‘அர்னாப்’ புயலால் பெய்த மழையை தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாயிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த உரையாடலின் போது, புயலால் மாநிலத்தில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய், அமித் ஷாவிடம் விளக்கினார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
புயலின் தாக்கத்தால் மாநிலத்தில் மழை பெய்து வருவதாகவும், ஆனால் இதுவரை வெள்ள பாதிப்போ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்றும் முதலமைச்சர் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தார்.
முதலமைச்சர் நன்றி:
மாநில அரசு சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் விஷ்ணு தேவ் சாய், அமித் ஷாவிடம் கூறினார். புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்ததற்காக, அமித் ஷாவுக்கு முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் நன்றி தெரிவித்தார்.
மக்களின் பாதுகாப்பே மாநில அரசின் முதன்மையான முன்னுரிமை என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்பட்டால் உடனடி மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறைகளும் மாவட்ட நிர்வாகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
மேலும், ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களிடமும் அமித் ஷா பேசி, புயல் பாதிப்பு குறித்த நிலவரங்களை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மழைக்கு வாய்ப்பு:
புதன்கிழமை ஆந்திர கடற்கரையை கடந்த ‘அர்னாப்’ புயலின் தாக்கத்தால், ராய்ப்பூர் உள்ளிட்ட சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் வியாழக்கிழமையும் தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ராய்ப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ராய்ப்பூரில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, மிக தீவிர புயலான ‘அர்னாப்’-இன் எஞ்சிய பகுதியான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று (வியாழக்கிழமை) காலை 11.30 மணியளவில் சத்தீஸ்கரின் மத்திய பகுதிகளை வந்தடைந்தது.
இது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, வியாழக்கிழமை மாலைக்குள் வட சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு ஒடிசா பகுதிகளில் நன்கு வரையறுக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கரின் சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராய்ப்பூரில் வெள்ளி கிழமையன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒன்று அல்லது இரண்டு முறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.