சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருக்கும் ஆலம்பரைக் கோட்டை, ஒரு காலத்தில் மிக முக்கியமான வர்த்தக மையமாக திகழ்ந்துள்ளது. ஆனால், 18ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை முற்றிலுமாக சிதைந்து போனது. காரணம் என்ன?
17ஆம் நூற்றாண்டில் துவங்கி, காலனி ஆதிக்க காலம் நெடுக தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக பல கோட்டைகள் கட்டப்பட்டன. கட்டப்பட்ட காலத்திலும் அதற்கு அடுத்த சில நூற்றாண்டுகளிலும் அரசியல் முக்கியத்துவமும் வர்த்தக முக்கியத்துவமும் மிகுந்த இடங்களாக இந்தக் கோட்டைகள் திகழ்ந்தன. ஆனால், 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தக் கோட்டைகள் தங்கள் அதிகார முக்கியத்துவத்தை இழந்தன. சில கோட்டைகள் சிதைந்தும் போயின. அப்படி சிதைந்துபோன ஒரு கோட்டைதான் ஆலம்பரைக் கோட்டை.
சென்னையிலிருந்து நீளும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் 100 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது இடைக்கழிநாடு. காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகாவில் அமைந்திருக்கும் இந்த கிராமம், பத்துப்பாட்டு நூலான சிறுபாணாற்றுப்படையோடு தொடர்புடையது. ஓய்மானாட்டுத் தலைவனான நல்லியக்கோடனை பற்றிப் பாடப்பட்ட சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் ஈத்தத்தனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்த இடைக்கழிநாடு கிராமத்தில்தான் அமைந்திருக்கிறது ஆலம்பரைக் கோட்டை.
‘ஆலம்பர்வா’, ‘ஆலம்புரவி’ என்றெல்லாம் வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்படும் ஆலம்பரைக் கோட்டை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிழக்குக் கடற்கரையில் முக்கியமான ஒரு வர்த்தகத்தலமாக இந்தக் கோட்டை இருந்திருந்தாலும், யாரால் கட்டப்பட்டது என்பது குறித்து தகவல்கள் ஏதும் கிடையாது. முகலாயர் ஆட்சியின் பிற்காலத்தில் இந்தக் கோட்டைக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது என்கிறது தமிழ்நாடு மாநில தொல்லியல்துறை.