பட மூலாதாரம், Getty Images
அரிசி என்பது உணவுக்கும் அப்பாற்றப்பட்டது. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு அது தினசரி அடிப்படை உணவு- பண்பாடு, பாரம்பரியம் மற்றும் பொருளாதார வாழ்வு ஆகியவற்றின் அடையாளம்.
“ஒவ்வொரு பிலிப்பைன்ஸ் குடிமகனின் உணவின் இதயதுடிப்பாக இருப்பது அரிசி. அது அடிப்படை உணவு மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டு அடித்தளம்.” என்கிறார் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவைச் சேர்ந்த பிபிசி உலக சேவை நேயர் அட்ரியேன் பியான்கா வில்லனுவேவா.
“பெரும்பாலான பிலிப்பைன்ஸ் மக்கள் ஒவ்வொரு நாளும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என மூன்று வேளை அரிசி சாப்பிடுகின்றனர். உணவுக்கு பிந்தைய இனிப்பில் கூட அரிசி உண்டு. எனக்கு பிடித்த அரிசி ஸ்டிக்கி ரைஸ்தான், ஏனென்றால் ஒவ்வொரு பிலிப்பைன்ஸ் இனிப்பிலும் ஸ்டிக்கி ரைஸ் உள்ளேயே வைக்கப்படுகிறதும்” என்கிறார் அவர்.
ஆனால் காலநிலை பிரச்னை அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், ஒரு அவசர கேள்வி எழுகிறது: நாம் அரிசியை குறைவாக சாப்பிட வேண்டுமா?
சர்வதேச அளவில் முக்கிய உணவு
பட மூலாதாரம், Getty Images
ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கூற்றுப்படி 50,000-க்கும் மேற்பட்ட உண்ணக்கூடிய பயிர்கள் இருக்கின்றன, ஆனால் வெறும் 15 வகையான பயிர்கள் மட்டும் உலகின் 90 விழுக்காடு உணவு தேவையை பூர்த்தி செய்கின்றன. அவற்றில், அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் முதன்மையானவையாக இருக்கின்றன.
“உலகின் மொத்த மக்கள் தொகையில் 50 முதல் 56 விழுக்காடு பேர் அரிசியை தங்களது முதன்மையான உணவாக கொண்டுள்ளனர்,” என்கிறார் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRRI) இயக்குநர் ஜெனரல் டாக்டர் இவான் பிண்டோ. கிட்டத்தட்ட நான்கு பில்லியன் மக்கள் அரிசியை தங்கள் அடிப்படை உணவாக தினசரி உட்கொள்கின்றனர் எனபதை குறிக்கிறது.
அரிசி தெற்கு மற்று தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஆப்ரிக்காவிலும் தேவை அதிகரித்து வருகிறது மற்றும் ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் சில வகைகள் காணப்படுகின்றன. ஆனால், உலக உணவுப் பழக்கத்தில் அரிசி ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு விலைகொடுக்க வேண்டியிருக்கிறது.
நீரை அதிகம் உறிஞ்சும் பயிர்
பட மூலாதாரம், Getty Images
“அரிசி அதிக நீர் உறிஞ்சும் பயிர்,” என விளக்குகிறார் ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனமான எப்ரோ ஃபுட்ஸுக்கு சொந்தமான இங்கிலாந்தில் இயங்கும் அரிசி நிறுவனமான டில்டாவின் மேலாண்மை இயக்குநர் ஜீன்-பிலிப்பே லபோர்ட்.
“வளர்க்கப்படும் ஒவ்வொரு கிலோ அரிசிக்கும் அது 3,000 முதல் 5,000 லிட்டர் வரை தண்ணீரை எடுத்துக்கொள்கிறது, இது மிகவும் அதிகம்.”
பெரும்பாலான அரிசி உற்பத்தி தண்ணீர் நிரம்பிய வயல்களில் குறிப்பாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த முறை பயிருக்கு ஆதரவாக இருக்கிறது, ஆனால் குறைவான ஆக்ஸிஜன் இருக்கும் அனரோபிக் (anaerobic) எனப்படும் காற்றில்லா சூழலை உருவாக்குகிறது.
“வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது நுண்ணுயிரிகள் பெருகி அதிக அளவில் மீத்தேனை உற்பத்தி செய்கின்றன,” என்கிறார் இவான் பிண்டோ.
சர்வதேச ஆற்றல் முகமையின் (இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி) கூற்றுப்படி மீத்தேன் என்பது உலக வெப்பமயமாக்கலுக்கு சுமார் 30% பொறுப்பான சக்தி வாய்ந்த பசுங்குடில் வாயு.
உலகளவில் வேளாண் பசுங்குடில் வாயுக்கள் வெளியீட்டில் அரிசி உற்பத்தி சுமார் 10 விழுக்காடு பங்களிக்கிறது என, ஐஆர்ஆர்ஐ கணிக்கிறது.
பசுமையான வழிகள்
பட மூலாதாரம், Getty Images
மாற்று ஈரப்பதம் மற்றும் உலர்த்துதல் (Alternate Wetting and Drying – AWD) என்ற நீர் சேமிப்பு முறையை டில்டா, சோதனை செய்து வருகிறது. இந்த முறையில் நிலத்துக்கடியில் 15 சென்டிமீட்டர் ஆழத்தில் ஒரு பைப் பொருத்தப்படுகிறது. வயல்வெளியில் தண்ணீரை தொடர்ந்து தேக்கி வைப்பதற்கு பதிலாக, தண்ணீர் இல்லாதபோது மட்டும் பைப்பில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
“பொதுவாக பயிர் வளர்ச்சி காலத்தில் 25 சுழற்சிகள் இருக்கும்,” என்கிறார் லபோர்ட். “AWD நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அதை 20 ஆக குறைக்கலாம். எனவே, ஐந்து [வெள்ள] சுழற்சிகளை குறைப்பதன் மூலம், மீத்தேன் உமிழ்வை குறைக்க முடியும்.”
2024-ல் டில்டா அதன் பரிசோதனையை 50-லிருந்து 1,268 விவசாயிகளுக்கு விரிவாக்கியது. இந்த முடிவுகள் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது.
“எங்களால் தண்ணீர் [பயன்பாட்டை] 27% அளவு, மின்சாரத்தை 28%, உரங்களை 25% குறைக்கமுடிந்தது,” என்கிறார் லபோர்ட். இதற்கிடையில், பயிர் விளைச்சல் 7% அதிகரித்தது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“எனவே, இது அதிக செலவில் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்ல, குறைந்த செலவில் வருவாயை அதிகரிப்பதாகும்,” என்கிறார் அவர்.
மீத்தேன் வெளியிடப்படுவதும் 45% குறைந்ததை கோடிட்டு காட்டும் லபோர்ட், வெள்ள சுழற்சிகளை மேலும் குறைப்பதன் மூலம் மீத்தேன் வெளியிடப்படுவது 70% குறையக்கூடும் என அவர் நம்புகிறார்.
காலநிலை அழுத்தம்
பட மூலாதாரம், Getty Images
பசுமைப் புரட்சியின் IR8 போன்ற உயர் விளைச்சல் வகைகள் மூலம் அரிசி பில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளித்து வந்தாலும், அரிசி வளரும் பகுதிகள் தீவிர வெப்பம், வறட்சி, கனமழை அல்லது வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்படுவதால் காலநிலை மாற்றம் இப்போது அதன் உற்பத்திக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது.
2024ஆம் ஆண்டில் அரிசி விளையும் பருவத்தில் இந்தியாவில் வெப்பம் 53 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவை எட்டியது. வங்கதேசத்தில் மேலும் அடிக்கடி ஏற்படும் தீவிர வெள்ளங்கள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.
அதன் 1,32,000 அரிசி வகைகளின் பரந்த மரபணு வங்கியில் இதற்கான தீர்வுகளைத் தேடுகிறது IRR. 21 நாட்கள் வரை நீரில் மூழ்கியிருந்தாலும் சேதமடையாமல் இருக்க உதவும் ஒரு மரபணு ஒரு முக்கிய கண்டுபிடிப்பு.
“இந்த ரகங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் சூழ்நிலையிலும் வெள்ளம் வடியும் வரை விளைச்சலுக்கு பாதிப்பு இல்லாமல் தாக்குப் பிடிக்கக்கூடியவை,” என்கிறார் பிண்டோ. இந்த ரகங்கள் வெள்ளம் அதிகம் ஏற்படும் வங்கதேச பகுதிகளில் அதிகம் பிரபலமடைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாற்று முக்கிய உணவுகள்
பட மூலாதாரம், Getty Images
சில அரசுகள் மக்களை அரிசியிலிருந்து விலகி இருக்கும்படி ஊக்குவிக்க முயற்சித்துள்ளன.
வங்கதேசத்தில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, அரிசி விலை உயர்ந்தபோது, உருளைக்கிழங்கை மாற்று உணவாக ஊக்குவிக்கும் ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
“நாங்கள் உருளைக்கிழங்கை விரும்புகிறோம்தான்… ஆனால், அரிசிக்கு பதிலாக முழுவதுமாக உருளைக்கிழங்கை அடிப்படையாகக் கொண்ட உணவு உண்பது என்பது கற்பனை செய்ய முடியாததாக இருந்தது,” என்கிறார் டாக்காவைச் சேர்ந்த ஷரீஃப் ஷபீர்.
சீனாவும் 2015-ல் இதேபோன்ற ஒரு முயற்சியைத் தொடங்கியது, உருளைக்கிழங்கை ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர்ஃபுட் ஆக ஊக்குவித்தது.
1990களில் சீனா முன்னணி உருளைக்கிழங்கு உற்பத்தியாளராக மாறியிருந்தது, நாட்டின் பல பகுதிகளில் மக்கள் உருளைக்கிழங்கை முக்கிய உணவாக உண்டு வந்தனர். இருப்பினும், இந்த பிரசாரம் தோல்வியடைந்தது.
“சீனாவின் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில், உருளைக்கிழங்கு சில சமயங்களில் முக்கிய உணவாக உண்ணப்படுகிறது,” என்கிறார் லண்டனின் SOAS பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் ஜாகோப் கிளைன்.
ஆனால், பல பகுதிகளில் உருளைக்கிழங்கு வறுமையுடன் தொடர்புப்படுத்தி பார்க்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
“சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்கள், தாங்கள் உருளைக்கிழங்கு உண்டு வளர்ந்ததாக என்னிடம் கூறுகிறார்கள். ‘நான் வறுமையில் வளர்ந்தேன்’ என சொல்வதற்கு இது ஒரு வழி.. உருளைக்கிழங்கு உண்பது களங்கத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
கடினமான தேர்வு
பட மூலாதாரம், Getty Images
உலகளவில், அரிசி மக்களின் வாழ்க்கையில் ஆழமாகப் பதிந்துள்ளது. இது சுவையானது, சமைப்பதற்கு எளிதானது, சேமித்து வைப்பதற்கு மற்றும் கொண்டு செல்வதற்கு வசதியானது.
உலக மக்கள் ஆண்டுக்கு சுமார் 520 மில்லியன் டன் அரிசியை உட்கொள்கின்றனர்.
பிலிப்பைன்ஸில், அட்ரியன் பியான்கா வில்லனுவேவா, அரிசி உண்பதை குறைத்தாலும், அதை முற்றிலும் கைவிடுவது கடினம் என்று ஒப்புக்கொள்கிறார்.
“நான் அரிசி உண்ண விரும்பாவிட்டாலும், ஒரு விருந்துக்கு அல்லது வேறு வீட்டுக்கு சென்றால், அவர்கள் எப்போதும் அரிசியை உணவாக வழங்குவார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
“நான் அரிசியை குறைவாக உண்ணலாம் – ஆனால் இது எங்கள் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதால் அதை முற்றிலும் நீக்க முடியாது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு