பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது குடியுரிமைக்கான இறுதிச் சான்றிதழ் அல்ல என்ற செய்தி புதன்கிழமை மாலை முதல் இந்திய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, பல இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டு வருகின்றன.
“இந்திய பாஸ்போர்ட்டின் நோக்கம் மக்கள் வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கும் பிரதேசங்களுக்கும் பயணம் செய்ய உதவுவதே ஆகும். எனவே, அதனை குடியுரிமை உரிமைகளை நிலைநாட்டப் பயன்படுத்தப்படும் ஆவணங்களுடன் ஒப்பிடக்கூடாது ” என்று வெளியுறவு அமைச்சக அதிகாரி கூறியதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின் படி , “இந்திய தொழிலாளர்களை உலகளாவிய பொருளாதாரத்துடன் இணைப்பதில் பாஸ்போர்ட்டின் பங்கை வலியுறுத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், வரும் மாதங்களில் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானுடனான பரிமாற்றங்களை அரசாங்கம் மேலும் துரிதப்படுத்தும் என்று கூறினர்.
இந்த தொழில்மயமான பொருளாதாரங்களில் இந்தியக் குடிமக்களுக்குப் பாதுகாப்பான வேலைவாய்ப்புக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.”
தி இந்து செய்தியின் படி, இந்திய பாஸ்போர்ட்டை குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணமாகப் பார்க்கக் கூடாது என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், “பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம், அது குடியுரிமைக்கான சான்றிதழ் அல்ல. கொள்கையளவில், பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது, இதுதான் மற்ற ஆவணங்களிலிருந்து அதை வேறுபடுத்துகிறது.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது பாஸ்போர்ட் நீங்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தினாலும், அதை குடியுரிமைக்கான இறுதி ஆதாரமாகக் கருத முடியாது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து எழுப்பப்படும் கேள்விகள்
“வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்திய பாஸ்போர்டைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வெளியுறவு அமைச்சக அதிகாரி இதனைத் தெரிவித்தார்” என்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய சிப் அடிப்படையிலான இ- பாஸ்போர்ட்டுகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதை அதிகரிக்கவும், மோசடி அபாயத்தைக் குறைக்கவும், பயோமெட்ரிக் தரவு போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா தற்போது சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை வழங்கத் தொடங்கியுள்ளது, இவை பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க இருப்பதாகக் கருதப்படுகின்றன.
இருப்பினும், சில சமயங்களில், நீதிமன்றங்கள் கூட குடியுரிமையை நிரூபிக்கும் இறுதி ஆவணமாக பாஸ்போர்ட்டை கருதவில்லை.
2013 ஆம் ஆண்டில், ஒரு நபர் மற்றும் மூன்று குற்றவாளிகள் தங்களது பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டை மூலம் தங்களது குடியுரிமையை நிரூபிக்க முயன்றனர், ஆனால் அவர்களுக்கு நீதிமன்றத்திலிருந்து எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
இந்தச் செய்தி 2013 செப்டம்பர் 3 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியானது.
“குறிப்பாக நீங்கள் ஜூலை 1, 1987க்குப் பிறகு பிறந்திருந்தால், நீங்கள் ஓர் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டை ஆகியவை மட்டுமே போதுமானதாக இருக்காது” என்று அந்த செய்தியில் டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதியிருந்தது.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, தங்களது இந்திய அடையாளத்தை நிரூபிக்க பாஸ்போர்ட்டுகள் (பின்னர் ரத்து செய்யப்பட்டன), ஆதார் அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை சமர்ப்பித்த ஒரு நபர் மற்றும் மூன்று குற்றவாளிகளுக்கு நிவாரணம் வழங்க பம்பாய் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஒரு பாஸ்போர்ட் இந்திய குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை என்றால், வேறு எதுதான் ஆதாரம் என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் பிரிவு 5 இன் கீழ், பாஸ்போர்ட் அதிகாரி விண்ணப்பத்தைப் பரிசீலித்து, தேவையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே பாஸ்போர்ட்டை வழங்க முடியும்.
விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகன் அல்ல என்றால், அவருக்கு பாஸ்போர்ட் மறுக்கப்படும் என்று பிரிவு 6(2)(a) தெளிவாகக் கூறுகிறது.
பிரபல பாடலாசிரியரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாவேத் அக்தர் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், “பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல, அது வெறும் பயண ஆவணம் மட்டுமே என்று வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
அப்படியா? இந்தியக் குடியுரிமை பற்றி அரசாங்கத்துக்கு முழுமையான உறுதி இல்லாதவர்களுக்கும் கூட இந்தப் பயண ஆவணத்தை அரசாங்கம் வழங்குகிறதா?
இந்த வாதம் மிகவும் விசித்திரமாகவும் முரண்பாடாகவும் தோன்றுகிறது” என்று எழுதியுள்ளார்.
இந்திய முன்னாள் சட்ட அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல் எக்ஸ் தளத்தில் இதுகுறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.
“பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம், குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது. அப்படியென்றால் எந்த ஆவணம் தான் குடியுரிமைக்கான ஆதாரம்?
ஒரு பிஎல்ஓ (வாக்குச்சாவடி நிலை அதிகாரி-BLO) எனது குடியுரிமையைக் கேள்வி கேட்கலாம். அவர்கள் எனது வாக்குரிமையை மறுக்கலாம்.
இதன் முடிவு? பாஜக தேர்தலில் வெற்றி பெறும். இப்போது அனைவரின் பார்வையும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மீது உள்ளது” என்று அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
கபில் சிபலின் இந்தப் பதிவை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மறுபதிவு செய்துள்ளார்.
சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) தலைவர் ஆதித்யா தாக்கரேவும் இது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார். தாக்கரே எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.
“பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் நம்பினால், சில அடிப்படை கேள்விகள் எழுகின்றன.
1. பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பு காவல்துறை துல்லியமாக எவற்றையெல்லாம் சரிபார்க்கிறது?
2. இந்தியர் அல்லாதவர்களுக்கும் பயண ஆவணமாக, நமது நாடு இந்திய பாஸ்போர்ட்டுகளை வழங்குகிறதா?
3. இந்திய பாஸ்போர்ட்டுகள் இந்தியர் அல்லாதவர்களுக்கும் வழங்கப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை இந்தக் கூற்று மற்ற நாடுகளின் மனதில் எழுப்பாதா?
பட மூலாதாரம், Getty Images
பாஸ்போர்ட் சட்டம் என்ன சொல்கிறது?
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் நிரூபமா மேனன் ராவ், வெளியுறவு அமைச்சகத்தின் நிலைப்பாடு சட்டப்பூர்வமாகச் சரியானது என்று கருதுகிறார் .
ஏனெனில் பாஸ்போர்ட்டுகள் , பாஸ்போர்ட் சட்டம் 1967 இன் கீழ் வழங்கப்படுகின்றன, அதே சமயம் குடியுரிமை என்பது குடியுரிமைச் சட்டம் 1955 இன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
ஒரு சட்டம் ஆவணத்தை நிர்வகிக்கிறது என்றும், மற்றொன்று சட்டப்பூர்வ அந்தஸ்தை முறைப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிரூபமா மேனன் ராவ் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.
“ஆனால் சட்டமும் பொதுமக்களின் பார்வையும் எப்போதும் ஒத்துப்போவதில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்கு, பாஸ்போர்ட் என்பது மிகவும் நம்பகமான ஆவணமாகும். இது ‘இந்தியக் குடியரசு’ என்ற முத்திரையைத் தாங்கி, ஒரு நபரின் அடையாளத்தை நிறுவுகிறது.
இதனை வழங்குவதற்கு முன் அந்த நபர் எந்த தேசத்தைச் சேர்ந்தவர் என்பதை இந்தியா சரிபார்த்திருக்கும் என்று வெளிநாட்டு அரசாங்கங்கள் நம்புவதால், இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
எனவே, ஒரு பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை என்றால், வேறு எதுதான் ஆதாரம் என்று கேட்பது இயல்பானதுதான்.”
“இதற்கான பதில் சற்றே சிக்கலானது. ஒரு பாஸ்போர்ட் குடியுரிமையை வழங்குவதில்லை. குடியுரிமை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டால், பாஸ்போர்ட் மட்டுமே குடியுரிமையைத் தீர்மானிக்கும் இறுதிச் சட்டப்பூர்வ ஆவணம் அல்ல”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள பல ஜனநாயக நாடுகளைப் போலவே, இந்தியாவும் குடியுரிமைச் சட்டத்துக்கும் பாஸ்போர்ட் சட்டத்துக்கும் இடையே தெளிவான வேறுபாட்டைப் பராமரித்து வருகிறது.
மோசடி, சர்ச்சை அல்லது சட்டவிரோதமாகக் குடியுரிமை பெற்ற சந்தர்ப்பங்களில், குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் அதில் வழங்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் குடியுரிமை தீர்மானிக்கப்பட வேண்டியிருக்கலாம்.
“இதனால் தான், சட்டத்தின் பார்வையில், சாத்தியமான எல்லா சூழ்நிலைகளிலும் ஒரு பாஸ்போர்ட் குடியுரிமைக்கான உறுதியான ஆதாரமாகக் கருதப்படுவதில்லை.
ஆனால், இதன் பொருள் அதன் நடைமுறை முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்பதல்ல. விண்ணப்பதாரர் தகுதியுடையவர் என்று அரசாங்கம் உறுதியாக நம்பும்போது மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சகத்தின் கருத்து இந்த யதார்த்தத்தை மாற்றிவிடாது”என நிரூபமா மேனன் ராவ் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
நீடிக்கும் குழப்பம்
விண்ணப்பதாரர் ஓர் இந்தியக் குடிமகன் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்திய பின்னரே அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சட்டம் கருதுகிறது.
இந்தியர் அல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவதில்லை என்றால், அதை வைத்திருப்பவர்களின் குடியுரிமை ஏன் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
ஊடக செய்திகளின் படி, பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரமாக இருக்க முடியுமே தவிர, அது குடியுரிமைக்கான இறுதிச் சான்றாக இருக்க முடியாது என்று வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
பொய்யான கோரிக்கை அல்லது தவறான தகவல்களின் அடிப்படையில் குடியுரிமை பெறப்பட்டிருந்தால், அந்த பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்ய அல்லது ரத்து செய்ய அரசாங்கத்துக்குச் சட்டப்பூர்வமாக உரிமை உண்டு.
ஆனால் இவ்வளவு பரிசோதனைகளுக்கும் விசாரணைகளுக்கும் பிறகு வழங்கப்படும் பாஸ்போர்ட்டையே குடியுரிமைக்கான சான்றிதழாகக் கருத முடியாது என்றால், பிறகு வேறு எந்த ஆவணம் தான் மிஞ்சியிருக்கிறது?
வாக்காளர் பட்டியல்களின், சமீபத்திய சிறப்பு தீவிர திருத்தத்தின் போது உச்ச நீதிமன்றத்தின் முன் இருந்த முக்கிய சட்டக் கேள்விகளில் ஒன்று, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தகுதியை நிரூபிக்க அவர்களிடம் புதிய ஆவணங்களைக் கோர முடியுமா என்பதாகும்.
வாக்காளர் அடையாள அட்டை ஒரு நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆனால், இது மட்டுமே குடியுரிமைக்கான ஒரு சுயாதீனமான சான்று அல்ல. இருப்பினும், இந்தியக் குடிமக்கள் மட்டுமே வாக்காளர்களாகப் பதிவு செய்ய முடியும்.
வாக்காளர் பட்டியலில் ஒரு நபரின் பெயர் செல்லுபடியாகுமா இல்லையா என்பதைச் சரிபார்க்கும் உரிமையை தேர்தல் ஆணையம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்தக் காரணத்தால், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்தின் விசாரணையின் போது பழைய வாக்காளர் அட்டை வைத்திருப்பது மட்டுமே குடியுரிமை தொடர்பான கேள்விகளுக்கான இறுதி பதிலாகக் கருதப்படவில்லை.
வாக்காளர் அடையாள அட்டையோ அல்லது பாஸ்போர்ட்டோ குடியுரிமைக்கான ஒரு உறுதியான ஆதாரம் இல்லை என்றால், எந்த ஆவணம் குடியுரிமைக்கான இறுதி மற்றும் உறுதியான ஆதாரமாகக் கருதப்படும் என்ற கேள்வியைக் குடிமக்கள் எழுப்புவது இயல்பானது தான்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு