சென்னை: ஆதாயக் கொலையும், ஆதாயக் கொள்ளையுமாக அடுத்தடுத்த நாள்களில் இருந்தது போலவே மது போதை மோதலிலும் அடுத்தடுத்த நாள்களில் தமிழ்நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், வலசையூர் அருகே அரூரில் வசிக்கும் பூமாலை- சின்னபாப்பா தம்பதியை கொடூரமாக தாக்கி, அவர்களை கட்டிப்போட்டு விட்டு நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கணவர் பூமாலையும், மனைவி சின்னப்பாப்பாவும், இணைந்து விவசாயம் பார்ப்பதோடு, செங்கல் சூளையிலும் வேலை பார்த்து சொந்த உழைப்பில் பொருளீட்டி வாழ்கிற அருமையான உழைப்பாளிகள்.
ஒரு மகனை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார்கள். இன்னொரு மகன் தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். உழைப்பின் உன்னதத்தை பறைசாற்றக்கூடிய உதாரண தம்பதியராய் வாழும் அவர்களின் சேமிப்பு நகையையும், பணத்தையும்தான் கொள்ளையடித்து போயிருக்கிறது கொள்ளைக்கூட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. எட்டுபவுன் நகைக்காக இளம்பெண் அஸ்வினியை ஜூலை 24- ஆம் தேதி கொடூரமாக தாக்கி விட்டு நகையை கொள்ளையடித்துப் போயிருக்கிறார்கள். 26-ஆம் தேதி வரை மருத்துவ சிகிச்சையில் இருந்த அஸ்வினி, 27-ஆம் தேதி இறந்து போயிருக்கிறார். நகைக்காக அஸ்வினியை கொலை செய்த விதமும் மிகக் கொடூரமானது என்பதை உறவினர்கள் விவரித்திருக்கிறார்கள்.
ஆதாயக் கொலையும், ஆதாயக் கொள்ளையுமாக அடுத்தடுத்த நாள்களில் இருந்தது போலவே மது போதை மோதலிலும் அடுத்தடுத்த நாள்களில் தமிழ்நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு. சென்னை குரோம்பேட்டையில் டாஸ்மாக் மதுக்கூடத்திலேயே மதுபோதையில் தகராறு ஏற்பட்டு பரந்தாமன் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்திருக்கிறது. சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் நண்பர்களோடு மது அருந்திய விஜயகுமார் என்பவர் அதே நண்பர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஆதாயத்துக்காக ஒரு கொலை, ஒரு கொலை முயற்சியும், மதுபோதையில் இரண்டு கொலைகளுமாக அடுத்தடுத்த நாள்களில் நடந்திருக்கும் இப்படியான சமூக சீர்கேட்டை சாதாரணமாக கடந்துபோக நினைப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. ஆதாயக் கொலைகளைப் போலவே மதுபோதையால் நிகழக்கூடிய கொலைகளும் ஆபத்தானது” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.