பட மூலாதாரம், Brendan SMIALOWSKI / AFP via Getty Images)
அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்த இடைக்காலத் தேர்தல்களை எதிர்கொள்ளும் ஜனநாயகக் கட்சி, பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்குகிறது.
வரலாற்று அளவில் செல்வாக்கு குறைந்த குடியரசுக் கட்சியின் அதிபர், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க மக்கள், பல மாதங்களாக ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமாக வெளியாகும் கருத்துக்கணிப்புகள் என செவ்வாய்க்கிழமை அக்கட்சிக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன.
நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்குத் தேவையான 218 இடங்களைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முக்கியமான செனட் தேர்தல்களிலும் இரு கட்சிகளும் சமநிலையில் அல்லது ஜனநாயகக் கட்சி குறைந்த வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளன.
சமீபத்தில் வெளியான நியூயார்க் டைம்ஸ் கருத்துக்கணிப்பில், 2024ஆம் ஆண்டு தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 18 சதவீதப் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தெற்கு கரோலினா மாகாணத்தின் செனட் தேர்தலில் இரு கட்சிகளும் சமநிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிஎன்என் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்புகளில் டெக்சாஸ், கான்சாஸ் மற்றும் மெய்ன் மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கருத்துக் கணிப்புகள் துல்லியமானவையா?
சமீபத்திய அமெரிக்க அரசியல் வரலாற்றில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் கூட தவறாக அமைந்ததற்குப் பல உதாரணங்கள் உள்ளன.
2016 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் வெள்ளை மாளிகையைக் கைப்பற்றிய போது, கருத்துக்கணிப்புகளின் கூறப்பட்டதை விட டிரம்ப் அதிக வாக்குகளைப் பெற்றார்.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்று சுட்டிக்காட்டிய பின்னர், 2020-ல் அவர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மிச்சிகன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் செனட் வேட்பாளர் தேர்வுத் தேர்தலில் அப்துல் எல்-சயீத் இரட்டை இலக்க வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
ஆனால், இறுதியில் வெற்றி வித்தியாசம் வெறும் ஒரு சதவீதமாகவே இருந்தது.
விஸ்கான்சின் மாகாணத்தில் ஆளுநர் பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வுத் தேர்தலில், கருத்துக்கணிப்புகளில் கிட்டத்தட்ட 20 புள்ளிகள் முன்னிலையில் இருந்த வேட்பாளர், ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அரசியல் மற்றும் சந்தை ஆய்வுகளுக்கான கருத்துக்கணிப்புகளை நடத்தும் இப்சோஸ் பப்ளிக் அஃபையர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிளிஃபோர்ட் யங் கூறுகையில், சமீபத்திய ஆண்டுகளில் கருத்துக்கணிப்புகளை நடத்துவது கடினமாகிவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
அமெரிக்கர்கள் லேண்ட்லைன் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வதோடு, வரும் அழைப்புகளையும் தவிர்ப்பதால் அவர்களைத் தொடர்புகொள்வது கடினமாகியுள்ளது.
கருத்துக்கணிப்பு நடத்துபவர்கள் தொடர்புகொள்ளும் பலரும் அதில் பங்கேற்க விரும்புவதில்லை.
“குறிப்பாக, தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் இயல்பிலேயே அமைப்புக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள். அவர்கள் எதிலும் பங்கேற்பதில்லை. இந்த அமைப்பையே அவர்கள் வெறுக்கிறார்கள். அதுதான் சவால்” என்று யங் கூறுகிறார்.
குடியரசுக் கட்சி வாக்காளர்களின் எண்ணிக்கை கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து குறைவாகப் பதிவு செய்யப்பட்டு வரும் பட்சத்தில், வாக்குப்பதிவு மாதிரிகளை உருவாக்கும்போது கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டால், அவர்களின் தரவுகள் ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமாகச் சாயக்கூடும்.
வாக்காளர்களின் மனநிலை மற்றும் தேர்தல் முடிவுகளை முன்கணிப்பது கருத்துக்கணிப்பு நிறுவனங்களுக்கு ஏன் கடினமாகி வருகிறது என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
முந்தைய அதிபர் தேர்தல்களில் டிரம்ப் கருத்துக்கணிப்புகளின் கணிப்புகளைவிட அதிக வாக்குகளைப் பெற்றதற்கான ஒரு விளக்கம், அவரது ஆதரவாளர்கள் பலர் வழக்கமாக வாக்களிக்காதவர்களாக இருந்தபோதிலும், எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகளுக்கு வந்தது தான்.
நம்பகமான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் வாக்கு வித்தியாசம் சில சதவீதப் புள்ளிகள் மட்டுமே தவறாக இருந்தபோதிலும், கணிக்க முடியாத இந்த நிலையே சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க கருத்துக்கணிப்புத் தவறுகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக உள்ளது.
போட்டி மிக நெருக்கமாக இருக்கும் தேர்தலில், அந்தச் சில சதவீதப் புள்ளிகளே ஒரு வேட்பாளரின் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசத்தைத் தீர்மானிக்கக்கூடும்.
இந்த ஆண்டும் முக்கியமான பல செனட் தேர்தல் கணிப்புகளில் வாக்கு வித்தியாசம் இதேபோன்ற குறுகிய அளவிலேயே உள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், இடைக்கால தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்புகள் அதிக துல்லியத்துடன் அமைந்துள்ளன.
இதற்கு ஒரு காரணம், அதிருப்தியில் இருக்கும் அமெரிக்கர்களை அதிக அளவில் வாக்களிக்கச் செய்யும் தனித்துவமான திறனைக் கொண்ட டிரம்ப், அந்தத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறங்காததுதான்.
2022ஆம் ஆண்டில், பைடனின் செல்வாக்கு குறைந்த போதிலும், வழக்கமான எதிர்பார்ப்புகளை மீறி ஜனநாயகக் கட்சி தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைத் தவிர்க்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
பட மூலாதாரம், Bloomberg via Getty Images
பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை அக்கட்சி இழந்தபோதிலும், வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருந்தது. அமெரிக்க செனட்டின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி தக்கவைத்துக்கொண்டது.
இந்த ஆண்டின் வேட்பாளர் தேர்வுத் தேர்தல் முடிவுகள் பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருந்தாலும், வேட்பாளர் தேர்வுத் தேர்தல்கள் வரலாற்று ரீதியாகவே நிலையற்ற தன்மை கொண்டவை, இதில் வாக்காளர்கள் கடைசி நேரத்தில்தான் தங்களது முடிவுகளை எடுக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் யங் கூறுகிறார்.
எனவே, தற்போதைய பொதுத் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் தவறாக இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாக இதைக் கருதக்கூடாது என்கிறார் அவர்.
அதிபர் பதவியில் இருக்கும் கட்சிக்கு இடைத் தேர்தல்களில் மோசமான முடிவுகள் கிடைப்பது வழக்கமான ஒன்றுதான்.
சமீபத்திய ஆண்டுகளில் இதற்கான குறிப்பிடத்தக்க உதாரணங்களில் ஒன்று 2010ஆம் ஆண்டு தேர்தல்.
அப்போது குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சபையில் 60-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியதுடன், செனட்டிலும் தனது பலத்தை அதிகரித்தது.
நிதி நெருக்கடியிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதில் ஏற்பட்ட சிக்கல்களும், அதிபர் ஒபாமாவின் சுகாதாரச் சீர்திருத்தங்கள் குறித்த பழமைவாதிகளின் அச்சங்களும் இந்தத் தோல்விக்குப் பின்னணியாக இருந்தன.
தேர்தலில் தோல்வி ஏற்படும் என்று கருத்துக்கணிப்புகள் கணித்திருந்தாலும், அதன் அளவு இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கணிக்கவில்லை.
இந்த முறை நிலைமை தலைகீழாக உள்ளது.
ஜனநாயகக் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கிறது. வாக்காளர்களின் கவனத்தில் பொருளாதாரம் முக்கிய இடம்பிடித்துள்ளது.
இருப்பினும், டிரம்புக்கான ஆதரவு குறைவாக இருந்தாலும், வரலாற்றின் அடிப்படையிலோ அல்லது சிலர் எதிர்பார்ப்பதைப் போலவோ ஜனநாயகக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் மிகச் சிறந்த முடிவுகள் கிடைக்காமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, இந்தத் தேர்தலில் போட்டி நிலவும் பெரும்பாலான தொகுதிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் மிக எளிதாக வெற்றி பெற்றிருந்தார். எனவே, இவை குடியரசுக் கட்சிக்குச் சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியைப் போன்றவை.
அடுத்ததாக, பல ஆண்டுகளாகப் பிரதிநிதிகள் சபைத் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளில் செய்யப்பட்ட மாற்றங்களால், கட்சிகளுக்கு இடையே கைமாறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மூன்றாவதாக, ஏற்பட்டுள்ள ஆழமான துருவமயமாக்கலின் காரணமாக, கட்சி மாறி வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வாக்காளர் நிலைப்பாடுகள் இறுகிப் போய் விட்டதாகச் சில நிபுணர்கள் இதை விவரிக்கின்றனர்.
