பட மூலாதாரம், Getty Images
இணைய உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறி, கூகுள் தனது புதிய அம்சத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இணைய தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை, AI ஓவர்வியூ என்ற வசதியின் மூலமாக கூகுள் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து தற்போது AI மோட் (AI Mode) என்ற புதிய வசதியை கூகுள் கொண்டு வந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் பயனர்களுக்கு ஒரு விருப்ப அம்சமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, தற்போது இந்தியாவில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி, மக்கள் இணையத்தைப் பயன்படுத்தும் விதத்தையே மாற்றியமைக்கப் போவதாக கூகுள் கூறுகிறது. இந்தப் புதிய வசதி, கூகுள் தேடுபொறியின் செயல்பாட்டில் கொண்டு வந்துள்ள மாற்றம் குறித்து அனைவரும் மகிழ்ச்சி அடையவில்லை.
கூகுள் கிட்டத்தட்ட இணைய உலகையே அழித்துவிடும் என்று பலரும் அஞ்சும் அளவுக்கு இந்தப் புதிய வசதியில் என்ன இருக்கிறது? AI மோட் என்றால் என்ன? அது பயனர்களுக்கு எவ்வாறு உதவப் போகிறது? இங்கு விரிவாகக் காண்போம்.
கூகுள் – இணையதளங்கள் இடையிலான உறவு
கடந்த 30 ஆண்டுகளாக, கூகுள் நிறுவனமும் அதில் செயல்படும் இணையதளங்களும் ஓர் எளிமையான, பேசப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. அதாவது, இணையதளங்கள் உள்ளடக்கங்களை வழங்குகின்றன. அதற்குப் பதிலாக, கூகுள் அவர்களுக்குப் பார்வையாளர்களை அனுப்புகிறது.
அதாவது, பயனர்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் ஏதாவது ஒரு தகவலைத் தெரிந்துகொள்ளத் தேடுகிறார்கள். அப்படித் தேடும்போது, அது தொடர்பான இணையதளங்களின் இணைப்புகளை கூகுள் தனது தேடுபொறியில் காட்சிப்படுத்துகின்றன.
பயனர்கள் அந்த இணைப்புகளை கிளிக் செய்து, தங்களுக்கு தேவையான, ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்குச் செல்கிறார்கள். அதாவது, இணைப்புகளை கிளிக் செய்து, இணையதளத்திற்குள் சென்று, கட்டுரையைப் படிப்பது, காணொளிகளைப் பார்ப்பது ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.
இதைத்தான் இணைய போக்குவரத்து எனக் குறிப்பிடுகின்றனர். பல இணையதளங்கள் உயிர்ப்புடன் இருப்பதற்கு, விளம்பரங்கள், சந்தாக்கள், தயாரிப்பு விற்பனை எனப் பலவற்றைச் செய்கிறார்கள். அதோடு, கூகுள் தேடலில் கிடைக்கும் கிளிக்குகள் இல்லையெனில், பெரும்பாலான இணையதளங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கே போராட வேண்டியிருக்கும்.
ஆனால், இந்த AI மோட், இந்த மாதிரியான செயல்பாடுகளை மாற்றியமைத்து, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அதுவே பதில்களை வழங்கினால், இணையதளங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்களின் அளவு வெகுவாகக் குறைந்துவிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.
ஹவுஸ்ஃப்ரெஷ் இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர் கிசெல் நவரோ, கூகுள் தனது அடிப்படைவிதிகளை மாற்றுவதாகவும் அதனாலேயே பல இணைய வெளியீட்டாளர்கள் கவலையில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
கூகுள் AI மோட் என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
கூகுள் தனது தேடுபொறியில் அறிமுகப்படுத்தும் AI மோட் என்பது இதுவரை பயன்படுத்தி வந்த ஓவர்வியூ வசதியின் ஒரு நீட்சிதான். ஆனால், அதைவிட இது மேம்பட்டது.
இது, பயனர்களின் கேள்விகளுக்கு ஏற்ற இணைப்புகளை வழங்குவதற்குப் பதிலாக, அவற்றில் இருந்து தகவல்களைத் தொகுத்து, அந்தக் கேள்விக்கான பதிலைத் தானே ஒரு கட்டுரையாக வழங்கிவிடுகிறது.
ஓர் எடுத்துக்காட்டுடன் இதைப் புரிந்துகொள்வோம். நீங்கள் கூகுள் தேடுபொறியில், “மஞ்சளின் நன்மைகள் என்ன?” என்று ஒரு சந்தேகத்திற்கு விடை தேடுவதாகக் கற்பனை செய்துகொள்வோம்.
கடந்த காலத்தில், கூகுள் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பல்வேறு இணையதளங்கள் வெளியிட்ட கட்டுரைகளுக்கான இணைப்புகளைப் பட்டியலிடும். அந்தக் கட்டுரைகளை கிளிக் செய்து, நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
இப்போது, சமீபத்திய சில காலமாக இருக்கும் AI ஓவர்வியூ வசதி ஒரு படி மேலே சென்று, உங்கள் கேள்விக்கான பதிலை ஒரு குறுங்கட்டுரையாக்கி தொடக்கத்தில் அளிக்கும். அதனுடன், அந்தத் தகவல்கள் எடுக்கப்பட்ட இணையதளங்களின் முகவரிகளை இணைத்துவிடும். இதன்மூலம், நீங்கள் உங்கள் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதோடு, தேவைப்பட்டால் அந்த இணைய முகவரிகளை கிளிக் செய்து விரிவாகவும் படித்துக் கொள்ளலாம்.
ஆனால், இப்போது அறிமுகமாகியுள்ள AI மோட் வசதியைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவே உங்கள் கேள்விக்கான முழு பதிலையும் வடிவமைத்து வழங்கிவிடுகிறது. அதாவது, சாட்ஜிபிடி தளத்தில் நீங்கள் கேள்வி கேட்டால், அது எப்படி முழுமையாகப் பதில் வழங்குகிறதோ, அந்த மாதிரியில் வழங்குகிறது.
கூகுள் இந்த அம்சத்தை மே 20, 2025 அன்று அதன் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் அறிவித்தது. இந்தப் புதிய வசதி குறித்துப் பேசிய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை இணையத்தின் தேடல் செயல்முறை செயல்படக்கூடிய விதத்தையே இது முற்றிலுமாக மறுபரிசீலனை செய்வதாகக் குறிப்பிட்டார்.
AI மோட் எவ்வாறு செயல்படுகிறது?
பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு முதல் கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி வரும் அனைவருமே AI ஓவர்வியூ என்ற வசதியைக் கண்டிருப்பீர்கள். அதாவது, சில தேடல் முடிவுகள் கூகுளில் காட்சிப்படுத்தப்படும்போது, அதன் தொடக்கத்தில் குறுங்கட்டுரையாக, மேலோட்டமாக, தேடப்படும் கேள்விக்கான பதில் வழங்கப்படும்.
ஆனால், அவை வெறும் குறுகிய பதில்களே. அதோடு, விரிவாகத் தெரிந்துகொள்ளத் தேவையான இணைப்புளும் அதற்குக் கீழே பட்டியலிடப்படும்.
ஆனால், AI மோட் அப்படியல்ல. அது நீங்கள் கேட்கும் கேள்விக்கான முழு பதிலையும் ஒரு கட்டுரையாக, சாட்ஜிபிடியை போலத் தொகுத்து வழங்கிவிடுகிறது. செயற்கை நுண்ணறிவு நீங்கள் கேட்கும் கேள்வியைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கிறது. அது தொடர்பான சிறந்த தகவல்களைத் தேடுகிறது. பின்னர் அனைத்து தகவல்களையும் தொகுத்து, படிக்க எளிதான பதிவாக மாற்றிக் காட்டுகிறது.
இதனால் பயனர்கள் தேடும் கேள்விக்கான பதிலைப் படிக்க வேறு எந்த இணையதளத்திற்கு உள்ளேயும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த வசதி, நாம் மேலே, இணையம் செயல்படுவதற்கான அடிப்படைக் கட்டமைப்பையே கிட்டத்தட்ட அசைத்துப் பார்ப்பதாக வெளியீட்டாளர்கள் கவலை கொள்கின்றனர்.
“கூகுளின் இந்த AI மோட் வசதி, இணையதளங்களுக்கு செல்லும் கிளிக்குகளின் (பயனர்களின்) எண்ணிக்கையைப் பாதியாக்கிவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இணையதள வெளியீட்டாளர்களை இது பெரியளவில் பாதிக்கக்கூடும்,” என்கிறார்.
ஆனால், இந்த பயம் தேவையற்றது என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது. அதோடு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் புதிய வசதியை ஒரு விருப்ப அம்சமாக அமெரிக்காவில் கூகுள் அறிமுகப்படுத்தியது. அப்போது பேசிய கூகுள் தேடல் பிரிவின் தலைவர் லிஸ் ரீட், “இது வெறும் ஆரம்பம்தான்” என்றார்.
மேலும், “இதுதான் கூகுள் தேடலின் எதிர்காலம்” என்றார். எனவே இப்போதைக்கு இந்த வசதியைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை பயனர்கள் தேர்வு செய்யலாம் என்றாலும், எதிர்காலத்தில் இதைத் தனது தேடுபொறியின் முக்கிய அம்சமாக கூகுள் மாற்றக்கூடும் என்று வெளியீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
AI மோட் வசதியை கண்டு இணைய வெளியீட்டாளர்கள் அஞ்சுவது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
வெளியீட்டாளர்கள், இணையதள உரிமையாளர்கள், டிஜிட்டல் வணிகங்கள் ஆகியவை கூகுள் தேடுபொறியின் இணைய போக்குவரத்தைப் பெரியளவில் சார்ந்துள்ளன.
அவர்கள் இலவசமாக உள்ளடக்கங்களை உருவாக்கி வெளியிடுகிறார்கள். கூகுள் அதை பயனர்களுக்கு வழங்குகிறது. மக்கள் அதை கிளிக் செய்கிறார்கள். இந்தச் செயல்முறையின் மூலமாக இணைய கட்டமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்த அடிப்படைக் கட்டமைப்பை AI மோட் அச்சுறுத்துகிறது. பயனர்கள் கூகுளின் செயற்கை நுண்ணறிவில் இருந்து நேரடியாகப் பதிலைப் பெற்றுக்கொண்டால், அந்தப் பதில்களுக்கு அது பயன்படுத்திய, இணையத்தில் பதிவேற்றப்படும் உண்மையான உள்ளடங்களை உருவாக்கிய இணையதளங்களுக்கு அவர்கள் செல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அதன் விளைவாக அந்த வெளியீட்டாளர்களுக்கு பார்வையாளர்கள் வரத்து குறையும், விளம்பர வருவாய் குறையும். இது பல சுயாதீன இணையதளங்களின் சரிவுக்கு வழிவகுக்கும் என்று இணைய வெளியீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கூகுள் தங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி, இழப்பின்றி லாபம் ஈட்டும் என்று வெளியீட்டாளர்கள் கூறுகின்றனர். “இது திருட்டுக்கான ஒரு வரையறை. அவர்கள் எங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு ஈடாக எங்களுக்கு எதுவுமே கிடைக்காது,” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார் செய்தி/ஊடக கூட்டமைப்பின் தலைவர் டேனியல் காஃபி.
ஆனால், இந்த அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூகுள் வலியுறுத்துகிறது. கூகுளின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துப் பேசியபோது, “AI மோட் மக்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை விரிவுபடுத்துகிறது. கூகுள் செயற்கை நுண்ணறிவு தினசரி கோடிக்கணக்கான பயனர்களை இணையதளங்களுக்கு அனுப்புகிறது” என்று தெரிவித்தார். ஆனால், இந்தக் கூற்றுகளை ஆதரிக்கக்கூடிய தரவுகளை அந்த நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.
– பிபிசியின் மூத்த தொழில்நுட்ப செய்தியாளர் தாமஸ் ஜெர்மைனின் கட்டுரையில் இருந்து இந்தத் தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு