அமெரிக்காவில் 51 பேர் பலியான டெக்ஸாஸ் வெள்ளம் – என்ன நிலவரம்?
அமெரிக்காவின் டெக்ஸாஸை உலுக்கியுள்ள திடீர் வெள்ளம் குறைந்தது 51 பேர் உயிரை பறித்திருக்கிறது. இதில் 15 பேர் குழந்தைகள். 27 குழந்தைகளின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை. என்ன நடந்தது?
டெக்ஸாஸில் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் வெள்ளம் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் திடீரென ஒரு மணி நேரத்திற்குள் 26 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கெர்வில்லேவில் கேம்ப் மிஸ்டிக் எனப்படும் கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் இருந்த 27 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். முதலில் இந்த எண்ணிக்கை 23 முதல் 25 ஆக இருக்கலாம் என அதிகாரிகள் கூறிய நிலையில், டெக்சாஸ் லெப்டினன்ட் கவர்னர் டான் பேட்ரிக் இந்த எண்ணிக்கை 27 என்றும் அதில் பெரும்பாலானோர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பிபிசியிடம் கூறினார். டெக்ஸாஸ் ஆளுநர் கிரெக் அபட் சம்வம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.
அதிகாரிகள் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்ட போது முகாமில் இருந்த பலர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெள்ளம் காரணமாக பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. தொலைபேசிகள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தன் வாழ்க்கையில் இது போன்ற ஒரு பேரழிவை பார்த்ததில்லை என்கிறார் கெர் கவுண்டியைச் சேர்ந்த ஒரு பெண்
கெர் கவுண்டி தவிர்த்து, டிராவிஸ் கவுண்டி மற்றும் டாம் கிரீன் கவுண்டி உள்ளிட்ட மாகாணத்தின் பிற பகுதிகளிலும் இந்த வெள்ளம் உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய டெக்ஸாஸில் திடீர் வெள்ளத்துக்கான எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது. வெள்ள பாதிப்பில் இருந்து இதுவரை சுமார் 850 பேர் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபட் தேடுதல் முயற்சிகளை அதிகரிக்க விரிவாக்கப்பட்ட பேரிடர் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருப்பதாக கூறினார்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும் கண்டுபிடிப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் இடைவிடாமல் செயல்படுவார்கள் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.
தேடல் மற்றும் மீட்புப் பணியே நடைபெற்று வருவதாகவும், இன்னும் புனரமைப்பு பணிகள் நடைபெறவில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அவசரநிலையை எதிர்கொள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தனது நிர்வாகம் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு