படக்குறிப்பு, மைதிலி பாட்டீலின் தாயார் பிரமிளா பாட்டீல்கட்டுரை தகவல்
எழுதியவர், அல்பேஷ் கற்கரே
பதவி, பிபிசி மராத்தி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
2025-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி, குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உரன் தாலுகாவைச் சேர்ந்த நாவா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான, அந்த ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த மைதிலி பாட்டீலும் ஒருவர்.
இந்த விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இருப்பினும், இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. எனவே, ஆழமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று மைதிலியின் தாயார் பிரமிளா பாட்டீல் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், “எனது மகள் எனக்குத் திரும்ப கிடைக்கப் போவதில்லை. ஆனால், இந்த விபத்து எதனால் நடந்தது என்பதை அறிய வேண்டும். இதைத் தவிர எனக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை” என்று கூறினார்.
குடும்பத்தின் மூத்த மகள் மைதிலி
மைதிலி பாட்டீல் நாவா கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானத்தில் பணிப்பெண்ணாக அவர் பணியில் சேர்ந்தார்.
பெற்றோர், ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி என ஐவர் கொண்ட குடும்பத்தில் மைதிலி மூத்தவர் ஆவார்.
மைதிலி பாட்டீலின் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். மிகுந்த வறுமையான சூழலிலும், அவர் தனது மூன்று குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்துள்ளார். விமான விபத்துக்குப் பிறகு, அந்த குடும்பமே பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
பணியில் சேர்ந்த பிறகு, குடும்பத்தின் பொறுப்பையும் தனது உடன்பிறந்தவர்களின் கல்விச் செலவையும் மைதிலி கவனித்து வந்தார். அவர் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் இலட்சியம் கொண்ட பெண் என்று அவரது ஆசிரியர்களும் அக்கம் பக்கத்தினரும் கூறுகின்றனர்.
நாவா கிராமத்தில் உள்ள டி.எஸ். ரஹ்மான் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்ற மைதிலி, சிறுவயதிலிருந்தே விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவைச் சுமந்து கொண்டிருந்தார்.
மிகவும் நெருக்கடியான பொருளாதாரச் சூழலிலும் மைதிலி தனது கல்வியைத் தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, விமானப் போக்குவரத்து படிப்பை முடித்த அவர், ஏர் இந்தியாவில் பணியில் சேர்ந்தார். தனது இரண்டு ஆண்டு பணி அனுபவத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச எனப் பல விமானங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.
‘அவள் எங்கிருந்தோ வருவாள், பேசுவாள் என்றே இப்போதும் தோன்றுகிறது’
பட மூலாதாரம், Maithili Patil
மைதிலியின் மறைவுக்குப் பிறகு கடந்த ஒரு வருடம் எப்படி கழிந்தது என்பது குறித்து பிபிசி மராத்தியிடம் பேசிய அவரது தாயார் பிரமிளா பாட்டீல் உணர்ச்சிகரமாகப் பேசினார்.
“என்னுடைய உலகம் முழுவதுமே நின்றுவிட்டது. அதனால் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டது என்று என்னால் சொல்ல முடியவில்லை. அவள் எங்கிருந்தோ திடீரென வருவாள், என்னிடம் பேசுவாள் என்றுதான் இப்போதும் எனக்குத் தோன்றுகிறது,” என்று அவர் கூறினார்.
“குடும்பத்தில் மைதிலிதான் மூத்தவள். தன் உடன்பிறந்தவர்களின் கல்வியை முடிக்க வேண்டும், வீட்டின் பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான் அவளுடைய விருப்பமாக இருந்தது. நான் அவளிடம் திருமணம் குறித்து கேட்டிருந்தேன். அப்போது அவள் என்னிடம் ஐந்து ஆண்டுகள் அவகாசம் கேட்டாள். ஏனென்றால், தனது உடன்பிறந்தவர்களின் படிப்பை முடிக்கவும், வீட்டின் பொறுப்புகளை கவனிக்கவும் அவள் விரும்பினாள்,” என பிரமிளா பாட்டீல் தெரிவித்தார்.
மைதிலி பணியில் சேர்ந்த பிறகு, குடும்பத்தின் நிதிநிலை மேம்படத் தொடங்கியிருந்தது. ஆனால், அவளது மறைவுக்குப் பிறகு மீண்டும் போராட்டமான காலம் தொடங்கிவிட்டதாக அவர் கூறுகிறார்.
“அவள் வேலைக்குச் சேர்ந்த பிறகு, யாரிடமும் உதவி கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. இனி எல்லாவற்றையும் அவள் பார்த்துக் கொள்வாள் என்பதால் நானும் நிம்மதியாக இருந்தேன். ஆனால் அவள் சென்ற பிறகு, நிலைமை மீண்டும் பழையபடி ஆகிவிட்டது. மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது,” என்று அவர் கூறினார்.
கடந்த ஓராண்டாகத் தனது கணவரின் சம்பளத்திலும், உறவினர்களின் உதவியிலும்தான் குடும்பத்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“இன்றைய நிலையில், மகளின் இழப்பால் கிடைத்த உதவியைக் கொண்டே நாங்கள் வாழ்ந்து வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
‘குறைந்தது தவறு யாருடையது என்பது மட்டுமாவது தெரிய வேண்டும்’
பட மூலாதாரம், Maithili Patil
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள சர்வதேச விதிகளின்படி, முதற்கட்ட விசாரணை அறிக்கை 30 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும். அதேபோல், இறுதி அறிக்கை 12 மாதங்களுக்குள் இறுதி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விபத்துக்குப் பிறகு, விமானத்தின் ‘பிளாக் பாக்ஸ்’ ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் மூலமாக விசாரணையும் தொடங்கியது. ஆனால், ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையிலும், விபத்துக்கான உறுதியான காரணம் தங்களுக்குத் தெரியவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகின்றனர்.
“ஏதாவது ஒரு தகவல் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். குறைந்தது தவறு யாருடையது என்பது மட்டுமாவது தெரியவரும் என்று நம்பினோம்,” என்று பிரமிளா பாட்டீல் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், “இது விமானியின் தவறு என்று நான் நினைக்கவில்லை. விமானத்தில் ஏதேனும் கோளாறு இருந்தால், அதை பறக்க அனுமதி வழங்க மாட்டார்கள். அனைத்து விஷயங்களும் மிகவும் நுணுக்கமாகச் சோதிக்கப்படுகின்றன. எனது மகளும் இதுபோன்ற சோதனைகள் குறித்து அடிக்கடி என்னிடம் கூறுவாள்.”
“எங்களுக்கு எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. நாங்கள் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறோம். தவறு யாருடையது என்பது என்றாவது ஒருநாள் தெரியும் என்று எதிர்பார்க்கிறோம். அப்போதுதான் எதிர்காலத்தில் யாருக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காது,” என்று பிரமிளா பாட்டீல் குறிப்பிட்டார்.
இந்தக் கோரிக்கை தனது மகளுக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் என்று அவர் கூறுகிறார்.
“இந்த விபத்து எப்படி நடந்தது என்ற தகவல் எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. இந்த விவகாரத்தில் இன்னும் ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விபத்துக்குக் காரணம் என்ன என்பதை மட்டுமாவது நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் எனது மகளின் தவறு என்ன?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திரும்பக் கிடைத்த பை
பட மூலாதாரம், Maithili Patil
கடந்த ஒரு வருடத்தில், மைதிலியின் நினைவுகளும், விபத்தில் சிக்கிய சில பொருட்களும் மட்டுமே அந்தக் குடும்பத்திடம் எஞ்சியுள்ளன. கடந்த 2026-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி மைதிலியின் பொருட்கள் தங்களுக்குத் திருப்பி வழங்கப்பட்டதாக பிரமிளா பாட்டீல் கூறுகிறார்.
“பலரது பைகள் முழுமையான நிலையில் கிடைக்கவில்லை, ஆனால் அவளுடைய பை அப்படியே கிடைத்தது. அவளுடன் இருந்த சில பொருட்களும் கிடைத்தன. ஓராண்டுக்கு முன்பு நாங்கள் இருவரும் சேர்ந்துதான் அந்தப் பையை வாங்கினோம். அப்போது அவள், ‘இந்தப் பை நெருப்பில் விழுந்தால் கூட இதற்கு ஒன்றும் ஆகாது’ என்று சொன்னாள்.
‘ஏன் இவ்வளவு விலை உயர்ந்த பையை வாங்குகிறாய்?’ என்று நான் அவளிடம் கேட்டேன். அதற்கு அவள், ‘இதற்கு ஒன்றும் ஆகாது’ என்று கூறினாள். அந்தப் பை திரும்பக் கிடைத்தபோது அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன,” என்றார் அவர்.
ஏர் இந்தியா நிறுவனம் அவ்வப்போது தங்களைத் தொடர்புகொள்வதாக அவர் கூறுகிறார்.
“ஆம், ஏர் இந்தியாவிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அவர்கள் நலம் விசாரிக்கிறார்கள். அவர்கள் உதவியும் செய்திருக்கிறார்கள். ஏதேனும் பொருட்கள் கிடைத்தால், அது குறித்தும் எங்களிடம் தெரிவிக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், மாநில நிர்வாகமோ அல்லது உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளோ தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
“பிரீதம் ஹாத்ரே என்பவரின் அமைப்பு ஒன்று, எங்கள் இரண்டு குழந்தைகளின் இந்த ஆண்டுக்கான கல்விக்கட்டணத்தைச் செலுத்தியது. ஆனால், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அரசியல்வாதிகள் யாரும் எங்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை,” என்று அவர் கூறினார்.
‘விமானம் பறக்க தகுதியாக இல்லையெனில், அதைப் பறக்கவிடாதீர்’
“விபத்து நடந்து ஓராண்டு கடந்தும், இன்னும் உறுதியான தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நிர்வாகத்திடம் நீங்கள் என்ன கோரிக்கை வைப்பீர்கள்” என்று கேட்டதற்கு, மைதிலி திரும்ப வரமாட்டாள் என்பது எங்களுக்குத் தெரியும் என்று பிரமிளா பாட்டீல் கூறினார். இருப்பினும், விபத்துக்கான உண்மையான காரணம் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மற்ற குடும்பங்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பது மட்டுமே எங்கள் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “விமானத்தைச் சோதனையிடும் போது, அது மிகவும் கவனமாகச் செய்யப்பட வேண்டும். ஒரு விமானம் பறப்பதற்குத் தகுதியான நிலையில் இல்லை என்றால், அதைப் பறக்கவிடவே கூடாது. எவ்விதக் காரணமுமின்றி அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகின்றன. எனது மகள் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இது எதனால் நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும். அதைத் தவிர எனக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை,” என்றார்.