பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது டெஸ்ட் போட்டி பிரிமிங்ஹாமில் நாளை(ஜூலை2ம் தேதி) தொடங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் போட்டியில் வெற்றிக்கு உதவிய அதே வீரர்களோடு, மாற்றமில்லாமல் 2வது டெஸ்டிலும் களமிறங்குகிறது. ஆனால், இந்திய அணி இதுவரை ப்ளேயிங் லெவனை வெளியிடாமல் சஸ்பென்சாக வைத்திருப்பது ஏன் எனத் தெரியவில்லை.
பிரம்மாஸ்திரம் பும்ராவை விளையாட வைக்கலாமா அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டிக்கு இடம் கிடைக்குமா என கணிப்புகள் வந்தாலும் இதுவரை உறுதியான அறிவிப்பு ஏதும் நிர்வாகத்திடம் இருந்து இல்லை. டாஸ் நிகழ்வுக்குப்பின்புதான் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஏமாற்றாத இளம் அணி
விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத, நிலையில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் டெஸ்டில் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். ரிஷப் பந்த் இரு சதங்கள், கேப்டன் கில், ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் சதம் ஆகியவை மனநிறைவை அளித்தன.
ஆனால், இவர்கள் தவிர இந்திய அணியில் நடுவரிசை பேட்டர்களின் பங்களிப்பு குறிப்பாக கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பங்களிப்பு ஏமாற்றத்தை அளித்தது. பந்துவீச்சிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை. முதல் இன்னிங்ஸில்தான் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததேத் தவிர 2வது இன்னிங்ஸில் பெரிதாக பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை.
வேகப்பந்துவீச்சில் பும்ரா தவிர பிரசித் கிருஷ்ணா, ஷர்துல்,சிராஜ் ஆகியோரின் எக்னாமி ரேட், விக்கெட் வீழ்த்தும் திறன் கவலைக்குரியதாக முதல் டெஸ்டில் இருந்தது. ஷர்துல் தாக்கூர் அணியில் கொண்டுவந்ததே கேள்விக்குரியதாக மாறிவிட்டது.
பட மூலாதாரம், Getty Images
கேப்டன்ஷிப் மீதான கேள்வி
இளம் இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவு ஸ்திரத்தன்மையுடன் இருந்தாலும், பந்துவீச்சில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் கேப்டன் ஷுப்மன் கில், பந்துவீச்சாளர்களை எவ்வாறு கையாள வேண்டும், எந்த சூழலில் எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது, புதிய பந்தில் யாரை பந்துவீசச் செய்வது, யாருக்கு அதிக ஓவர்கள் வழங்குவது என்பதில் முடிவெடுப்பதில் இன்னும் தடுமாற்றத்தைச் சந்திக்கிறார்.
இந்த சூழலில் 2வது டெஸ்ட் போட்டி நாளை பிர்மிங்ஹாமில் தொடங்குகிறது. இந்திய அணியில் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று துணைப் பயிற்சியாளர் ரேயன் டான் டஸ்சே தெரிவித்துள்ளார். ஆனால், எந்த வகையான மாற்றம் என்பதில்தான் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
புதிய வரலாறு படைக்குமா?
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி விளையாடும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி தோற்றுள்ளது.
2011ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் இன்னிங்ஸ் 242 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது, 2018ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் 18 ரன்களில் இந்திய அணி தோற்றது. 2022ம் ஆண்டில் பும்ரா கேப்டன்ஷிப்பில் நடந்த போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 1986ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணி டிரா செய்துள்ளது.
பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து எப்போதுமே இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து பதிலடி கொடுத்தாலும் இதுவரை இந்த மைதானத்தில் வெற்றிக்கொடி நாட்டியதில்லை.
பிரிம்மிங்ஹாமில் ஒருவேளை 2வது டெஸ்டில் இந்திய அணி வென்றால் அது வரலாற்று வெற்றியாக, இந்த நூற்றாண்டிலேயே முதல் வெற்றியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
‘பாஸ்பால்’ உத்தியில் தொடர் வெற்றி
பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக பிரெண்டம் மெக்கலம் வந்தபின் பாஸ்பால் உத்தியை கையில் எடுத்து தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக ஸ்டோக்ஸ் வந்தபின், உள்நாட்டில் நடந்த 21 டெஸ்ட் போட்டிகளில் 16 டெஸ்ட்களில் இங்கிலாந்து வென்றுள்ளது.
கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 4 வெற்றிகளையும், ஒரு போட்டியை டிராவும் செய்துள்ளது. நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடர்களை வென்று, ஆஷஸ் டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்திருக்கிறது இங்கிலாந்து அணி. ஆஷஸ் தொடரில் மட்டும் இங்கிலாந்து பேட்டர்கள் 3938 பந்துகளைச் சந்தித்து 2920 ரன்கல் சேர்த்தனர். 85 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 93 விக்கெட்டுகளை வீழ்த்தியது.
ஆஷஸ் தொடரில் இருந்தே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சில் 41% “குட்லென்த்”தில்(6முதல்8மீட்டருக்குள்) வீசிவருகிறார்கள். பேட்டர்களும் சராசரியாக 39 ரன்களும், ஓவருக்கு 3.69 ரன்களும் சேர்த்து வருகிறார்கள். இது ஆஷஸ் மட்டுமல்ல, அடுத்து நடந்த நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கைத் தொடர்களிலும் இங்கிலாந்து வீரர்களின் நிலைத்தன்மை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சீராக இருந்து வருகிறது.
இங்கிலாந்து அணி வோக்ஸ், ஸ்டோக்ஸ், கார்ஸ், டங்க் ஆகிய இளம் பந்துவீச்சாளர்களை வைத்துதான் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களும் இரு இன்னிங்ஸிலும் 47% பந்துகளை “குட்லென்த்தில்” வீசியதாக கிரிக்இன்ஃபோ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதல் டெஸ்டில் மைதானம் தட்டையாக இருந்தபோதிலும் அதில் ஸ்விங் செய்த சதவீதமும் இந்திய அணியைவிட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிகமாகவே பந்தை திருப்பினர்.
ஒட்டுமொத்தத்தில் பாஸ்பால் உத்தியைக் கையாண்டு இங்கிலாந்து தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. அதனால்தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் அந்த அணி செய்யாமல் 2வது டெஸ்டில் விளையாடுகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இணைந்தபோதிலும் அவரை 2வது டெஸ்டில் பயன்படுத்தாமல் மாறாத ப்ளேயிங் லெவனில் இங்கிலாந்து களமிறங்குகிறது
பேட்டிங்கில் பிளங்கெட், போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ஸ்மித் என பேட்டிங்கிலும் வலுவாக இருக்கிறார்கள். இதில் டெய்லெண்டர்கள் வோக்ஸ், கார்ஸ் வரை சிறப்பாக பேட்செய்வது அந்த அணிக்கு பெரிய பலமாகும். அதனால்தான் முதல் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களால் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர்.
டெஸ்ட் போட்டியில் கூட பாஸ்பால் உத்தியில் வேகமாக ரன்களைச் சேர்க்கும் விதத்தில் இங்கிலாந்து பேட்டர்கள் பேட் செய்வது இந்திய அணிக்கு பெரிய சவாலாகும். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கு இணையாக முதல் இன்னிங்ஸிலும் இங்கிலாந்து பேட்டர்கள் பேட் செய்தனர், 2வது இன்னிங்ஸிலும் 370 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்து வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த பேட்டிங் வரிசையை உடைக்க ஆடுகளம், காலநிலை சாதகமாக இல்லாதபட்ச்தில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சவாலாகவே 2வது டெஸ்ட் போட்டி இருக்கும்.
‘ப்ளேயிங் லெவனில் சஸ்பென்ஸ்’
இந்திய அணியின் ப்ளேயிங்கில் லெலவனில் யார் இடம் பெறுவார்கள் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டாலும், அவரை பயன்படுத்துவது என்பது கடைசி நேரத்தில்தான் முடிவாகும்.
ஏனென்றால் 3 டெஸ்டில் மட்டுமே பும்ரா விளையாட இருப்பதால் அவருக்கு சுமையைக் குறைக்கும் வகையில் சரியாக பயன்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்துவரக்கூடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ராவின் பங்களிப்பு தேவை என்பதையும் உணர்ந்துள்ளது நிர்வாகம்.
ஆதலால், பும்ரா அணியில் இடம் பெறுவது என்பது கடைசி நேரத்தில் ஆடுகளத்தின் தன்மை, காலநிலையைப் பொருத்துதான் முடிவாகும். அதேநேரம், வேகப்பந்துவரிசையில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
கடந்த டெஸ்டில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஷர்துல் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக நிதிஷ் ரெட்டி அழைக்கப்படலாம். நிதிஷ் ரெட்டி ஆஸ்திரேலியாவில் சதம் அடித்து, பந்துவீச்சிலும் ஓரளவு 5வது பந்துவீச்சாளர் பணியை சிறப்பாகச் செய்தார் என்பதால் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
நிதிஷ் ரெட்டியை அணிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் நடுவரிசை பேட்டிங் இன்னும் ஸ்திரமாகும்.
எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் தட்டையானது, பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும், கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். பும்ரா அல்லது கருண் நாயர் இல்லாத பட்சத்தில் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வரலாம்.
சுந்தர் வருகையால் பேட்டிங் வரிசையும் ஸ்திரமாகும், அதேநேரம் கூடுதலாக சுழற்பந்துவீச்சாளர் கிடைக்கக்கூடும். மற்றவகையில் இந்திய அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசித் கிருஷ்ணா, சிராஜ் ஆகிய இருவரும் தங்களின் எக்கானமி ரேட்டை குறைக்கும் வகையில் 2வது டெஸ்டில் பந்துவீசுவது அவசியமாகும். கடந்த டெஸ்டில் இருவரும் ஓவருக்கு 6 ரன்ரேட்டை சராசரியாக விட்டுக்கொடுத்தனர்.
ஐபிஎல் தொடரில்கூட இருவரும் இந்த அளவு ரன்களை வழங்கியதில்லை. கடந்த டெஸ்டில் வெற்றி இந்திய அணியிடம் கைநழுவி சென்றதற்கு பந்துவீச்சில் சொதப்பியது முக்கியக் காரணமாகும்.
அதேசமயம், பீல்டிங்கிலும் கடந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் மோசமாக செயல்பட்டு பல கேட்சுகளை கோட்டைவிட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு டெஸ்டில் அதிக கேட்சுகளை தவறவிட்ட அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் வந்தது.
ஜெய்ஸ்வால், மட்டும் 3 கேட்சுகளை கோட்டைவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக தீவிரமான ஸ்லிப் கேட்ச் பயிற்சியில் ஜெய்ஸ்வால் ஈடுபட்டார். இந்த டெஸ்டில் பீல்டிங்கில், குறிப்பாக கேட்ச் பிடிப்பதில் கூடுதல் கவனத்தை இந்திய வீரர்கள் செலுத்துவது அவசியமாகும்.
ஆடுகளம் எப்படி?
பிர்மிங்ஹாமில் இருக்கும் எட்ஜ்பாஸ்டன் மைதானம் வரலாற்று ரீதியாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக் கூடியது. இங்கு நிலவும் காற்று, காலநிலையால் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய முடியும். ஆனால், இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக மாறிவிட்டன.
டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆடுகளத்தில் இருக்கும் புற்கள் வெட்டி குறைக்கப்படும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று 2வது டெஸ்ட் போட்டியும் இரு அணிகளின் பேட்டர்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கக்கூடும்.
முதல் இருநாட்களில் காலநிலையை நன்கு பயன்படுத்தினால் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய இயலும், நன்கு பவுன்ஸ் செய்யலாம். அதிலும் டியூக் பந்தில் தொடக்கத்தில் 30 ஓவர்கள் வரை டாப்ஆர்டர் பேட்டர்கள் நிதானமாக பந்து சற்று தேயும் வரை ஆடுவது அவசியமாகும்.
ஆனால், பெரும்பாலும் 3வது நாளில் இருந்து ஆடுகளம் வறண்டு இருக்கும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்கள் கை ஓங்கக்கூடும். குளிர்ந்த காலநிலை, மழை சூழல், காற்றின் வேகம் ஆகியவற்றைப் பொருத்து வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தும் தன்மை மாறக்கூடும்.
முதல் நாளிலும், கடைசி நாள் ஆட்டத்திலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடைசி நாளில் ஆடுகளத்தில் இருக்கும் வெடிப்புகள், பிளவுகளால் பந்து திடீரென பவுஸ்ஆகலாம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதுதான் இந்த மைதானத்தில் சிறந்ததாகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு