8
சீனாவின் சுற்றுலாத்துறை நகரமான சன்யாவில், 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழா புதன்கிழமை (22) மாலை கோலாகலமாக ஆரம்பமானது. இவ் விளையாட்டு விழாவின் ஆரம்ப விழா வைபவம் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள யாஷா பூங்காவில் நடைபெற்றது.
வரவேற்பு நாடான சீனா, இலங்கை உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீர, வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளின் அணிவகுப்பை தொடர்ந்து, விளையாட்டு விழாவை சீனாவின் அரச தலைவர் ஷென் இக்கின் முறைப்படி தொடக்கி வைத்தார்.
அணிவகுப்பில் இலங்கையின் தேசிய கொடியை கடற்கரை மெய்வல்லுநர் வீராங்கனை லக்ஷிகா சுகந்தி, படகோட்ட வீரர் ஹரேன் தினேத் விக்ரமதிலக்க ஆகியோர் ஏந்திச் சென்றதுடன் ஏனைய வீளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் தேசிய கொடிகளை அசைத்தவாறு கலந்துகொண்டனர்.
ஆறாவது ஆசிய கடற்கடை விளையாட்டு விழா 2020ஆம் ஆண்டிலேயே நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் கொவிட் – 19 தொற்று நோய் காரணமாக இவ் விழா இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு இந்த வருடம் நடத்தப்படுகிறது.
ஹைனான் மாகாணம் ஒரு கண்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். மேலும், கடந்த டிசம்பர் மாதம் ஹைனான் தீவு சுதந்திர வர்த்தக துறைமுகமாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு பிரதான சர்வதேச விளையாட்டு விழா அங்கு நடைபெறுவதும் இதுவே முதல் தடவையாகும்.
ஷான்டாங் மாகாணத்தின் ஹையங் நகரில் 2012இல் நடைபெற்ற போட்டிகளுக்குப் பின்னர் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளைச் சீனா நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.
ஏப்ரல் 30ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில், 14 வகையான விளையாட்டுகளில் 15 பிரிவுகள் மற்றும் 62 போடடி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இப் போட்டிகளில் 1,790 விளையாட்டு வீரர்கள் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றெடுக்க முயற்சிக்கவுள்ளனர்.
Beaches & Islands
இலங்கையிலிருந்து எட்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் 77 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.