இறுதியாக, குடியரசுக் கட்சி பெற்றுள்ள நிதி ஆதாயமும் முக்கியமானது. இதன் மூலம், தேர்தலுக்கு முந்தைய இறுதி வாரங்களில் எதிர் தரப்பினரைத் தாக்கும் விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களைச் செலவிடும் வாய்ப்பு அக்கட்சிக்குக் கிடைத்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
கருத்துக்கணிப்பு மாதிரிகள் மாறிவரும் அடிப்படைக் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. நம்பகத்தன்மையைக் குறைக்கக்கூடிய பிரச்னைகளை முன்கூட்டியே கணிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவையாகவும் கருத்துக்கணிப்புகள் இருக்கின்றன.
ஒவ்வொரு கருத்துக்கணிப்புக்கும் பிழைக்கான வரையறுக்கப்பட்ட அளவு உள்ளது. இது, ஒட்டுமொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மாதிரியின் அளவை அடிப்படையாகக் கொண்ட புள்ளிவிவர ரீதியான நிச்சயமற்ற தன்மையாகும்.
பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை ஒருங்கிணைத்துப் பார்க்கு ம்போது, தனித்தனியான கருத்துக்கணிப்புகளைவிட அவற்றின் சராசரி முடிவுகள் துல்லியமான கணிப்பை வழங்கக்கூடும்.
தற்போதைய நிலையில், சமீபத்திய அதிபர் தேர்தல்களில் காணப்பட்டதைப் போன்ற கருத்துக்கணிப்புச் சாதக நிலை இருந்தாலும்கூட, நவம்பர் 3ஆம் தேதி ஜனநாயகக் கட்சிக்கு நல்ல முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
கருத்துக்கணிப்புகளில் ஏற்படும் பிழைகள் இரு திசைகளிலும் இருக்கலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தல்கள் மற்றும் சிறப்புத் தேர்தல்களில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டதைவிட ஜனநாயகக் கட்சி சிறப்பாகச் செயல்பட்டது. ஏனெனில், அக்கட்சியின் வாக்காளர்கள் எதிர்பாராத வகையில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வந்தனர்.
2024ஆம் ஆண்டு தேர்தலில் எளிதாக வெற்றி பெற்ற மாகாணங்களில், பிரசாரத்தின் இறுதி நாட்களில் டிரம்ப் பேரணிகளை நடத்தி வருவது, குடியரசுக் கட்சியின் உள்கட்சி கருத்துக்கணிப்புகளில் அக்கட்சியின் பழமைவாத வேட்பாளர்கள் சிக்கலில் இருப்பதாகத் தெரியவருகிறது என்ற நம்பிக்கையை ஜனநாயகக் கட்சியினருக்கு அளித்திருக்கும்.
இருப்பினும், தேர்தல் நாள் வரை வாக்காளர்கள் தங்களது முடிவுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.
சில நேரங்களில் கடைசி நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் தேர்தல் போட்டியின் போக்கையே மாற்றிவிடக்கூடும். சில நேரங்களில், இந்தத் தேர்தல்களில் முக்கியப் பிரிவினராகத் தொடர்ந்து இருக்கும் முடிவெடுக்காத வாக்காளர்கள் அனைவரும் ஒரே தரப்புக்கு ஆதரவாகத் தங்களது முடிவை எடுக்கக்கூடும்.
கருத்துக்கணிப்புகளில் எப்போதும் ஓரளவு நிச்சயமற்ற தன்மை இருக்கும். அந்த நிச்சயமற்ற தன்மையைச் சரியாகக் கையாள்வதுதான் அறிவியலுடன் இணைந்த கலையாகும்.
“நாங்கள் இப்போது சிறப்பாகச் செயல்படுகிறோம் என்று நினைக்கிறேன். ஆனால், எங்களுக்கு எப்போதும் இருக்கும் பிரச்னையின் ஒரு பகுதி கருத்துக்கணிப்பு நடத்துபவர்களுடன் மட்டும் தொடர்புடையதல்ல. நாம் மனிதர்களைக் கையாள்கிறோம் என்பதும் அதில் ஒரு பகுதியாகும். மனிதர்களைக் கையாள்வது எளிதான காரியமல்ல” என்று யங் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு