பட மூலாதாரம், Eric Lee / POOL / AFP via Getty Images
படக்குறிப்பு, 2026 ஜூன் 25 அன்று, மத்திய கிழக்குக்கான தனது பயணத்தின் ஒரு பகுதியாக மனாமா நகரில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ சந்திப்பு நடத்தினார்கட்டுரை தகவல்
எழுதியவர், சாலி நபில்
பதவி, பிபிசி செய்தியாளர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையிலான மோதல் தணிவதற்கான அறிகுறிகள் தெரியாத நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் நிலைத்தன்மை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பதற்றத்தில் சிக்கியுள்ள வளைகுடா அரபு நாடுகள், நிலைமையை கவலையுடன் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
மீண்டும் பதற்றம் அதிகரித்தால், அதிகம் பாதிக்கப்படப் போவது இந்த நாடுகள் தான்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளையும் இரான் இலக்கு வைத்தது.
இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள், எண்ணெய் வளம் மிக்க இந்த நாடுகளின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான பிம்பத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஜோர்டானைச் சேர்ந்த சர்வதேச சட்டப் பேராசிரியர் ஹஸ்ஸா மஜாலி கூறுகையில், “இஸ்ரேலால்தான் அமெரிக்கா இந்த போருக்குள் நுழைந்தது. இந்த ஒப்பந்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள, நாம் இஸ்ரேலின் எதிர்வினையை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்” என்றார்.
லெபனான் மீது தொடரும் இஸ்ரேல் தாக்குதல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்திற்குள், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர்
லெபனான் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்திற்குள் அங்கு நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். அதேவேளையில், இந்த தாக்குதல்களில் தனது ராணுவ வீரர்கள் நால்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் வலியுறுத்தியிருந்த போதிலும், இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போரிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
லெபனானை தளமாகக் கொண்டு செயல்படும் ஹெஸ்பொலா அமைப்பு, நீண்டகாலமாக இரானின் முக்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறது. லெபனானில் ஒரு புதிய போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், ஆனால் இதுபோன்ற ஒப்பந்தங்கள் பெரும்பாலும் தற்காலிகமானவை மற்றும் எளிதில் முறியக் கூடியவை என்பதே கடந்தகால வரலாறாக உள்ளது.
கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் ஜுனோ இது குறித்து பேசுகையில், “லெபனான் மற்றும் இரான் ஆகிய இரு இடங்களிலும் மோதல்கள் முற்றிலும் நின்றுவிடும் என்பதற்கான யதார்த்தமான சூழல் எதுவும் இருக்கவில்லை. லெபனானில் சில காலத்திற்கு வன்முறை அதிகரிப்பது என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒன்றுதான்; வளைகுடாப் பகுதியிலும் இதேநிலை ஏற்படக்கூடும்” என்று குறிப்பிடுகிறார்.
இதற்கிடையில், வளைகுடா பிராந்தியத்தின் பல நகரங்களில் உள்ள மக்களிடம் பேசியபோது, அவர்களுக்கு நம்பிக்கையும் சந்தேகமும் கலந்தே காணப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் நீண்டகால அமைதிக்கான தொடக்கமாக அமையலாம் என்று சிலர் கருதினாலும், சிலரோ இதன் வெற்றியை நம்பத் தயாராக இல்லை.
குவைத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருடன் பேசியபோது, “யாரும் போரை விரும்பவில்லை. நாங்கள் அமைதியான வாழ்க்கையை மட்டுமே விரும்புகிறோம். இரானிய ஏவுகணைகளின் சத்தத்தைக் கேட்டு பயந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூற வேண்டியிருந்த சூழல் எனக்கு நினைவிருக்கிறது; அவர்கள் அதுபோன்ற அனுபவத்தை இதற்கு முன் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை” என்று கூறினார்.
இந்த ஒப்பந்தம் மிகவும் பலவீனமானது என்று குறிப்பிட்ட மற்றொரு நபர், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் விரும்பினாலும், இந்த ஒப்பந்தத்தை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறினார்.
இந்த ஒப்பந்தம் வெற்றிபெற வேண்டும் என வளைகுடா நாடுகள் விரும்புவது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தெஹ்ரான் வீதிகளில் இரானிய வீரர்கள்
அமெரிக்கா-இரான் ஒப்பந்தம் வெற்றியடைய வேண்டும் என்றே வளைகுடா நாடுகள் விரும்புகின்றன; ஏனெனில், தங்களது எண்ணெய் ஏற்றுமதியை எந்தவித தடையுமின்றி உலக நாடுகளுக்கு அனுப்ப அவை விரும்புகின்றன, இதற்கு ஹோர்முஸ் நீரிணை மிக முக்கியப் பங்காற்றுகிறது. முக்கியமாக இந்த வழித்தடத்தின் வழியாகத்தான் அவற்றின் எண்ணெய் சர்வதேச சந்தைகளைச் சென்றடைகிறது. போர் தொடங்கியதில் இருந்து, இந்த வழியை இரான் கிட்டத்தட்ட முழுமையாக மூடியிருந்தது.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, கப்பல்களின் போக்குவரத்து படிப்படியாக மீண்டும் தொடங்கியது; செளதி அரேபியாவின் எண்ணெய் டாங்கர்களும் இந்த வழித்தடத்தின் வழியே பயணித்தன. அதே நேரத்தில், அமெரிக்க கடற்படையும் இரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை விலக்கிக் கொள்ளும் செயல்முறையைத் தொடங்கியது.
ஆனால், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஒப்பந்தத்தின் முதல் நிபந்தனையை அமெரிக்கா பின்பற்றவில்லை என்று இரானின் காதம்-அல்-அன்பியா தலைமையகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படுவதாக அது அறிவித்துள்ளது.
இந்த நீரிணை திறக்கப்பட்ட செய்தி வெளியான போது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 டாலருக்கும் கீழ் குறைந்திருந்தது. தற்போது இந்த வழித்தடம் வழியேயான போக்குவரத்து மீண்டும் தடைபட்டால், பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மேலும் பொருளாதார இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
பேராசிரியர் ஹஸா மஜாலி கூறுகையில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு என்பது இரானுக்கு அதன் அணுசக்தி திட்டத்தை விடவும் பெரிய கருவியாக மாறியுள்ளது என்கிறார். அவரது கூற்றுப்படி, “இந்த கடல் வழித்தடம் மூடப்படாமல் இருந்திருந்தால், ஒருவேளை போர் இன்னும் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடும்.”
இரானுக்கு 300 பில்லியன் டாலர்களை கொடுக்கப் போவது யார்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் சுவிட்சர்லாந்தில் இரானிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
அமெரிக்கா – இரான் இடையிலான இந்த 14 அம்ச ஒப்பந்தத்தில், இரான் மீது விதிக்கப்பட்டப் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது, வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள இரானிய சொத்துகளை விடுவிப்பது மற்றும் 300 பில்லியன் டாலர் நிதியை திரட்டுவது போன்ற பல பொருளாதாரச் சலுகைகளை வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வாக்குறுதிகள் குறித்த விவரங்கள் இன்னும் தெளிவற்றதாகவே இருப்பதாக தாமஸ் ஜுனோ கூறுகிறார்.
அவர் பேசுகையில், “பொருளாதார உதவிகள் எப்போது தொடங்கும், எவ்வளவு சொத்துகள் விடுவிக்கப்படும், மற்றும் இந்த 300 பில்லியன் டாலர் நிதி எங்கிருந்து திரட்டப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்றார். வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு ஒன்று இந்த நிதிக்கான செலவை ஏற்கும் என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். எனினும், அதுகுறித்த விரிவான விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. மறுபுறம், எந்தவொரு வளைகுடா நாடும் இரானுக்குப் பணம் வழங்குவதை இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.
தாங்கள் தொடங்காத ஒரு போருக்கான விலையைத் தாங்களே கொடுக்க வேண்டியிருக்கும் என்று வளைகுடா நாடுகள் கருதுவதாகச் சிலர் நம்புகின்றனர். இதுகுறித்து அரசியல் ஆய்வாளர் அலி அல்-ஹைல் கூறுகையில், “எங்கள் நாடுகள் இரானுக்கு ஒரு பைசா கூட வழங்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். மாறாக, இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் நாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், இரான்தான் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்தப் போருக்கான விலையை இஸ்ரேலும் அதன் கூட்டாளிகளும்தான் செலுத்த வேண்டும்” என்றார்.
இந்தத் திட்டத்திற்கு நிதிப் பங்களிப்பை வழங்குமாறு வளைகுடா நாடுகளை அமெரிக்காவால் சம்மதிக்க வைக்க முடியுமா என்பது தற்போதுவரை தெளிவாகத் தெரியவில்லை. எதிர்கால ஸ்திரத்தன்மை குறித்து தங்களுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்படும் வரை, 300 பில்லியன் டாலர் போன்ற ஒரு பெரும் தொகையை வழங்க வளைகுடா நாடுகள் அவ்வளவு எளிதில் சம்மதிக்காது என்றே தாமஸ் ஜுனோ கருதுகிறார். இரானுக்கும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கும் இடையே உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவது என்பது இன்னும் கானல்நீராகவே உள்ளது என அவர் கூறுகிறார்.
எதிர்கால முதலீடுகள் மூலம் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் சாத்தியம் என்றாலும், வளைகுடா நாடுகள் இதில் ஈடுபட வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை எதிர்பார்க்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாகவே தோன்றுகிறது. ஆயினும், சாதாரண மக்களைப் பொறுத்தவரை, அமைதியான வாழ்க்கையே மிக முக்கியமானது; அதாவது, குண்டுவீச்சுத் தடுப்பு முகாம்களுக்கு அவசரமாக ஓட வேண்டிய சூழலோ அல்லது வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகளால் தூக்கம் கலைக்கப்படும் நிலையோ இல்லாத ஒரு வாழ்க்கை அவர்களுக்குத் தேவைப்படுகிறது.