14
ஆறு வளைகுடா நாடுகளுடன் முக்கியமான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இங்கிலாந்து அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், இங்கிலாந்துக்கும் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (GCC) உறுப்புநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தத்தில் பஹ்ரைன், குவைட், ஓமான், கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. பல ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக அமுலுக்கு வந்தால், இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு சுமார் 3.7 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான கூடுதல் வருவாய் மற்றும் பொருளாதார பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஆண்டுதோறும் சுமார் 580 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான சுங்க வரிகள் நீக்கப்படும் என்றும் இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், இங்கிலாந்து நிறுவனங்களுக்கு வளைகுடா நாடுகளில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும் என்றும், பல துறைகளில் கூட்டாண்மைகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்பம், ஆற்றல், கட்டுமானம், நிதிசேவைகள் மற்றும் வர்த்தக துறைகளில் இந்த ஒப்பந்தம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், இரு தரப்புகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றம் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் Keir Starmer தலைமையிலான அரசாங்கம், இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்குப் பின்னர் செய்த மூன்றாவது முக்கிய சர்வதேச வர்த்தக ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.
மேலும், ஜி7 நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து மற்றும் GCC உறுப்புநாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட முதல் பெரிய வர்த்தக ஒப்பந்தம் என்பதும் இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சமாகும். இதனால் உலகளாவிய வர்த்தக மற்றும் பொருளாதார துறையில் இங்கிலாந்தின் செல்வாக்கு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.