• Tue. Sep 15th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்து திரும்பிய இளவரசர் ஹரி – மேகன் தம்பதி: குடும்ப வாழ்க்கை குறித்த வீடியோ வெளியிட்ட மேகன்!

Byadmin

Sep 15, 2026


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து இங்கிலாந்துக்குத் திரும்பியுள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர், தங்களது புதிய குடும்ப வாழ்க்கை தொடர்பான அரிய வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

34 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவின் பின்னணி இசையுடன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் கிராமப்புற பாதையொன்றில் நடந்து செல்வதுடன், அவர்களது 7 வயது மகன் ஆர்ச்சி மான்களை நோக்கி ஓடுவதும், 5 வயது மகள் லிலிபட் சைக்கிள் ஓட்டுவதும் பதிவாகியுள்ளது. மேலும் இளவரசர் ஹரி தனது பிள்ளைகளுடன் மீன்பிடிக்கும் காட்சிகளும், அவர்களின் வளர்ப்பு நாய் அருகில் செல்லும் காட்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து திரும்பியதன் பின்னர் மேகன் தனது குடும்பத்தினரின் காட்சிகளை இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பகிர்வது இதுவே முதல் முறையாகும்.

குறித்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பதிவேற்றப்பட்ட போதிலும், அது எப்போது மற்றும் எங்கு படமாக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. வழக்கமாகத் தங்களது பிள்ளைகளின் முகங்களை நேரடியாகக் காண்பிக்காத தம்பதியினர், இம்முறையும் பின்னாலிருந்தே அவர்களைப் படம் பிடித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு அரச குடும்பத்தின் சிரேஷ்ட பொறுப்புகளில் இருந்து விலகிய இவர்கள், தற்போது உத்தியோகபூர்வ அரச கடமைகளுக்குத் திரும்பாமல் சாதாரண குடிமக்களாகவே இங்கிலாந்தில் வசிக்கவுள்ளனர். இவர்கள் இலண்டனுக்கு வெளியே கொட்ஸ்வோல்ட்ஸ் பகுதியிலுள்ள தனியார் சொத்தொன்றில் வசிக்கவுள்ளதாகவும், பிள்ளைகள் பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் தொடர்ந்து அரச கடமைகளற்ற உறுப்பினர்களாகவே இருப்பார்கள் என்பதையும், அவர்கள் இனி மேன்மை தங்கிய அரச பட்டங்களைப் பயன்படுத்த முடியாது என்பதையும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவரம் குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கப்படாதது ஆச்சரியமளிப்பதாக தம்பதியினரின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

By admin