பட மூலாதாரம், NurPhoto via Getty Images
-
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்திய செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இந்தியாவில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை உயர்வு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் 5.54 சதவிகிதமாக இருந்த சில்லறைப் பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.09 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆனால், உணவுப் பணவீக்கத்தை உற்று நோக்கினால், அது 8.94 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புற இந்தியாவில் உணவுப் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் உணவுப் பணவீக்கம் 9.09 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 8.68 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது.
எளிதாகக் கூறுவதெனில், ஒட்டுமொத்த பணவீக்க விகிதத்தைவிட உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமான வேகத்தில் உயர்ந்து வருகின்றன.
இந்த ஆண்டு உணவுப் பணவீக்கம் அதிகரிப்பதற்குக் காரணமாக வானிலை மாற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகள், விநியோகத் தட்டுப்பாடு, உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை அமைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் ஏறக்குறைய 60% விவசாய நிலங்கள் மழையைச் சார்ந்தே இருப்பதால், பருவமழையின் மாறுபாடுகளால் இந்தியா தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவைவிட 13% குறைவாகப் பெய்ததுடன், சீரற்ற முறையிலும் பெய்தது. அதேவேளையில், தீவிரமடைந்து வரும் எல் நினோ (El Niño) சூழல் விவசாய உற்பத்திக்கான அபாயங்களை அதிகரித்துள்ளது.
லோக்கல்சர்க்கிள்ஸ் (LocalCircles) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில், 10 நுகர்வோரில் 6 பேர், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அத்தியாவசியப் பொருட்களுக்காக ஒவ்வொரு மாதமும் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
விலைவாசி உயர்வு மக்களின் செலவுகளைக் குறைக்கவும் கட்டாயப்படுத்தி வருகிறது. உணவகங்களில் சாப்பிடுவது, பொருட்கள் வாங்குவது மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான விருப்பச் செலவுகளைக் குறைப்பதாக 74% பேர் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், பாதிக்கும் மேற்பட்டோர் அத்தியாவசியப் பொருட்களை முன்பைவிடக் குறைந்த அளவில் வாங்குகின்றனர்.
இந்திய குடும்பங்களின் மொத்தச் செலவினத்தில் உணவுக்கான பங்கு முன்பைவிடக் குறைந்திருந்தாலும், பணவீக்கத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் காரணியாக உணவுப் பொருட்களே தொடர்ந்து உள்ளன. இது பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
இந்தியாவின் சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி (Consumer Price Index – CPI), பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தொகுப்பில் உணவு மற்றும் பானங்களின் பங்கு 36.75 சதவிகிதமாக உள்ளது. முந்தைய கணக்கீட்டு முறையில் இது 45.86 சதவிகிதமாக இருந்தது. இந்தியர்களின் நுகர்வுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இது பிரதிபலிக்கிறது. தற்போது சேவைகள், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி மற்றும் உணவு அல்லாத பிற பொருட்களுக்காக மக்கள் அதிகம் செலவிடுகின்றனர்.
இருப்பினும், உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படும் திடீர் உயர்வு ஒட்டுமொத்த பணவீக்க விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அதேநேரம், வருமானத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளைக் கொண்ட மக்களையே இது சமமற்ற வகையில் அதிகம் பாதிக்கிறது.
மும்பையைச் சேர்ந்த இந்திரா காந்தி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார இணைப் பேராசிரியர் ராஜேஸ்வரி செங்குப்தா கூறுகையில், “இந்தியா போன்ற ஏழை நாடுகளில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தங்களைச் சரி செய்துகொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
குடும்பங்களின் வருமானத்தில் கணிசமான பகுதி இன்னமும் உணவுக்காகவே செலவிடப்படுகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
புள்ளிவிவரங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆய்வு நிறுவனமான கிரிசில் (Crisil) நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் தர்மகீர்த்தி ஜோஷியின் கணக்கீட்டின்படி, கிராமப்புறங்களில் உள்ள ஏழ்மையான 20% குடும்பங்கள் அக்டோபர் மாதத்தில் 6.9% பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளன. அதேவேளையில், வசதி படைத்த முதல் 20% குடும்பங்கள் 6.5% பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளன.
நகர்ப்புற இந்தியாவில் இதே விகிதங்கள் முறையே 6.1% மற்றும் 5.3%-ஆக உள்ளன. ஓர் எளிய உணவின் விலையில்கூட இந்தப் பணவீக்கத்தின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது.
