பட மூலாதாரம், Getty Images
குஜராத்தை சேர்ந்த நயாரா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான வதினார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் எரிசக்தித் துறையை குறிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை புதிய தடைகளை அறிவித்தது. இந்தத் தடையில் குஜராத்தில் இருக்கும் சுத்திகரிப்பு ஆலையும் உள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கடுமையான தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் ஆலோசனை செய்துகொண்டிருக்கும் தருணத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதால் இந்தியா மீது 500 விழுக்காடு வரி விதிக்க வழிவகை செய்யும் மசோதாவை சில அமெரிக்க எம்பிக்கள் முன்மொழிந்து வருகின்றனர்.
இதைத் தவிர, நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் தலைவர் மார்க் ரூட் யுக்ரேனுடனான போரை நிறுத்தும்படி ரஷ்யாவின் மீது சீனா ,பிரேசில் மற்றும் இந்தியா அழுத்தம் தரவேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நயாரா எனர்ஜி நிறுவனத்திற்கு ஒரு பின்னடைவுதான், ஆனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை கொண்டு தயாரிக்கப்படும் எரிபொருட்கள் மீதான தடை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும் சவாலை அதிகரிக்கும்.” என் ஆங்கில நாளிதழான எகனாமிக் டைம்ஸ் அதன் செய்தியில் எழுதியுள்ளது.
இரண்டு நிறுவனங்களுமே ஐரோப்பிய சந்தையிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரஷ்ய எரிசக்தி நிறுவனமான ரோஸ்னெஃப்ட், நயாரா நிறுவனத்தில் தனக்கிருக்கும் 49 விழுக்காடு பங்குகளை விற்க தயாராகிக்கொண்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதைப் போன்ற ஒரு சூழ்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை காரணமாக இந்த பேரம் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் நயாரா ஆகியவை இந்தியாவிலிருந்து எரிபொருளை அதிகம் ஏற்றுமதி செய்யும் முதன்மையான இரண்டு நிறுவனங்களாகும்.
பட மூலாதாரம், Getty Images
மற்ற நிறுவனங்களும் பாதிக்கப்படுமா?
“ரஷ்ய எரிபொருள் நிறுவனமான ரோஸ்னெஃப்டிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்க ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. இப்போது அதன் முன் கடினமான வாய்ப்புகளே உள்ளன- ரஷ்யாவிலிருந்து மலிவான எண்ணெயை வாங்குவதை நிறுத்தவேண்டும் அல்லது லாபம் தரும் ஐரோப்பிய டீசல் சந்தையிலிருந்து வெளியேறவேண்டும், இரண்டு வாய்ப்புகளுமே சுத்திகரிப்பால் கிடைக்கும் சேமிப்புகளை பாதிக்கக்கூடும்,” என எகனாமிக் டைம்ஸ் எழுதியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நயாராவை மட்டும் பாதிக்குமா அல்லது மற்ற சுத்திகரிப்பு நிறுவனங்களையும் பாதிக்குமா என குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் அமைப்பின் நிறுவனர் அஜய் ஶ்ரீவஸ்தவாவை பிபிசி கேட்டது.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் எந்த நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று சரியாக சொல்லும் நிலையில் இன்று நாம் இல்லை. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40 விழுக்காட்டை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது, ஆனால் எந்த நிறுவனங்கள் எவ்வளவு எண்ணெய் வாங்குகின்றன என்பது நமக்கு தெரியாது. ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்னெஃப்ட் 49 விழுக்காடு பங்குகளை வைத்திருப்பதால்தான் நயாராவின் பெயர் அடிபடுகிறது. எஞ்சிய பங்குகளிலும் ரஷ்ய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதைத் தவிர தனியார் பங்கு முதலீடும் உள்ளது,” என்கிறார் அஜய் ஶ்ரீவஸ்தவா.
“எந்த நிறுவனம் எவ்வளவு கச்சாவை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது என்பதையும், அதை சுத்திகரித்த பின்னர் எங்கு அதை ஏற்றுமதி செய்கிறது என்பதை அரசு நம்மிடம் சொல்லும்போதுதான் இதற்கான முழுமையான பதில் நமக்கு கிடைக்கும். பல நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா வாங்கிக்கொண்டு எங்கும் ஏற்றுமதி செய்யாமல் இருக்கலாம். இந்த தரவுகள் பொதுவெளியில் இல்லை.” என்கிறார் அஜய் ஶ்ரீவஸ்தவா.
கடந்த மாதம் ப்ளூம்பர்க் வெளியிட்ட செய்தியின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரஷ்யாவிலிருந்து கடல் மார்க்கமாக ஏற்றுமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் 80 விழுக்காடு இந்தியாவிற்கு வந்திருக்கிறது.
கெப்லெர் தரவுகளின்படி இந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி வரை இந்தியா 231 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியிருந்தது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி லிமிடெட் நிறுவனங்களுக்கு 45 விழுக்காடு பங்கு இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய சந்தைகளை எட்டுவதில் கட்டுப்பாடுகள்
“ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு எவ்வளவு கச்சா எண்ணெய் வந்தது என்பதை மட்டும்தான் இந்திய அரசு சொல்கிறது. இந்தியாவில் எவ்வளவு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஐரோப்பிய சந்தைக்கு அனுப்பப்படுகிறது என்பது பற்றிய தரவுகள் கூட நம்மிடம் இல்லை. எந்த தனியார் நிறுவனத்தின் தரவுகளையும் இந்திய அரசு பகிர்வதில்லை. ரஷ்ய எண்ணெய் இந்தியாவில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஐரோப்பிய சந்தைக்கு பெருமளவில் அனுப்பப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் எவ்வளவு எண்ணெய் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது பற்றிய தரவுகள் இல்லை.” என்கிறார் அஜய் ஶ்ரீவஸ்தவா.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்குப் பிறகு ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியாவில் சுத்திகரித்து ஐரோப்பாவிற்கு அனுப்புவது சாத்தியமாகாது.
“தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இப்போது ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியாவில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்பட முடியாது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவிலிருந்து வந்துகொண்டிருந்தது. அதில் பெரும்பகுதி சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஐரோப்பிய சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்குப் பிறகு ஐரோப்பாவிற்கு இந்தியாவின் பெட்ரோலிய ஏற்றுமதி மிக மோசமாக பாதிக்கப்படும்,” என கூறுகிறார் அஜய் ஶ்ரீவஸ்தவா.
“ரஷ்ய எரிசக்தி நிறுவனம் ரோஸ்னெஃப்ட், இந்தியாவின் நயாரா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் அதன் பங்குகளை விற்க திட்டமிட்டிருந்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்குப் பிறகு, இந்த திட்டம் அப்படியே நிறுத்திவைக்கப்படக்கூடும்,” என ப்ளூம்பர்க் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, நயாராவில் இருக்கும் தனது பங்குகளை விற்க ரோஸ்னெஃப்ட் நிறுவனம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது,
டீசல் உள்ளிட்ட இந்திய எரிபொருள் வழக்கமாக விற்பனை செய்யப்படும் ஐரோப்பிய சந்தையில் அதன் வணிகம் அபாயத்திற்குள்ளாகலாம் என்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகள், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அதன் போட்டியாளரின் பங்குகளை வாங்குவதை கடினமாக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா தொடர்பாக இந்தியாவின் மீது அதிகரிக்கும் கடுமை
“நயாரா தினசரி 400,000 பேரல் உற்பத்தித் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதுடன் அதற்கு இந்தியா முழுவதும் சுமார் 7000 விற்பனை நிலையங்கள் உள்ளன. அதன் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலேயே அது ஒரு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையையும் அமைத்து வருகிறது. உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகமான ரிலையன்ஸ் ஜாம்நகர் பிராசசர் நயாராவின் வதினார் தொழிற்சாலையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.”
இந்த மொத்த விவகாரம் குறித்து நயாராவோ ரிலையன்ஸோ எதுவும் தெரிவிக்கவில்லை, ஆனால் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை கண்டித்துள்ளது.
“எந்த ஒருதலைப்பட்சமான தடையையும் இந்தியா ஏற்றுக்கொள்வதில்லை. நாங்கள் ஒரு பொறுப்பான நாடு, எங்களது சட்டப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். எரிசக்தி பாதுகாப்பு மிக முக்கியம் மற்றும் அது எங்கள் குடிமக்களின் அடிப்படைத் தேவை என இந்திய அரசு கருதுகிறது. எரிசக்தி வர்த்தகத்தில் இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியா ஐக்கிய நாடுகளின் தடைகளை மதிக்கிறது, அதனால்தான் இதை ஒருதலைப்பட்சமான தடை என சொல்கிறது, ஆனால் கண்டனம் தெரிவிப்பதை தவிர இந்தியாவால் எதுவும் செய்யமுடியாது. ஐரோப்பா தொடர்ந்து தனது சந்தையை மூடிவருகிறது. எஃகு விவகாரத்திலும் இதுவேதான் நடந்தது. ஐரோப்பாவிற்கு இந்தியாவின் எரிசக்தி ஏற்றுமதியும் தொடர்ந்து குறைந்து வருகிறது,” என்கிறார் அஜய் ஶ்ரீவஸ்தவா.
தடைகள் காரணமாக தனது வருவாயை சொந்த நாட்டுக்கு அனுப்ப முடியாத நிலை இருப்பதால்தான் ரோஸ்னெஃப்ட் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற விரும்புவதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பர்க் எழுதியுள்ளது.
எகனாமிக் டைம்ஸ் செய்தி ஒன்றின்படி, ரோஸ்னெஃப்ட் செளதி அரேபியாவின் அரசு நிறுவனமான அராம்கோ உட்பட வாங்க விருப்பமுள்ள பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ரோஸ்னெஃப்டும் அதன் கூட்டாளிகளும் நயாராவை 2017ஆம் ஆண்டு எஸ்ஸார் குழுமத்திடமிருந்து 12.9 பில்லியன் டாலருக்கு வாங்கின.
ரஷ்ய எண்ணெய்யை மூன்றாம் நாடு மூலம் இறக்குமதி செய்வதையும் ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ளது. இது ஐரோப்பாவிற்கு இந்தியாவின் எரிபொருள் ஏற்றுமதியை பாதிப்பது உறுதி.
கெப்லர் தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் அதற்கு முந்தைய ஆண்டைவிட இரட்டிப்பாகியிருந்தது. 2023ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக இரண்டு லட்சம் பேரலுக்கு மேல் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு