பட மூலாதாரம், https://www.facebook.com/zahed.urrahman.77
படக்குறிப்பு, வங்கதேசப் பிரதமரின் ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்
எழுதியவர், ரகிப் ஹஸ்னத்
பதவி, பிபிசி வங்கமொழி சேவை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான், டெல்லி விமான நிலையத்தில் குடிவரவு தொடர்பான “பிரச்னைகளை” எதிர்கொண்ட பிறகு தனது நாட்டுக்குத் திரும்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்துப் பேசிய அவர், “இது எதிர்பாராத ஒரு சம்பவம். துரதிருஷ்டவசமானதும் கூட. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
திங்கட்கிழமை மதியம் ஊடகங்களுடனான சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
பின்னர், அன்று பிற்பகல், டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையகத்தின் தூதரான பவன் குமார் பாதேவை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் அழைத்தது.
அவர் தற்போது டாக்காவில் இந்தியாவின் தற்காலிக உயர் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
வங்கதேச பிரதமரின் ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்தடைந்தார்.
ஆனால், டெல்லி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் அவரை நீண்ட நேரம் தடுத்து வைத்தனர். பின்னர் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் கோபத்துடன் டாக்காவுக்குத் திரும்பினார்.
இருப்பினும், விமான நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் முயற்சியால் அவர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் டெல்லிக்குள் நுழைவதற்குப் பதிலாக, அவர் டாக்காவுக்குத் திரும்ப முடிவு செய்து, ஒரே இரவில் கொழும்புக்கு (இலங்கை) சென்றார். பின்னர் திங்கள்கிழமை மதியம் ஜாஹித் உர் ரஹ்மான் டாக்கா சென்றடைந்தார்.
டாக்காவைத் தளமாகக் கொண்ட வெளியுறவு அமைச்சகத்தின் பல்வேறு ஆதாரங்களில் இருந்து பிபிசி வங்கமொழி சேவை இந்தத் தகவலைப் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பிபிசி வங்கமொழியின் ஜாஹித் உர் ரஹ்மானைத் தொடர்பு கொண்டபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்த நிகழ்வின் பின்னணி என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வங்கதேசப் பிரதமரின் ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான், டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்த பின்னர் கொழும்பு வழியாக வங்கதேசம் திரும்பினார் (சித்தரிப்புப் படம்).
பிரதமரின் தகவல் ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரக அதிகாரிகள் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களிலும், வங்கதேசத்தின் உயர் மட்டங்களிலும் ஜாஹித் உர் ரஹ்மான் தொடர்ந்து தொடர்பு கொள்ளப்பட்டார். அவர் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார் என்று இந்திய குடிவரவுத்துறை அவருக்குத் தெரிவித்தது, ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.
நீண்ட நேரம் காத்திருந்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், ரஹ்மான் விமான நிலையத்திலிருந்து திரும்ப முடிவு செய்ததாக, டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதன் பிறகு, கொழும்பு வழியாக ஜாஹித் உர் ரஹ்மான் தனது நாட்டுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை வங்கதேச தூதரகம் செய்தது. அவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் டெல்லியிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டார்.
மறுநாள் கொழும்பில் இருந்து அவர் தனது நாட்டுக்குத் திரும்பினார்.
அதிருப்தி தெரிவித்த வங்கதேசம்
பட மூலாதாரம், Screenshot
படக்குறிப்பு, டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்
திங்கட்கிழமை செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான், “இது குறித்து வெளியுறவு அமைச்சகம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறினார்.
வங்கதேச வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷாமா ஒபாய்டும் இந்த விவகாரம் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தச் சம்பவம் நிச்சயமாக வரவேற்கத்தக்கதல்ல. இப்படி ஒரு சம்பவத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றார்.
இதற்கிடையில், டாக்காவில் உள்ள இந்திய தற்காலிக தூதர் பவன் குமாருக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி, நடந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்றை வழங்கியது.
திங்கள்கிழமை மதியம் 3 மணிக்கு அவர் சம்மன் அனுப்பப்பட்டு அழைக்கப்பட்டதை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாஹிதுல் கரீம் பிபிசி வங்கமொழி சேவையிடம் உறுதிப்படுத்தினார்.
ஜாஹித் உர் ரஹ்மான் யார்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்வதற்கு முன்பே, ஜாஹித் உர் ரஹ்மானின் யூடியூப் சேனல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. படத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்திய பிரதமர் மோதி
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் வீழ்ந்தது. அவரது அரசாங்கம் வீழ்வதற்கு முன்பே ஜாஹித் உர் ரஹ்மானின் யூடியூப் சேனல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தின் போது தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் மூலம் ரஹ்மான் பிரபலமானார்.
கிடைத்த தகவல்களின் படி, அவர் தனது நிகழ்ச்சியில் இந்திய அரசாங்கத்தையும் பாஜகவையும் விமர்சித்ததற்காகவும் அறியப்பட்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமர் தாரிக் ரஹ்மான் அவரை இணையமைச்சர் தகுதியுடன் கொள்கை மற்றும் வியூகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமித்தார்.
பேராசிரியர் முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இந்தியா-வங்கதேச உறவுகள் கணிசமாக மோசமடைந்திருந்தன.
ஆனால் வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் ஆட்சிக்கு வந்த பிறகு, இரு நாடுகளும் பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்தன.
இருப்பினும், சமீப காலங்களில், வங்கதேசத்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களை எல்லைக்கு அப்பால் அனுப்ப இந்தியா முயற்சிப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.