கிரிசில் நிறுவனத்தின் ‘ரொட்டி ரைஸ் ரேட்’ ஆய்வின்படி, வீட்டில் சமைக்கப்படும் சைவ உணவுத் தட்டின் விலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அக்டோபரில் 12% அதிகரித்துள்ளது. வெங்காயம், தக்காளி, காய்கறிகள், சமையல் எண்ணெய், அரிசி, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வே இதற்குக் காரணம். அசைவ உணவுத் தட்டின் விலை 9% அதிகரித்துள்ளது.
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
கிரிசில் நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு இயக்குநர் புஷன் சர்மாவின் கூற்றுப்படி, அரிசியின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 10 சதவிகிதமும், பருப்பு வகைகளின் விலை 8 சதவிகிதமும், சமையல் எண்ணெயின் விலை 13 சதவிகிதமும், எல்பிஜி எரிவாயுவின் விலை 10 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த விலை உயர்வுக்குச் சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே காரணமாக இல்லை. தற்போது பல்வேறு பொருட்களிலும் விலை உயர்வு பரவலாகக் காணப்படுகிறது” என்றார்.
வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்கும்போது, குடும்பங்கள் அதன் பயன்பாட்டை ஓரளவுக்குக் குறைத்துக்கொள்ள முடியும். ஆனால், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் கடினம். உணவுப் பணவீக்கம் என்பது விவசாயிகள் என்ன உற்பத்தி செய்கிறார்கள் என்பதை மட்டும் சார்ந்தது அல்ல. அந்த உணவுப் பொருட்கள் எந்த அளவுக்குத் திறமையாகச் சேமிக்கப்படுகின்றன, பதப்படுத்தப்படுகின்றன, சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்பதையும் சார்ந்துள்ளது.
இந்த ஒவ்வொரு நிலையிலும் உள்ள குறைபாடுகள், பருவகாலப் பற்றாக்குறையை திடீர் விலை உயர்வாக மாற்றுவதுடன், அதிகப்படியான உற்பத்தியை வீணாகவும் மாற்றக்கூடும். உதாரணமாக, வெங்காயத்தின் விலை பருவகால மாற்றங்களால் அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகிறது.
ராபி பருவப் பயிர்கள் (Rabi crops) என்பது பருவமழைக்குப் பிறகு விதைக்கப்பட்டு, வசந்த காலத்தில் அறுவடை செய்யப்படும் குளிர்காலப் பயிர்களாகும். மொத்த வெங்காய உற்பத்தியில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இந்தப் பருவத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படும் இந்த வெங்காயம், பல மாதங்களுக்குச் சேமித்து வைக்கப்படுகிறது.
சேமிப்பில் உள்ள வெங்காயத்தின் அளவு குறையத் தொடங்கும்போது, அடுத்த அறுவடை சந்தைக்கு வருவதற்கு முன்பாக அதன் விலை கடுமையாக உயரக்கூடும். அதேவேளையில், கோடை மாதங்களில் தக்காளியின் விலை அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. சில சந்தைகளுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைவது அல்லது அதிக வெப்பத்தால் உற்பத்தி பாதிக்கப்படுவது இதற்குக் காரணமாக அமைகிறது.
அழுகக்கூடிய உணவுப் பொருட்களே உணவுப் பணவீக்கத்தில் திடீர் விலை உயர்வுகளுக்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பதாகவும், அரிசி, கோதுமை போன்ற நீண்ட காலம் சேமிக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் படிப்படியாக உயர்ந்தாலும், நீண்ட காலத்துக்கு அதிகமாகவே நீடிக்கக்கூடும் என்றும் சர்மா தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அழுகக்கூடிய பொருட்கள்தான் விலைகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துகின்றன. அரிசி, கோதுமை போன்ற அழுகாத பொருட்கள்தான் கட்டமைப்பு ரீதியாகச் செலவுகளை அதிகரிக்கின்றன” என்றார்.
அழுகக்கூடிய விவசாயப் பொருட்களைத் தரம் பிரிப்பதற்கும், வகைப்படுத்துவதற்கும், சேமிப்பதற்கும், பதப்படுத்துவதற்கும் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இன்னும் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, தக்காளி அதிக அளவில் விளைச்சல் கிடைக்கும் காலங்களில், விவசாயிகள் அவற்றைக் கட்டுப்படியான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு அதே தக்காளியின் விலை நுகர்வோருக்குக் கடுமையாக அதிகரிக்கிறது.
பட மூலாதாரம், Bloomberg via Getty Images
சிறந்த சேமிப்பு மற்றும் பதப்படுத்தும் வசதிகள் இருந்தால், அதிகப்படியான தக்காளியைப் பயன்படுத்தி தக்காளி ப்யூரி போன்ற பொருட்களைத் தயாரிக்க முடியும். இதன் மூலம் அதிக உற்பத்தி, பற்றாக்குறை ஆகிய இரண்டுக்கும் இடையிலான விலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று புஷன் சர்மா தெரிவிக்கிறார்.
இதுதவிர வேறு சில காரணிகளும் விலைவாசி உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. எரிசக்தி விலையில் ஏற்படும் திடீர் உயர்வு, போக்குவரத்து, நீர்ப்பாசனம் மற்றும் விவசாய உற்பத்திக்குத் தேவையான இடுபொருட்களின் செலவுகளை அதிகரிக்கிறது. உரங்களின் விலையும் உயரக்கூடும். சர்வதேச சமையல் எண்ணெய் சந்தையின் விலைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில், இந்தியா சமையல் எண்ணெய்க்காகப் பெருமளவில் இறக்குமதியைச் சார்ந்துள்ளது.
இருப்பினும், உணவுப் பணவீக்கத்தின் மோசமான பாதிப்புகளில் இருந்து இந்தியாவுக்கு சில பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. அரசின் தானியக் கையிருப்பு, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவைவிடப் போதுமான அளவு அதிகமாக உள்ளது. மேலும், சுமார் 80 கோடி மக்களுக்குப் பயனளிக்கும் இலவச உணவு தானியத் திட்டம், விலைவாசி உயர்வில் இருந்து மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. குறிப்பாக, அரிசியின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. இருப்பினும், இது பரந்த அளவிலான பொருளாதார ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ராஜேஸ்வரி செங்குப்தா தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “உணவுப் பணவீக்கம் முதலில் விநியோகப் பற்றாக்குறையால் தொடங்கலாம். ஆனால், அதன் தாக்கங்கள் பல்வேறு துறைகளுக்கும் பரவக்கூடும். அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைக்கூடச் சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கோரக்கூடும். அதிகரிக்கும் தொழிலாளர் செலவுகளை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் தங்களது பொருட்களின் விலையை உயர்த்தலாம். இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை உயர்வாகத் தொடங்கும் பிரச்னை, படிப்படியாகப் பொதுவான பணவீக்க அழுத்தமாக மாறக்கூடும். இதுவே மத்திய வங்கிகள் தடுக்க முயலும் வழக்கமான ஊதியம் – விலை உயர்வு சுழற்சியாகும்” என்றார்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இது மிகவும் சிக்கலான சமநிலையைப் பேண வேண்டிய சூழலை உருவாக்குகிறது. விவசாயம் என்பது ஒப்பீட்டளவில் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட துறையாகும்.
குறிப்பிட்ட சில பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) நிர்ணயிப்பதன் மூலம் விவசாயிகளைப் பாதுகாக்க அரசு நீண்ட காலமாக முயன்று வருகிறது. சந்தை விலை திடீரென வீழ்ச்சியடையும்போது விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அந்த விலையில் விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதாக அரசு உறுதியளிக்கிறது.
பட மூலாதாரம், Robert Nickelsberg/Getty Images
அதேவேளையில், உணவுப் பொருட்களின் விலைகள் அரசியல் ரீதியாகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும்போது, அது விரைவாக நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இதனால், ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது, வணிகர்கள் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான அளவைக் கட்டுப்படுத்துவது அல்லது விலைகளைக் குறைப்பதற்கான பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது என அரசு தலையிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தியர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பார்க்கும்போது, தற்போதைய பணவீக்கச் சூழல் மேலும் கவனிக்கத்தக்கதாகிறது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது இந்திய குடும்பங்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறியுள்ளன. 2011-12 மற்றும் 2023-24 நுகர்வோர் செலவின ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வுப்படி, உணவுச் செலவினத்தில் தானியங்களுக்கான பங்கு கணிசமாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, ஏழ்மையான குடும்பங்களில் இந்தச் சரிவு அதிகமாக உள்ளது. மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கும் அரசின் திட்டங்களின் தாக்கத்தை இது பிரதிபலிக்கிறது. அதேவேளையில், பால் பொருட்கள், பழங்கள் மற்றும் இறைச்சி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களின் நுகர்வு அனைத்து வருமானப் பிரிவினர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஏழ்மையான குடும்பங்களிடையே இந்த அதிகரிப்பு மிக அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியர்களின் உணவுப் பொருட்களின் பட்டியல் தற்போது மேலும் பன்முகத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. ஆனால், சாதாரண இந்தியர்கள் அவற்றை வாங்கும் அளவுக்கு விலை கட்டுப்படியாக இருந்தால் மட்டுமே இந்தப் பன்முகத்தன்மைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்.
இறுதியில், உணவுப் பணவீக்கம் என்பது ஒருவரது உணவுத் தட்டில் என்ன இடம்பெறுகிறது, எவற்றையெல்லாம் விலை உயர்வு காரணமாகத் தவிர்க்க வேண்டியிருக்கிறது என்பதைப் பற்றியதாகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு