பட மூலாதாரம், Reuters
அமெரிக்கா மற்றும் இரான் இடையே ராணுவ மோதல் அதிகரிப்பதைக் கண்டு, பல நாடுகள் இருதரப்புக்கும் இடையே சமரசம் செய்ய மத்தியஸ்தர் பாத்திரத்தை வகிக்க முயற்சித்தன.
இந்த மோதலின் தாக்கம் அண்டை நாடுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை, மாறாக உலகம் முழுவதையும் பாதித்துள்ளது.
ஏனெனில் இதனால் சர்வதேச கடல்சார் வணிகம் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய்ப் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்பின் அமெரிக்கா மற்றும் இரான் இடையே பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் அது எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தப் பேச்சுவார்த்தையை ஐக்கிய நாடுகள் அவை முன்னெடுக்கவில்லை, எந்த ஐரோப்பிய நாடும் இதை செய்யவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் முதன்மை மத்தியஸ்தர் பாத்திரத்தை வகித்தது, அதே சமயம் எகிப்து மற்றும் துருக்கி மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கின.
இந்த மோதலில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள், பிராந்திய நெருக்கடிகளைத் தீர்க்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டு வருவதைக் காட்டுகின்றன.
பட மூலாதாரம், Reuters
வல்லரசுகளின் தோல்வி
நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வல்லரசுகளின் பங்கு இப்போது குறைந்து வருகிறது. அதே சமயம் “மிடில் பவர்ஸ்” எனப்படும் நடுத்தர வலிமை நாடுகள் இப்போது மோதல் மேலாண்மையில் புதிய பங்கேற்பாளர்களாக உருவெடுத்து வருகின்றன.
அல்-அஹ்ராம் அரசியல் மற்றும் உத்தி ஆய்வு மையத்தின் சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவர் அஹ்மத் கந்தீல், ‘மிடில் பவர்ஸ்’ என்பதை “இவை அந்தந்த புவியியல் பகுதிகளில் செல்வாக்கு கொண்ட பிராந்திய நாடுகளாகும். இவற்றுக்கு அமெரிக்கா அல்லது சீனா போல உலகளாவிய செல்வாக்கு கிடையாது, ஆனால் தங்கள் பகுதியில் இவர்களது தெளிவான மற்றும் உண்மையான தாக்கம் நீடிக்கிறது,” என என்கிறார்.
அதேபோல், வாஷிங்டன் ஆய்வு மையத்தை சேர்ந்தவரும் அமெரிக்காவின் முன்னாள் உதவி வெளியுறவு செயலாளருமான டேவிட் ஷென்கரும் மாறிவரும் இந்தச் சூழலை ஒப்புக்கொள்கிறார்.
“இப்போது ‘நடுத்தர வலிமை நாடுகள்’ மைய இடத்திற்கு வருகின்றன, அமெரிக்கா-இரான் மோதலில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கியின் பங்கு இதைக் காட்டுகிறது” என்கிறார் அவர்.
கந்தீல் பிபிசியிடம் பேசுகையில், இத்தகைய சமரசங்கள் குறித்து, “இந்த நாடுகள் பொதுவாகத் தங்கள் சொந்த நலன்களுக்காக இதைச் செய்கின்றன, ஏனெனில் பிராந்தியத்தில் நிலவும் உறுதியற்ற தன்மை மற்றும் அமைதியின்மைக்கான விலையை இவர்களே கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார்.
மேலும் கந்தீல் கூறுகையில், “மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் தங்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கவே அவை செயல்படுகின்றன.”
ஷென்கர் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார். சில நாடுகள் இத்தகைய சமரச வாய்ப்புகளைப் பயன்படுத்தி பிராந்தியத்தில் தங்களை ஒரு பெரிய சக்தியாக நிலைநிறுத்த விரும்புகின்றன.
உதாரணமாக “கத்தார், பல ஆண்டுகளாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஆதரிப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, இப்போது தன்னை சர்ச்சையற்ற மற்றும் சமநிலையான நாடாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது.”
கடந்த சில ஆண்டுகளில் பேச்சுவார்த்தை மற்றும் சமரச விவகாரங்களில் புதிய நாடுகள் உருவெடுப்பது தெளிவாகத் தெரிகிறது.
உதாரணமாக 2020-ல் தோஹாவில் அமெரிக்கா மற்றும் தாலிபன் இடையே பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வழிவகுத்தது.
2022-ல் துருக்கி, ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்தியது. இதன் மூலம் கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட சில பகுதியளவு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன.
செளதி அரேபியாவும் ரஷ்யா-யுக்ரேன் சமரசத்தில் பங்கு வகித்தது.
ஜெட்டாவில் பல நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், பதற்றத்தைக் குறைக்கும் ராஜதந்திர முயற்சியாக இருதரப்பு கைதிகள் பரிமாற்றத்திலும் செளதி அரேபியா மத்தியஸ்தராக செயல்பட்டது.
பட மூலாதாரம், Reuters
பலமும் பலவீனமும்
பிபிசியிடம் பேசிய ஷென்கர், இந்த மத்தியஸ்த நாடுகளுக்கு என்று சில தனித்துவமான பலங்கள் இருப்பதாகக் கூறுகிறார்.
அவர் கூறுகையில், “பாகிஸ்தான் இரானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுடனும் அதற்கு நல்ல உறவு இருக்கிறது. இதனால் செய்திகளை இருதரப்புக்கும் கொண்டு சேர்க்கும் திறன் அதற்கு உண்டு. அது ஒரு நல்ல நிலையில் இருக்கிறது. சீனா அல்லது ரஷ்யாவால் இந்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்வது சாத்தியமில்லை.”
கந்தீலின் கருத்துப்படி, சில உள்நாட்டுச் சூழல்கள் நாடுகளை இத்தகைய மத்தியஸ்த பணிகளில் ஈடுபடத் கட்டாயப்படுத்துகின்றன.
“உதாரணமாக, பாகிஸ்தானில் ஷியா பிரிவினர் அதிகளவில் வசிக்கின்றனர், போர் நீடித்தால் அங்கு உள்நாட்டுப் பதற்றம் அதிகரிக்கலாம்,” என்கிறார் கந்தீல்.
“மோதல் அதிகரித்தால், அதிகப்படியான அகதிகள் வருவதற்கும் வாய்ப்புள்ளது.”
மேலும் அவர் கூறுகையில், “எகிப்தைப் பொறுத்தவரை, அது இந்த மோதலில் ஒரு தரப்பு கிடையாது, ஆனாலும் அது பாதிப்பைச் சந்தித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து எரிவாயு விநியோகம் நின்றுள்ளது. போரின் தாக்கத்தால் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சூயஸ் கால்வாய் வழியாகக் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.”
போர் தொடங்கிய பிறகு, எகிப்துக்கு எரிவாயு வழங்குவதை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது. எகிப்துக்கு இது ஒரு முக்கிய எரிவாயு ஆதாரமாகும்.
ஏப்ரல் தொடக்கத்தில் இஸ்ரேல் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, எகிப்துக்கு மீண்டும் பகுதி அளவில் எரிவாயு விநியோகத்தை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்பு, எகிப்து மத்திய தரைக்கடலில் உள்ள டேமர் மற்றும் லெவியதன் எரிவாயு வயல்களில் இருந்து தினமும் சுமார் 1.1 பில்லியன் கன அடி எரிவாயுவை இறக்குமதி செய்து வந்தது.
பாரம்பரிய சக்திகளின் வீழ்ச்சி
2015-ல் அமெரிக்கா மற்றும் இரான் இடையே ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்தது.
ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதிலும், இரான் ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் அது முன்னணியில் இருந்தது. ஆனால் தற்போதைய மோதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு பெருமளவு குறைந்துவிட்டது.
டேவிட் ஷென்கர் இதற்குக் காரணம் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான “சிக்கலான உறவுகள்” என்கிறார்.
“அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் ஐரோப்பா புதிய மோதலை விரும்பவில்லை, இந்த மோதலில் இருந்து விலகி இருப்பதே சிறந்தது என நினைக்கிறது” என ஷென்கர் கூறுகிறார்.
வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கியது முதலே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறவு சிக்கலாகவே இருந்து வருகிறது.
முதலில் ரஷ்யா-யுக்ரேன் போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவையே முழுமையாகச் சார்ந்திருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
இதன்பின் இரான் உடனான போர் தொடங்கியபோது இந்த கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்தது.
ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனும் இந்தப் போரில் ஈடுபட மறுத்துவிட்டன.
அவர்கள் அமெரிக்காவைத் தங்கள் ராணுவத் தளங்களைப் பயன்படுத்தி இரான் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கவில்லை, ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளிலும் பங்கேற்கவில்லை.
பட மூலாதாரம், Reuters
‘அமெரிக்கா இனி நம்பகமான கூட்டாளி இல்லை’
மறுபுறம், அமெரிக்காவின் பேச்சுவார்த்தை பாணி அதை ஒரு நடுநிலையான மத்தியஸ்த நாடாகச் செயல்பட முடியாமல் பலவீனப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் உதவிப் பேராசிரியர் சாரா பார்கின்சன், “காஸா போரின் போதும், இப்போது இரான் விவகாரத்திலும் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அமெரிக்கா வழங்கியதால், அந்தப் பிராந்தியத்தில் அதன் மத்தியஸ்த பாத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது” என்கிறார்.
தற்போதைய அமெரிக்க அரசின் ராஜீய அணுகுமுறையை விமர்சிக்கும் பார்கின்சன், “டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ராஜீயத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து வருகிறது. அனுபவம் வாய்ந்த ராஜீய அதிகாரிகளுக்கு பதிலாக ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் போன்ற தொழிலதிபர்களை முன்னிறுத்துகிறது. இவர்களுக்கு ராஜீய பேச்சுவார்த்தைகளில் போதிய அனுபவம் இல்லை” என்கிறார்.
மேலும், இரான் உடனான போர் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் உறவிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கருதுகிறார்.
“வளைகுடா நாடுகள் தங்களை ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றன. அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு உறுதிமொழி கிடைக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் இறுதியில் தாங்களே போரில் சிக்கிக் கொண்டதை உணர்கிறார்கள். இவை அனைத்தும் அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நம்பகத்தன்மையைப் பாதித்துள்ளன” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு