பட மூலாதாரம், REUTERS/Stringer TPX IMAGES OF THE DAY
படக்குறிப்பு, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள்.கட்டுரை தகவல்
அமெரிக்கா – இரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்த அறிவிப்பு, டொனால்ட் டிரம்புக்கு மிகவும் வரவேற்கத்தக்க பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளது. இருப்பினும் இது கணிசமான அளவு நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை தனது சமூக ஊடகப் பதிவில் அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்றும், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும் என்றும் அதில் கூறியிருந்தார்.
“எண்ணெய் பாயட்டும் !” என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கடந்த கால அமெரிக்க அதிபர்களின் தோல்விகளுக்கு நேர்மாறாக, “ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் அமைதியையும் பாதுகாப்பையும்” கொண்டு வரும் ஒரு “சிறந்த ஒப்பந்தத்தை” தாம் உறுதி செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.
இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் டிரம்புக்கு புதிதல்ல.
கடந்த ஆண்டு காஸா போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஒப்பந்தம் பற்றி அவர் கூறியிருந்த கருத்தான, “எல்லா காலத்திற்குமான அமைதி” மற்றும் “நம்பிக்கை, விசுவாசம் மற்றும் இறைவனின் யுகத்தின் தொடக்கம்” என்பதும் இதேபோல் பரந்த அளவில் இருந்தது.
ஆனால் அந்தக் கூற்றுகளை விட குறைவான உண்மைத்தன்மை தான் களத்தில் காணப்படுகிறது.
இத்தகைய பெரும் ஆபத்துகள் நிறைந்த ஒப்பந்தங்களில், வெற்றியோ அல்லது தோல்வியோ பொதுவாக அதன் விவரங்களில் தான் அடங்கியிருக்கிறது. ஆனால் இங்கு, அந்த விவரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பது “இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது” என்றும், அதை அமெரிக்காவால் சரிபார்க்க முடியும் என்றும் கூறினார்.
பட மூலாதாரம், ATTA KENARE / AFP via Getty Images
ஒப்பந்தம் பற்றி நீடிக்கும் கேள்விகள்
இருப்பினும், செறிவூட்டலுக்கான கட்டுப்பாடுகள் என்னவாக இருக்கும்? இரான் தற்போது வைத்துள்ள அதிக அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு என்ன ஆகும்? என்பன உள்ளிட்ட கேள்விகள் நீடிக்கின்றன.
இதில் சில விஷயங்கள், தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டுள்ள 60 நாள் காலத்தில் நடைபெறவுள்ள அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் மற்றும் “தொழில்நுட்ப” ஆலோசனைகள் மூலம் தீர்க்கப்படலாம்.
ஆனால், இரானை அதன் அணுஆயுத லட்சியங்களைக் கைவிட வைப்பதற்காக பல ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட சமாதான மற்றும் அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளுக்குப் பிறகு ஒன்று தெளிவாகிறது என்றால், அது இந்த “புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்” என்ன உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்கா நம்பினாலும், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது தான்.
இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக, இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டது.
அதில் “புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள மற்ற தரப்பினரின் கடமைகள் நிறைவேற்றப்பட்ட பிறகே இறுதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
அந்த உறுதிமொழிகள் என்ன மற்றும் இரான் அவற்றை எவ்வாறு புரிந்துகொள்கிறது என்பது இந்த ஒப்பந்தம் நிலைத்திருக்குமா என்பதைத் தீர்மானிக்க உதவும்.
ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்வதைப் பொருத்தவரை, உடனடியாக போருக்கு முந்தைய நிலைக்கு திரும்புவதற்கு சாத்தியமில்லை என்று எரிசக்தி சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையை காட்டும் வரைபடம்.
தேங்கியுள்ள ஏராளமான எண்ணெய்க் கப்பல்களை அப்புறப்படுத்துவதற்கும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும், வழக்கமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தியை மீட்டெடுப்பதற்கும் பல வாரங்கள் ஆகலாம்.
அதிகாரப்பூர்வ கையெழுத்து இடுவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், ஒப்பந்தத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கான முக்கிய விவரங்களை தீர்ப்பதற்கு இரானுக்கும் அமெரிக்காவிற்கும் நேரம் உள்ளது.
ஒப்பந்தத்திற்கு காத்திருக்கும் சவால்கள்
அதேநேரத்தில் இந்த ஒப்பந்தம் முறிந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இதில் உள்ள மற்றொரு கணிக்க முடியாத காரணி இஸ்ரேல்.
இந்தப் போர் மும்முனைப் போராகவே இருந்து வருகிறது.
டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், தாம் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
ஏனெனில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த வார இறுதியில் லெபனான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். அந்த நடவடிக்கை, கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியிருந்த இரான் உடனான ஒப்பந்த முயற்சிகளை முறியடிக்கக் கூடும் என்று தான் நம்பியதாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இஸ்ரேல் லெபனானில் புதிய ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினால், இரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூட முடிவு செய்யக்கூடும். அது, உலகப் பொருளாதாரத்தை மீண்டும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் மீது சொந்த நாட்டில் அதிகரிக்கும் அதிருப்தி
அதிக எரிசக்தி விலைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட தொடர்ச்சியான பொருளாதார பாதிப்புகள் காரணமாக இந்தப் போர் பல அமெரிக்கர்களுக்கு ஏற்படுத்திய வேதனையையும் வான்ஸ் ஒப்புக்கொண்டார்.
எரிசக்தி விலைகள் குறையத் தொடங்கும் என்று உறுதியளித்த அவர், “அமெரிக்க மக்களுக்கு நான் சொல்லும் முதன்மையான செய்தி நன்றி தான்” என்று கூறினார் .
அது எவ்வளவு விரைவாக நிகழ்கிறது என்பதும், நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு எவ்வளவு விரைவில் நிவாரணம் தருகிறது என்பதும், நவம்பர் மாத தேர்தலுக்கு முன்பாக குடியரசுக் கட்சியினர் மீதான அதிகரித்து வரும் அரசியல் அழுத்தம் குறையுமா என்பதையும் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கும்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின் படி, டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி மீது அமெரிக்கர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.
யுகவ் (YouGov) நடத்திய கணக்கெடுப்பு, 63% அமெரிக்கர்கள் அதிபர் டிரம்ப் பொருளாதாரத்தைக் கையாண்ட விதத்தை அங்கீகரிக்கவில்லை என்றும், 57% பேர் பொருளாதாரம் மோசமடைந்து வருவதாக உணர்வதாகவும் கூறுகிறது.
இருப்பினும், குறைந்தபட்சமாக, ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஒப்பந்தம் தற்போதைய மோதலிலால் ஏற்பட்டுள்ள சில பொருளாதார அழுத்தங்களை முற்றிலும் நீக்காவிட்டாலும், அதைக் குறைக்க உதவக்கூடும்.
பெட்ரோல் விலை உண்மையிலேயே குறையத் தொடங்கினால், நிலைமை சிறப்பாக வருகிறது என்பதற்கான உறுதியான அறிகுறியாக அது அமெரிக்கர்களுக்கு தென்படக்கூடும்.
டிரம்பின் பெரிய இலக்குகள் இப்போதைக்கு நிறைவேறாமல் இருந்தாலும், அவர் தனது சொந்த நாட்டில் அரசியல் ஆபத்தை எதிர்கொண்டாலும், போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பும் நோக்கில் இது குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.