
பின்னர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் சமீர் ரிஸ்வி கூட்டணி அமைத்தாலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் அணியின் சுமை சமீர் ரிஸ்வி மீது விழ, அவரும் தொடர்ந்து ரன்கள் குவித்தார்.
ஆனால் அடுத்து வந்த ஆஷுதோஷ் சர்மா, அக்ஸர் படேல், லுங்கி நிகிடி விரைவாக ஆட்டமிழக்க டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிறகு 195 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது.