ஆடையில் மலம் கழித்த பிறகும் அப்படியே போட்டியை தொடர்ந்த வீராங்கனை
பிரசுரிக்கப்பட்டது
ஆடையில் மலம் கழித்த நிலையிலும் போட்டியை தொடர்ந்த வீராங்கனை
ஹைராக்ஸ் உடற்பயிற்சிப் போட்டியின் போது, ஆடையில் மலம் கழித்த நிலையிலும் தொடர்ந்துப் போட்டியிட்டதற்காக ஆஸ்திரேலிய வீராங்கனை ஜோசன்னா வீட்ஸிக் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற உள்ளரங்க உடற்பயிற்சிப் போட்டியின் போது ஜோசன்னா வீட்ஸிக் ஆடையில் மலம் கழித்த நிலையில் போட்டியிட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து மன்னிப்புக் கோருவதாக தெரிவித்த வீட்ஸிக், தான் “வேறு ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்” என்றும், போட்டியிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆடை அழுக்கடைந்த பிறகும் ஜோசன்னா வீட்ஸிக் தொடர்ந்து போட்டியிட்ட காணொளி இணையத்தில் வெளியாகிப் பரவலான சுகாதார கவலைகளை எழுப்பியது. இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தைக் கையாண்ட விதத்திற்காக ‘ஹைராக்ஸ்’ அமைப்பின் இணை நிறுவனரான மோரிட்ஸ் ஃபர்ஸ்டே மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
தன் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து, பெய்ஜிங் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை வீட்ஸிக், தனது வெற்றியைத் துறப்பதாக தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை வீட்ஸிக் வெளியிட்ட அறிக்கையில், “எனது நடவடிக்கை என்னையும் தாண்டிப் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பதிவில் வீட்ஸிக் கூறுகையில், “பெய்ஜிங் போட்டியின் போது நடந்த சம்பவத்திற்காகச் சீன மக்கள், எனது சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஹைராக்ஸ் அமைப்பாளர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு தான் “முழு உடற்தகுதியோடும் ஆரோக்கியத்தோடும்” இருந்ததாகவும், தனக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்க “எந்தக் காரணமும் இருக்கவில்லை” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
“நடந்ததை திரும்பிப் பார்க்கும்போது, போட்டியிலிருந்து வெளியேறாமல் தொடர்ந்த அந்த முடிவிற்காக வருந்துகிறேன். நான் வேறொரு முடிவை எடுத்திருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். போட்டியைத் தொடர நான் எடுத்த முடிவிற்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்; இதனால் ஏற்பட்ட சங்கடங்களுக்கும் இடையூறுகளுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வீட்ஸிக் மேலும் கூறினார்.
ஒவ்வொரு ‘ஹைராக்ஸ்’ போட்டியிலும், பங்கேற்பாளர்கள் ஒரு கிலோமீட்டர் ஓட்டம், ஸ்லெட் தள்ளுதல், பர்பி ஜம்ப்கள், உள்ளரங்கத்தில் படகோட்டுவது மற்றும் மணல் மூட்டையைச் சுமந்துகொண்டு செய்யும் லஞ்சஸ் உள்ளிட்ட தீவிர உடற்பயிற்சிகளை மாறிமாறிச் செய்யவேண்டும்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விளையாட்டு, குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து தற்போது உலகெங்கிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் அறிமுகமானது.
அதேவேளையில், ‘எச்சில் துப்புதல், மூக்கு சிந்துதல், குப்பைகளைப் போடுதல் மற்றும் தண்ணீரை வீணடித்தல்’ போன்ற செயல்களுக்கு தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் ஹைராக்ஸ், கடந்த வார இறுதியில் பெய்ஜிங்கில் நடந்த போட்டியின் போது அந்த வீராங்கனை தனது ஆடையில் மலம் கழித்த நிலையிலும் போட்டியைக் கண்காணித்த நடுவர்கள் ஏன் தலையிட்டு அவரைத் தடுக்கவில்லை என சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
விரிவாக காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு